ஷிர்டி சாய் பாபா பகுதி – 18

 

அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்பனே! வந்தாயா? என்று கட்டியணைத்துக் கொண்டார். என் கடிதம் கிடைத்ததா? என்று கேட்டார். எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! என்றார் காகா. உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி. காரணம் இதுதான். அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டார்.  நிர்வாகத்தில் பெரும் சிக்கல். மானேஜர் செய்துவந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. முழுமனதோடு அந்தப் பணியைச் செய்தார். நிரந்தர மானேஜர் செய்த பணி நேர்த்தியை விட, தற்காலிக மானேஜர் செய்த பணியின் நேர்த்தி மேலும் சிறப்பாக இருந்தது!இடர்ப்பாடு ஏற்பட்ட காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வு தரப்பட்டது. பாபாவின் அருளால் கிட்டிய பதவி உயர்வு என நெகிழ்ந்தது காகாவின் உள்ளம்.

அலுவலகத்திலிருந்து காகாவை உடனே மும்பை திரும்புமாறு, முதலாளி ஷிர்டிக்கு அனுப்பிய கடிதம், இரண்டு நாட்கள் கழித்து ஷிர்டியைச் சென்றடைந்ததும், அது பின்னர் காகாவின் மும்பை முகவரிக்கே திரும்ப அனுப்பப்பட்டதும் பிறகு நடந்த சம்பவங்கள். எப்படி மும்பையில் ஒரு தனியார் அலுவலகத்தில் நேர்ந்த சிக்கல், பாபாவுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது? ஏன் தெரிய வராது? கடவுளால் அறிய இயலாத விஷயம் என்று உலகில் ஏதும் உண்டா என்ன? பதவி உயர்வு கிடைத்த பின், காகா ஷிர்டி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது கன்னங்களைத் துடைத்து விட்டார். அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? என்று பரிவோடு கேட்டன பாபாவின் அருள்பொங்கும் விழிகள்….. நாசிக்கைச் சேர்ந்த முலே சாஸ்திரி கைரேகை பார்ப்பதில் கைதேர்ந்தவர். ஆசார அனுஷ்டானங்கள் நிறைந்தவர். பிற மதத்தவரின் பக்கம் அவர் தலைவைத்தும் படுப்பதில்லை. அவர் நாள்தோறும் செய்யும்ஜபதபங்கள் ஏராளமாக உண்டு.
காலஞ்சென்ற கோலப் ஸ்வாமிதான் அவரின் குரு.குரு காலமாகி விட்டால் தான் என்ன? அவரைத் தவிர இன்னொருவரை குருவாக ஏற்க சாஸ்திரியின் மனம் ஒப்பவில்லை. கோலப் ஸ்வாமியின் படத்தை வைத்து, தினமும் வழிபாடு செய்து வந்தார். குருவே சரணம் என அவரது பாதங்களையே மனத்தில் பற்றி வாழ்ந்து வந்தார். நாசிக்கைச் சேர்ந்த மாபெரும் செல்வந்தர் பாபு சாஹேப் பூட்டி. அவர் சாஸ்திரியிடம் கைரேகை பார்ப்பதுண்டு. அவர் ஷிர்டி சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அவரது அழைப்பின் பேரில், அவரைச் சந்திக்க ஷிர்டிக்கு வந்தார் சாஸ்திரி. பூட்டியைச் சந்திப்பதைத் தவிர, சாஸ்திரிக்கு ஷிர்டியில் வேறு வேலை
எதுவுமில்லை. மசூதியில் பாபா என்றொரு மகான் இருப்பதாகப் பலர் சொல்லி அவர் கேட்டதுண்டு. அவரோ ஆசார சீலர். மசூதிக்கு அவர் ஏன் செல்ல வேண்டும்? அவர் தாம் தங்கியிருந்த இல்லத்தில், ஜபதபங்களில் கடுமையாக ஈடுபட்டிருந்தார். மசூதிப் பக்கம்திரும்பவே இல்லை. ஆனால், என்ன சங்கடம் இது! தம் நண்பர் பூட்டியைச் சந்திக்க அவர் போனபோது, பூட்டி, தாம் பாபாவைச் சந்திக்கச் செல்வதாகக் கூறி சாஸ்திரியையும் அழைத்துச் சென்று விட்டார்! வேறு வழியில்லாமல், சாஸ்திரியும் பூட்டியுடன் மசூதி நோக்கி நடந்தார்.பாபாவைப் பார்த்த சாஸ்திரி, தன் வியப்பையோ, மரியாதையையோ ஒருசிறிதும் புலப்படுத்தவில்லை. பாபாவை நோக்கித் தன் மனம் சாய்ந்தாலும், கோலப் ஸ்வாமியைத் தவிர தனக்கு வேறு குரு கிடையாது என்று அவர் மறுபடி மறுபடி, தம் மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டார். பாபா சாஸ்திரியையே கனிவோடு உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை சாஸ்திரியின் மனத்தை அள்ளி விழுங்கியது. ஆனால், ஏதொன்றும் பேசாமல் அமர்ந்திருந்த சாஸ்திரி, தாம் தொழில் ரீதியாகத்தான் பாபாவைச் சந்திக்கிறோம் என்று பொருள் தருவதுபோல், பாபா, தங்கள் கைரேகையை நான் பரிசோதிக்க அனுமதி உண்டா? எனக் கேட்டார். பக்தர்களுக்கெல்லாம் கைகொடுப்பவர்தான் பாபா. ஆனால், அவருக்குக் கைகொடுக்க அவர் தயாராக இல்லை. பிட்சை வேண்டும் என்று பல வீடுகளில் கை நீட்டுபவர். ஏனோ, கைரேகை சாஸ்திரியிடம் கைநீட்ட மறுத்துவிட்டார். சாஸ்திரிக்கு சில வாழைப்பழங்களைப் பிரசாதமாகக் கொடுத்தார். சாஸ்திரி அவற்றை வாங்கிக் கொண்டு, தாம் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தார். பின் குளித்துவிட்டு தமது வழக்கமான ஜபதபங்களில் ஈடுபடலானார்.

அப்போது, மசூதியில் இருந்த பாபா, குங்குமப் பூ நிற உடையை எடு, நாம் இன்று அந்த வண்ணத்தில் உடை உடுத்தலாம்! என்றார். அந்த உடையின் பின்னணியில் என்ன திட்டம் உள்ளது என்று யாருக்கும் புரியவில்லை. குளிக்கச் சென்ற பாபா, குளித்துவிட்டு வரும்போது, குங்குமப் பூ நிற உடையில் காட்சியளித்தார். பக்தர்கள் பரவசத்தோடு அந்தப் புதிய கோலத்தை தரிசித்தார்கள். பாபா ஆசனத்தில் அமர்ந்தார். அடியவர்கள் அவரை வழிபடலானார்கள். ஆரத்தியும் தொடங்கியது. திடீரென பாபா செல்வந்தரான பூட்டியை அழைத்தார். போய் முலே சாஸ்திரியிடமிருந்து எனக்கான தட்சணையைக் கேட்டு வாங்கிவா! என்றார். பூட்டி மாபெரும் செல்வந்தர். பாபாவுக்கு எத்தனை தட்சணை வேண்டுமானாலும் அவரால் கொடுத்துவிட முடியும். ஆனால், பாபா யாரிடம் தட்சிணை கேட்கிறாரோ, அவரிடம் கேட்டு தட்சிணை வாங்கிவர வேண்டும் என்ற நியதி இருப்பதை அவர் அறிவார். பூட்டி எழுந்து, முலே சாஸ்திரி தங்கியிருந்த இல்லம் நோக்கி நடந்தார்.

பாபா அவரிடம் தட்சணை கேட்டதாக சாஸ்திரியிடம் தெரிவித்தார். சாஸ்திரிக்கு எரிச்சல். பாபாவுக்குத் தாம் ஏன் தட்சணை தரவேண்டும்? தம் குரு கோலப் ஸ்வாமி தான். அப்படியிருக்க மசூதியிலிருக்கும் ஒருவருக்கு தாம் தட்சணை கொடுப்பதாவது? ஒருகணம் யோசித்தார் சாஸ்திரி. ஆனால், கேட்டிருப்பவரோ ஷிர்டியில் பலரால் மகானாகக் கொண்டாடப்படுபவர். வந்திருப்பவரோ பெரிய கோடீஸ்வரர். எனவே, நேரில்  போய் தட்சணை கொடுப்பதுதான் மரியாதை என்ற முடிவுக்கு வந்தார். கையில் தட்சணையை எடுத்துக் கொண்டு, பூட்டியோடு மசூதி நோக்கி நடந்தார். மசூதிக்குள் சென்ற அவர், சற்றுத் தொலைவில் நின்றவாறே கொஞ்சம் மலர்களை எடுத்து, பூட்டி செய்ததுபோல், தாமும் பாபா மேல் அந்த மலர்களை அர்ச்சனை செய்வதுபோல் வீசினார். அடுத்த கணம் நிகழ்ந்தது அந்த அற்புதம்….குங்குமப் பூ நிறத்தில் பாபா அன்று ஏன் உடை அணிய விரும்பினார் என்பது அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் எல்லோருக்கும் தெரிந்தது…

Advertisements

ஷிர்டி சாய் பாபா பகுதி – 17

 

தூணின் மீது கம்பால் ஓங்கி அடித்தார் பாபா. ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன். உடனடியாய்க் கீழே இறங்கிவிடு! என்று உரக்க முழங்கினார். தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின்எந்த ஆவேசமும் இல்லாமல்,சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அது தன் நெருப்பு விரல்களால்,பாபாவைக் கைகூப்பி வணங்கியதுபோல் தோன்றியது!அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபாதம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றுஉணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள். தங்களைப் படைத்தவருக்குத்தான் பஞ்ச பூதங்கள் கட்டுப்படுகின்றன என்று புரிந்து கொண்டார்கள். அன்னை சீதாப்பிராட்டியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அனுமன் வாலில் அக்கினி தேவன் தன் இயல்பு மாறிக் குளிர்ச்சியாக இருந்தானே!

சீதை அக்கினிப் பிரவேசம் செய்தபோது, கற்பின்கனலியான அன்னையைச் சுடாமல், அக்கினி தேவன் பவித்திரமாக ஸ்ரீராமபிரானிடம் ஒப்படைத்தானே!கடவுளுக்கு நெருப்புகட்டுப்படும் என்பதுராமாயண காலம் தொட்டு நாம் அறிந்தது தானே! தன்னைப் படைத்த இறைவனுக்கு நெருப்பு கட்டுப்படுவதுஇயல்புதானே! பரித்ராணாய ஸாதூனாம் விநாசாயச துஷ்க்ருதாம்! என்கிறான் கீதையில்கண்ணன். நல்லோரைக் காத்து அல்லோரை அழிப்பதேஅவதாரங்களின் நோக்கம். பாபா தீயவர்களை அழிக்கவும் செய்தார். தீயவர்களைநல்லவர்களாக்கி அவர்களைக் காக்கவும் செய்தார்.தம்மை அன்றுசரணடைந்தவர்களையும், இன்று சரணடைபவர்களையும் அவர் கைவிடாமல்காப்பாற்றுகிறார். வாழ்வில் கை தூக்கி விடுகிறார். இது பாபா பக்தர்கள் அனுபவத்தில் அறியும் உண்மை. ஒருதுளி சந்தேகமும் அற்ற முழுமையான சரணாகதிக்கு, இறையருள் கட்டாயம் செவிசாய்க்கிறது என்பதேஆன்மிக வாழ்வின்அடிப்படை விதி. பாபா ஒருபோதும் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.

ஏழை, பணக்காரர் என்ற பேதம் அவர்சந்நிதியில் என்றுமில்லை. ஜாதி மத பேதங்களை அவர் பொருட்படுத்துவது இல்லை. அவரைப் பூரணமாகச் சரணடைந்தவர்களே அவர் அருட்செல்வத்தை அதிகம் அடையும் தகுதியுள்ளவர்கள். வாரி வாரி இறையருளை வழங்குவதில் பாபாவுக்கு இணையான வள்ளல்  யாருமில்லை.பாபா மனிதர்களையோ விலங்குகளையோ தாவரங்களையோ பிரித்துப் பார்ப்பதுமில்லை. எல்லாமே அவர் படைத்தவை என்பதால் எல்லாவற்றிற்கும் அவர் அருள் உண்டு. அவர் அருளால் தானே உலகமே இயங்குகிறது! பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் பல்வேறு லீலைகளைத் திருவிளையாடல் என்கிறோம். கண்ணனின் ராசலீலை உள்ளிட்ட லீலைகளைக் கிருஷ்ண லீலை எனப் புகழ்கிறோம். அதுபோலவே சாயி லீலைகளும் அனந்தம். அவர் அடியவர்கள் வாழ்வில் எண்ணற்ற லீலைகளைத் தொடர்ந்து புரிந்து வருகிறார். நுணுக்கமாகத் தங்கள் வாழ்வை ஆராயும்சாயி பக்தர்கள், பாபா தங்கள்வாழ்வில் நிகழ்த்திய லீலைகளைப் புரிந்துகொண்டு தொடர்ந்து அவர்மேல் பக்தி செலுத்துகிறார்கள். கடும் நோய்வாய்ப் பட்டவர்களின் உடல் சார்ந்த துயரங்கள், பாபா மேல் கொண்ட நம்பிக்கை என்ற மருந்தினால் உடனடியாக விலகுகின்றன.

பிறவிப்பெருங்கடலைக் கடக்கும் ஓடமாக பாபாவின் தாமரைத் திருவடிகளே பயன்படுகின்றன. பற்றற்றபாபாவின் பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டவர்களைப் பற்றி, பாபாவே அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவர்களைரட்சிப்பது பாபாவின் பொறுப்பாகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர்தம் அடியவர்களிடம்சொல்வாரே! என்னிடம்வக்காலத்து கொடுத்துவிடு (கோரிக்கையை சொல்லி விடு)! என்று! அதுபோல் பாபாவிடம் வக்காலத்து கொடுத்து, நம் வாழ்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டால், நமது ஒளிமயமான எதிர்காலத்திற்கு பாபாஉத்தரவாதம் தருகிறார்.ஆனால், எல்லாருக்கும் பாபாவைச் சரணடையும் பாக்கியம்கிட்டுமா என்ன? அதற்கும், பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்றுசான்றோர்கள் சும்மாவா சொன்னார்கள்! பாபா மேல் நாட்டம் கொள்ளவும், அவர் அருள் இருந்தால் தான் முடியும். ஷிர்டிக்குச் செல்லவேண்டும் என நினைத்தாலும், பாபாஅருளிருந்தால் தான் செல்லமுடியும். அங்கே எத்தனை நாள் நாம் தங்க வேண்டும் என பாபா நினைக்கிறாரோ, அத்தனை நாள் மட்டுமே தங்க முடியும். பாபா ஸ்தூல வடிவோடு இருந்த அந்தக் காலத்திலும் அப்படித்தான். அருள்வடிவோடு இயங்கும் இந்தக் காலத்திலும்அப்படித்தான்.

காகா மகாஜனி என்பவர், பாபாவின் தீவிர அன்பர். மும்பையில் வசித்து வந்தார். அப்போது கிருஷ்ண ஜெயந்தி விழா வந்தது. கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி ஷிர்டியில் கொண்டாட்டங்கள் நடைபெறும். பாபா பிரத்யட்ச கண்ணன் அல்லவா! கண்ணனை நேரில் தரிசித்த பலனை அடைய வேண்டுமானால், பாபாவைதரிசனம் செய்தால் போதும். ஷிர்டி செல்வோம். ஒருவாரம் தங்கி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிப்போம்… இப்படி முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு சொல்லிவிட்டு, அலுவலகத்தில், இருந்தஇன்னொருவரிடம் தாம் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். அவர் ஷிர்டி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்? ஷிர்டியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று அவராக எப்படி முடிவு செய்யலாம்? அப்படி முடிவு செய்தால் அந்த ஆணவத்தின் மீது பாபாவின் குட்டு விழும் அல்லவா? பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்? என்று விசாரித்தார்!

என்ன இது! ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களைக் காண வந்தால், வந்து தரிசித்த மறுகணமே இப்படிக் கேட்கிறாரே பாபா? காகா மகாஜனியின் உள்ளம்துணுக்குற்றது. ஆனால், அவர் மறுத்து எதுவும் பேசவில்லை. பணிவோடு, தாம் ஒருவாரம் ஷிர்டியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார். அவர் பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. பாபாவின் கண்கள் அவரையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒருவரின் கண்களின் மூலமாக அவர் உள்ளத்தையும் அவரது எதிர்காலத்தையும் படித்து விடுவாரே பாபா? திடீரென பாபா உத்தரவிட்டார்: நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ. நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு! ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. ஆனால். மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். அன்றே அலுவலகத்திற்கும் சென்றார். அங்கே….

ஷிர்டி சாய் பாபா பகுதி – 16

 

இதோ அந்த அற்புத பதில்! நான் எவ்விதம் அதை மறுக்க முடியும்? பண்டிட், என்னை அவரது குருவானகாகாபுராணிக் என்றல்லவோ எண்ணுகிறார்? காகாபுராணிக்கிற்கு, ரகுநாத மகராஜ் என்றொரு பெயருண்டு. இப்போது, பாபா என்று இன்னொரு பெயரும் இருப்பதாக பண்டிட் கருதுகிறார். என் வடிவில் தம்குருவையே அவர் காண்கிறார். அவரது குரு பக்தியை நாம் அங்கீகரிக்க வேண்டுமல்லவா? எல்லா குருவாகவும் இருப்பது நான்தானே? தம் குருநாதருக்குப் பூசுவது போலவே, என் நெற்றியிலும் சந்தனம் பூசினார். அவர் என் நெற்றியில் சந்தனம் பூசும்போது நான் பாபா அல்ல. காகாபுராணிக் தான்!  இதைக் கேட்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.பின்னர் பண்டிட்டிடம் அதுபற்றி விசாரித்தார்கள். பண்டிட்இருகரம் கூப்பி பாபாசொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டார். மனிதர்களின் மன ஆழத்தில் ஓடும் எண்ணஓட்டங்களை உள்ளது உள்ளவாறே கண்டறிவதில் பாபாவுக்கிருந்த அபாரமானஆற்றலை எண்ணி எல்லோரும் அதிசயித்தார்கள்.

அதேநேரம், இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைசக்தியாக உள்ளிருந்து எல்லோர் எண்ணங்களையும் கண்காணித்துக்கொண்டிருப்பவர் பாபாதானே! என்ற உண்மையையும் சிலர் வெளிப்படுத்தினார்கள்.பொதுவாகவே உயர்நிலை மகான்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.ஐம்புலன்களைஅடக்கி ஆள்வதில்பூரணமான வல்லமை பெற்றதனால், ஐம்பூதங்களை அடக்கி ஆளவும் வல்லமைபெற்றுவிடுகிறார்கள் போலும்.உரன் என்னும்தோட்டியால் ஓரைந்தும் காப்பான் என, ஐம்புலன்கள் என்கிற யானையை மன உறுதி என்றஅங்குசத்தால்அடக்குபவனே மெய்ஞானி என்றல்லவோவள்ளுவம் சொல்கிறது! ஐம்பூதங்களை அடக்கும் அந்த அபாரமானஆற்றலை மனித குலநன்மையின் பொருட்டாகஅத்தியாவசியத் தேவைநேர்ந்தால் மட்டுமே மகான்கள் பயன்படுத்துவார்கள்.

ஸ்ரீஅரவிந்த அன்னை, தான் பயணம் செய்த கப்பலைப் புயல் தாக்கியபோது, உடலை விட்டுத் தனது உயிரைப் பிரித்து வானில் சென்று , புயலைத் தோற்றுவித்த தீய சக்திகளை அதட்டினார்.அவ்விதம் புயலை நிறுத்தி,தன்னுடன் கப்பலில் பயணம் செய்த அத்தனை மக்களையும் காப்பாற்றினார். பாபாவின்வாழ்விலும் அவர் ஐம்பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில்வைத்திருந்ததைக் குறிக்கும்சம்பவங்கள் பல உண்டு. ஒருநாள் மாலை நேரம்.இருள் கவியத் தொடங்கியிருந்தது. திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் ஷிர்டியைத்தாக்கலாயின. அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் கடகடவெனப்புகுந்தது. வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள் பரிதவிப்போடு இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனகும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

இப்போது என்ன செய்வது? இந்தப் புயலிலிருந்தும்மழையிலிருந்தும் எப்படித்தப்பிப்பது? அப்போதுதான் அந்த விந்தையான காட்சியைமக்கள் பார்த்தார்கள்.ஆறறிவுடைய மனிதர்களுக்கு இல்லாத புத்தி, ஐந்தறிவுடைய மிருகங்களுக்கு இருக்கும்போல் தோன்றுகிறதே!ஆடுமாடுகள் கூட்டம்கூட்டமாக பாபாவின் மசூதிக்கு ஓடோடிச் செல்வதை அவர்கள் கவனித்தார்கள். கொட்டும்மழையில் கோவர்த்தனகிரியைத் தூக்கி நின்று கோகுலத்துஆனிரைகளைக் காப்பாற்றிய கண்ணனின் அவதாரம்தான் பாபா என்பது ஆடுமாடுகளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்றன.அந்த அற்புதக் காட்சியைப் பார்த்த எல்லா மக்களும்,ஆனிரைகளைப் பின்பற்றித்தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும் பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று உரத்துக் குரல்கொடுத்தவாறே, அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள்.மனித குலத்தை ரட்சிப்பதற்கென்றே வந்த அவதாரமல்லவா பாபா? மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் அவர். பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்தார். ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.

இடியும் மின்னலும் பேய்க்காற்றும்ஷிர்டியையே உலுக்கிக்கொண்டிருந்தன.அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. பரமசிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்ததுபோல் இருந்தது அவரைப் பார்க்க! வானை நோக்கிஉறுமினார் அவர். நிறுத்து! போதும் உன் சீற்றம்! எங்கு வந்து யாரிடம்ஆட்டம் போடுகிறாய்? உன் வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன் தெரிகிறதா? இந்த நரித்தனமான வேலைகளெல்லாம் இங்கு வேண்டாம். ஆடுமாடுகள்,தாவரங்கள் உள்படஇங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா?ஜாக்கிரதை. உடனே கடையைக்கட்டு. ஓடு இந்த இடத்தை விட்டு! ஒருகணம் கூட நிற்காதே. பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். அது வெறும் முழக்கமல்ல. இடி முழக்கம். ஏன், இடியின் ஓசையையும் அடக்கி அதற்கும் மேலான ஒலியில் முழங்கிய முழக்கம்.அடுத்த கணம்ஆகாயத்தில் இருந்த மோட்டார் ”விட்சை யாரோ அணைத்த மாதிரிசடக்கென்று மழை நின்றது. தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதுபோல், புயல் குளிர்ந்த தென்றலாய் மாறி பாபாவின் பாதங்களைப் பணிவோடுவருடியது. மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்துவீடுகளுக்குச் சென்றார்கள்.

ஆடுமாடுகளைத் தடவிக் கொடுத்தார் பாபா. ஆனிரைகள் பாபாவைப் பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்றன. தன்னை நாடிவந்த மக்களும், ஆடு மாடுகளும் இல்லம்திரும்புவதைக் கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் அப்போதுதான் தோன்றிய முழு நிலவுபயபக்தியோடு இந்தவிந்தையான காட்சியை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மழையை மட்டுமல்ல,நெருப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள்…மசூதியில் மக்கள்கூடியிருந்த நேரம்….
மசூதியில் எப்போதும் துனி என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்குமே! திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்றுகிறதே!மக்கள் பதைபதைத்தார்கள்.பாபா, தம் கையில் தாம்எப்போதும் பயன்படுத்தும்சட்கா என்ற கம்பை எடுத்துக்கொண்டார். நெருப்பை நோக்கிச் செல்லாமல் அருகே இருந்த தூணை நோக்கிச் சென்றார்! என்ன செய்யப்  போகிறார் பாபா?..

ஷிர்டி சாய் பாபா பகுதி – 15

பாபா சற்றுநேரம், அந்த இளைஞனைக்கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். தந்தையைக் குழந்தை அதட்டுவது மாதிரி அவருக்குத்தோன்றியிருக்க வேண்டும். தயக்கமே இல்லாமல் தன்இருக்கையிலிருந்து எழுந்தார். நானாவலியைஅதில் அமர்த்தினார்.சிறிதுநேரம் பாபாவின் இருக்கையில் அமர்ந்திருந்த நானாவலி, பிறகு இருக்கையை விட்டு எழுந்தான். பாபாவை மீண்டும் அவரது இருக்கையில் அமருமாறு வேண்டினான். பிறகு, பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்!தம் ஆசனத்தில் மறுபடி அமர்ந்துகொண்ட பாபா,கடகடவென்று நகைத்தார்.கூடியிருந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சி எதை உணர்த்துகிறது என்று மனத்தில் ஆராய்ந்தார்கள். பாபாவின் லீலைகள்ஒவ்வொன்றுக்கும் ஓர்உட்பொருள் இருக்குமே? மனிதர்கள் தங்கள் பதவி ஆசை, நாற்காலி ஆசை போன்றவற்றை எந்நேரத்திலும் துறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை பாபா உணர்த்துகிறாரா? தம் பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தாம்எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கிவரத் தயார் என்று அறிவிக்கிறாரா?எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும்பக்தர்களுக்குப் புரிந்தது. ஆன்மிகவாதிகளில், சிலர்செல்வச் செருக்கோடும் அகங்காரத்தோடும்இயங்குகிறார்களே! அவர்களைப் போன்றவர்அல்ல பாபா. உண்மையிலேயே பதவி ஆசைஉள்ளிட்ட எந்த ஆசையும் அற்ற தூய துறவி அவர் என்பதை உணர்ந்து பக்தர்கள் நெகிழ்ந்தார்கள்.

பாபாவின் பக்தர்கள், அவரைத் தங்கள் விருப்பம்போல் கொண்டாடினார்கள். அதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். சிலர் அவர் முன் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவார்கள். ஒருசிலர் இசைக்கருவிகளை வாசிப்பார்கள். பலர் மெய்மறந்து, தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.வேறு சிலர் அவருக்குச் சாமரம் வீசுவார்கள். பாபாவை, ராமபிரானின் அவதாரமாகவே சில அடியவர்கள் கருதுவதும் உண்டு. ராமனுக்குப்பட்டாபிஷேக வைபவத்தின் போது,  லட்சுமணனும் சத்துருக்கனனும் கவரி வீசி சேவை புரிந்ததுபோலவே, தாங்கள் பாபாவுக்கு விசிறி  வீசுவதாக நினைத்து அவர்கள் ஆனந்தம்  அடைவதுண்டு. தங்கள் வீட்டில் செய்த  உணவுப் பொருளையும் கல்கண்டு, திராட்சை  போன்றவற்றையும் பாபாவுக்கு நிவேதனமாகக் கொண்டு வருபவர்களும் உண்டு.பக்தி உணர்வின் மேலீட்டால் எல்லாவகைப்பட்ட ஆனந்தங்களையும் பக்தர்கள் அடைவதற்கு  பாபா வழிவகுத்திருந்தார். எதற்கும்  தடை சொன்னதில்லை, ஒன்றே  ஒன்றைத் தவிர.  தமது பாதங்களை பக்தர்கள்  தண்ணீரால் கழுவுவதற்கும், தமக்கு மங்கள ஆரத்தி எடுப்பதற்கும்  அனுமதித்திருந்த பாபா, யாரேனும் தம் நெற்றியில் சந்தனம் பூச வந்தால் மட்டும், சிரித்தவாறே தவிர்த்து விடுவார். பாபாவின் தீவிர அடியவரான மகல்சாபதி மட்டும், பாபாவின் கழுத்தில் சந்தனம்  பூச அனுமதிக்கப்பட்டிருந்தார். மற்றபடி, பாபாவின் நெற்றியில் யாருமே சந்தனம் பூசியதில்லை.பாபா ஏன் அதை அனுமதித்ததில்லை என்பதற்கு என்ன காரணம் கூற முடியும்? அதெல்லாம்,பாபா மட்டுமே அறிந்த பரம ரகசியம்.

ஒருவேளை பாபா சிவனின் அவதாரம் தானோ? தமது நெற்றிக் கண்ணின் சூடு, சந்தனத்தால்குளிர்ச்சி அடைவதை அவர் விரும்பவில்லையோ? மண்ணுலகின் கீழான தீமைகளைச் சுட்டெரிக்க அவதரித்த அவருக்கு, தம் செயல்பாட்டுக்காக நெற்றிக் கண்ணின் உஷ்ணம் தேவைப்பட்டதோ? அந்த ரகசியங்களை எல்லாம் யாரறிவார்?ஆனால், அன்று அது நிகழ்ந்தது. அதுவரை யாரும் காணாத அபூர்வக் காட்சி. பாபாவின்நெற்றியில்  சந்தனம் பூச அவர் அனுமதித்த,அதுவரை  நடவாத விந்தையான சம்பவம்….டாக்டர் பண்டிட் என்பவர், பாபாவை முதல்முறையாக தரிசிப்பதற்காக ஷிர்டி வந்தார்.  பாபாவைக் கீழே விழுந்து வணங்கியபின், மசூதியில் பாபாவின் திருமுகத்தை தரிசனம் செய்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார். வாழும் தெய்வம் பாபா என்பதை அவர் உள்மனம் புரிந்துகொண்டதாகவே தோன்றியது. அவர் விழிகள் பக்திப் பரவசத்தால் பளபளத்தன. தம்மை முதல் முறையாக தரிசிக்க வந்திருக்கும்பண்டிட்டை, சிறிதுநேரம் பிரியமாகப்பார்த்துக் கொண்டிருந்தார் பாபா. அவரின்மனத்திற்குள்  ஊடுருவி அவரைப் பார்ப்பது போல் இருந்தது  பாபாவின் தீட்சண்யமான பார்வை.

பிறகு  பண்டிட்டிடம்,  தாதாபட் கேல்கர் வீடு எங்கிருக்கிறது என்று  விசாரித்து, நான் அனுப்பியதாக அவனைச் சென்று பார்த்துவா! நீ போகும்போதுசந்தனம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களோடு அவன் என்  தரிசனத்திற்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பான். நீ அவனோடு மசூதிக்குத்திரும்பி வா! என்று கூறி அனுப்பி வைத்தார்.பாபாவின் வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்ட பண்டிட், மசூதியை விட்டு எழுந்துசென்று, தாதாபட் கேல்கர் வீட்டை விசாரித்து,அங்குபோய் நின்றார். பாபா தம்மை அவரிடம் அனுப்பியதாகத் தெரிவித்தார். அவரை அன்போடு வரவேற்ற கேல்கர்,பூஜைக்கான ஊதுபத்தி, கற்பூரம், சந்தனம், மலர்கள், நிவேதனப் பொருட்களான திராட்சை, கல்கண்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு பண்டிட்டையும் அழைத்துக் கொண்டு பாபாவின் மசூதிக்கு வந்து சேர்ந்தார். பூஜைப் பொருட்களை பாபாவின் எதிரில் வைத்துவிட்டு கேல்கர் அமர்ந்தபோது, பண்டிட்டும் அருகே அமர்ந்தார்.பாபாவையே மெய்மறந்து  பார்த்துக் கொண்டிருந்த பண்டிட், உணர்ச்சி  வசப்பட்டவராய்  திடீரென்று எழுந்தார். பூஜைப் பொருட்களில்இருந்த சந்தனத்தை எடுத்துத் தண்ணீர் விட்டு நன்கு குழைத்தார்.

அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார்என பக்தர்கள்  வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். பண்டிட், பாபா  அருகே சென்று குழைத்த சந்தனத்தை  முப்பட்டைத் திருநீறுபோல்  பாபாவின் நெற்றியில் இட்டுவிட்டார். அவர் இந்த உலகையே மறந்துஇயங்குவதாய்த் தோன்றியது. பாபா ஏதொன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.பக்தர்களுக்கு வியப்பு. முக்கியமாக,மகல்சாபதிக்குப் பெரும் வியப்பு. கழுத்தில்மட்டுமே சந்தனம் பூச அனுமதித்து வந்த பாபா,எப்படி இன்று நெற்றியில் பூச அனுமதி தந்தார்?இரவு நெடுநேரம் வரை அந்தக் கேள்விக்கு பதில் கிட்டாமலே இருந்தது. பண்டிட் விடைபெற்றுச்சென்றுவிட்டார். பாபா, அந்த முப்பட்டைச் சந்தனம் துலங்கும் நெற்றியுடன் சிரித்தவாறே வீற்றிருந்தார்.கேல்கர் வியப்போடு, பாபாவிடம் பலரும்கேட்க விரும்பிய அந்தக் கேள்வியை நேரடியாகக் கேட்டே விட்டார்: பாபா! நீங்கள் உங்கள் நெற்றியில் சந்தனம்பூச அனுமதித்ததில்லையே? இன்று மட்டும் பண்டிட்டுக்கு அந்த அனுமதியை எப்படி அளித்தீர்கள்? அனைவரும் பாபாவின்பதிலுக்காக ஆவலாய்க் காத்துக்கொண்டிருந்தார்கள்.நகைத்தவாறே பாபா பதில் சொல்லத்தொடங்கினார். பாபாவின் பதிலைக் கேட்டகேல்கர் உள்ளிட்ட அத்தனை அன்பர்களும்வியப்பின் உச்சிக்கே சென்றார்கள்.அவ்வளவு  அற்புதமான பதில் அது. அப்படியொரு பதிலை  பாபா சொல்வார் என யாருமேஎதிர்பார்க்கவில்லை…

ஷிர்டி சாய் பாபா பகுதி – 14

ஆம்…அந்த சமயத்தில்,ஷிர்டி மசூதியில் பாபாவைதரிசித்துக் கொண்டிருந்தவர்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றார். ஏன் இவர்இப்படி ஆவேசப்படுகிறார் என்று பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபாதன் கைகளையும், கால்களையும் யாரோடோ சண்டையிடுவது போல் காற்றில் வீசத்தொடங்கினார். எதன்பொருட்டு இது நடக்கிறது?பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாபா உக்கிரத்தோடு காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோவைப் பழமாய்ச்சிவந்திருந்தன. முகம் குங்குமப்பூப்போல் சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. திருடர்கள் முன் பயத்தோடுநின்றுகொண்டிருந்த காஷிராமின் உடலில் ஒரு கணம் ஆவேசம்வந்தது போல் தோன்றியது. தன் கையில் பற்றிக் கொண்டிருந்த பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டார்.தன் கைகளாலும், கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத்தாக்கத் தொடங்கினார்.அவரோ அதிக பலமில்லாத நோஞ்சான். ஒரே ஒருவர் தான் அவர். திருடர்கள் பலசாலிகள். அவர்கள் எண்ணிக்கையில் நான்கைந்து பேர்!ஆனால், காஷிராமின் உடலில் தென்பட்ட அசாத்தியமான வலிமையைப் பார்த்துத் திருடர்கள் விக்கித்துப் போனார்கள்.கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்அங்கேயே போட்டுவிட்டு தப்பித்தால் போதும் என்று ஓடலானார்கள்! காஷிராம் விடுவதாக இல்லை. காற்றை விட வேகமாக ஓடி,அவர்கள் முன்னால் போய்மீண்டும் நின்றார். அவர்களை ஒரு கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு முக்கியமாக நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டுமசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர்பிரமிப்போடும் அவரைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர் மசூதியில் நுழைந்துபாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து சர்க்கரையை ஏற்குமாறு வேண்டினார்.அப்போதுதான் பாபாவின்ஆவேசம் தணிந்தது. அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம்ஒப்படைத்து விட்டாயல்லவா? என்று அமைதியாக, அவர் கேட்டபோதுதான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது.பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார் அவர். தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எப்படியெல்லாம் ஓடோடி வருகிறார் என்றறிந்து நெக்குருகி நின்றார்கள் பக்தர்கள்.

அவரவரும் அவரவர் உடம்பை நன்கு பராமரிக்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பம். அடியவர்கள், தீய பழக்கங்கள் அற்றவர்களாய், நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் நலத்தைப் பேண வேண்டியது அவசியம் என்பதை பாபாஅடிக்கடி அறிவுறுத்தினார். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே! என்ற திருமூலர் தத்துவமே, பாபாவின்உபதேசமாகவும் இருந்தது. உடம்பைப் புறக்கணிக்கவும் வேண்டாம். கொஞ்சிக் கொஞ்சி செல்லமாகக் கொண்டாடவும் வேண்டாம். ஆனால், முறையாக அதைப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.உடல் என்கிற குதிரையில் தான் ஆன்மா சவாரி செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆன்மா சவாரி செய்யும் இந்த உடல் நலமாக இருக்க வேண்டியது அவசியம். குதிரையில் சவாரி செய்யும் பயணி, குதிரையின் நலனைஎவ்வளவு எச்சரிக்கையோடுபாதுகாப்பானோ, அதுபோல் நாமும் உடலைக் காக்கவேண்டும்.கடவுளை அடைதல் என்ற உயர்ந்த லட்சியத்தை சாத்தியப்படுத்தவே உடல் அருளப்பட்டுள்ளது. ஆன்ம ஞானம் பெறுவதற்கு உடலின் ஆரோக்கியம் முக்கியமானது. பாபா, உடலை வருத்திக் கொண்டு பக்தி செய்யுமாறுகூறியதில்லை. அன்பர்களைத் தாயன்போடு நேசித்த அவர், அவர்களது உடல் நலனிலும்தாய்மைக் கனிவோடு அக்கறை செலுத்தினார்.

அதுமட்டுமல்ல, எல்லாஜீவராசிகளிலும் பாபாவேகுடிகொண்டிருப்பதை அறிந்து, ஜீவகாருண்யத்தோடு வாழவேண்டியது அவசியம்என்பதையும் வலியுறுத்தினார். பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஷிர்டியில் ஒருவீட்டில் தங்கியிருந்தார். ஒருமுறை, அவர் மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். கரண்டியால் ரசத்தை அவர்கலக்கிக் கொண்டிருந்த போது,பசியுள்ள ஒரு நாய் விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய்பசியால் தான் குரைக்கிறதுஎன்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்குவந்தார். காய்ந்த ரொட்டித்துண்டைப் பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை மொறுமொறுவென உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்தது. ஷிர்டி பாபாவின் கண்கள் ஒளியால் மின்னுவதைப் போல் அதன் கண்களும் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன.நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவைப் பார்ப்பதற்காகமசூதிக்குச் சென்றார்.

தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள்.இப்படியே தொடர்ந்துநடப்பாயாக. என் பசிக்குஉணவிட மறந்துவிடாதே!தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவேஇல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம்கேட்டாள்:  சுவாமி! நான் இன்றுஉங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே? நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்துபோனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான்தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்குஉணவளித்தாலும், அதுஎன்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது! இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். எங்கும் நிறை ஞானப் பிரம்மத்தின் முன் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டார். ஷிர்டியில் நானாவலிஎன்கிற பாபா பக்தன் இருந்தான். பாபாவுக்கான தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வான் அவன்.திடீரென்று ஒருநாள் பக்தர்கள் கூடியிருக்கும் சந்தர்ப்பத்தில் நேரே பாபாவிடம் வந்தான்.இப்போது உங்கள் ஆசனத்தில் நான் அமரவேண்டும். உடனே எழுந்திருங்கள்!என்று பாபாவை அதட்டினான்! பக்தர்கள்திகைப்போடு பாபாவைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 13

நீதிபதியின் தலைசுற்றிய காரணத்தைக் கேட்டால், நமக்கும் தலை சுற்றும். காரணம், ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்ன பாபா, தாவி ஏறி, ஒரு நூலில் படுத்துக் கொண்டு ஆனந்தமாக உறங்கலானார். ஒரு மனிதர் தரையில் படுக்கலாம். பாயில் படுக்கலாம். கட்டிலில் படுக்கலாம். ஆனால், ஒரு மெல்லிய நூலில் எப்படிப் படுக்க முடியும்? நீதிபதிக்குத் தன் கண்ணையே நம்ப முடியவில்லை.ஆனால், நம்ப முடியாததைஎல்லாம் நிகழ்த்திக் காட்டுவதுதானே பாபாவின் மகிமை!ஒரு நூலில் படுக்குமளவு, தம்மை எப்படி கனமே இல்லாதவராகஆக்கிக் கொண்டார்? நீதிபதிக்கு எதுவும் புரியவில்லை.கண்களில் பக்திக் கண்ணீர் பெருக, நெடுநேரம் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, பாபாவைக் கீழே விழுந்து வணங்கி மனத்தில் அவரைபூஜித்தவாறே இல்லம் திரும்பினார்.பாரததேசம்சுதந்திரம் அடைவதற்கு முன், ஷிர்டியில்தரிசனம் தந்த பாபாவை, திலகர்உள்ளிட்டசுதந்திரத் தியாகிகள்பலரும் சென்றுசந்தித்திருக்கிறார்கள்.

நாட்டு மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஊட்டியவர்களில் மிக முக்கியமானவர் அல்லவா லோகமான்ய பால கங்காதர திலகர்! இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் விநாயகரை வழிபடுவதால், விநாயகர்வழிபாட்டின் மூலம் பாரத மக்களிடையேஒற்றுமையை உருவாக்க முடியும்என்பதை உணர்ந்தார் அவர். நாடெங்கும்விநாயகர்சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வழிவகுத்து,ஊர்வலங்கள் நடத்தி, அதன்மூலம் பாரத மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியைத்தூண்டினார். பகவத் கீதைக்கு உரை எழுதி அதன்மூலம்பெரும்புகழ் பெற்றார். பாபாவின் மகிமை குறித்து அறிந்த அவர், பாபாவை நேரில் சென்று சந்தித்தார். 1912 மார்ச் 12ல், அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மகாத்மா காந்தியும் பரமாச் சாரியாரும் (காஞ்சிப்பெரியவர்)  சந்தித்த சந்திப்பைப் போல்,  பாபாவும், திலகரும்சந்தித்த  சந்திப்பும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.தாதா சாஹப் கபார்டே என்ற வழக்கறிஞர், பாபாவின்அடியவராகவும் திலகரின் நண்பராகவும் இருந்தார்.அவர்தான், திலகரை பாபாவிடம் அழைத்து வந்தார். பாபாவைப் பரவசத்தோடு தரிசித்த திலகர், அவரது கமலப்பூம் பாதங்களில் தலை வைத்து வணங்கினார்.

பாபாவை  தத்தாத்ரேயரின்அவதாரம்  (சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சம்  கொண்டவர்தத்தாத்ரேயர்) என்றேதிலகர் நம்பினார்.பாபா, திலகருக்கு அந்தரங்கமாகச் சில அறிவுரைகள் கூறினார்.இந்தியா சுதந்திரம் பெற்றதில், பாபாவின் அருளாசியும்அறிவுரைகளும் கூடப் பின்னணியில் இருந்தன என்பதை இந்தச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.திலகர் பாபாவைச் சந்தித்துச் சென்ற பின்னர், பாபா வசித்தபிரதேசமான அகமத் நகர்மாவட்டத்தின் ஆணையர், அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார். சுதந்திரப் போரில் பாபாவுக்கு என்ன பங்கு என்று கண்காணிக்க விரும்பினார். பாபாவின் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, ரகசிய அறிக்கைகளைத் தமக்கு அனுப்புமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். எல்லோரையும் கண்காணிக்கும் கடவுளையே, கண்காணிக்க முயன்ற அந்த அதிகாரியின் பேதைமையை என்னென்பது! கட்டாயம் இந்தியா சுதந்திரம் அடையும் என்று பாபா ஆசிகூறியதாகவும், ஆனால் அகிம்சை முறையிலேயே அது நிகழும் என்று பாபா திட்டவட்டமாகத்திலகரிடம் அறிவித்ததாக கூறுகிறார்கள். எனினும், பாபா – திலகர் சந்திப்பு பற்றி ஓரளவு அறிய  முடிகிறதேயன்றி, அவர்கள்  என்ன பேசிக் கொண்டார்கள்  என்பது பற்றிய முழுமையான விவரங்கள் கிட்டவில்லை.

அப்போது நடந்தது பிரிட்டிஷ்அரசாங்கமாதலால், பாபாவும்திலகரும் பேசிய பேச்சின்விபரங்கள், மிக ரகசியமாகப்பாதுகாக்கப்பட்டதேஇதற்குக் காரணம்.ஷிர்டியில், காஷிராம்என்றொரு துணி வியாபாரிஇருந்தார். பாபாவின் தீவிர பக்தர். உண்ணும் போதும், உறங்கும்போதும், துணி விற்கும்போதும் பாபாவை நினைத்தவாறே வாழ்ந்து வந்தார். பாபா மனிதவடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தார். பாபாவை அடிக்கடித்தரிசிப்பதில் அவருக்குத் தீராதஆர்வமுண்டு. பாபாவின் புனிதத் திருமுகத்தையும், அதில்பொங்கும் கருணையையும்திகட்டத் திகட்டப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவருக்கு ஒரு தனி ஆனந்தம். நிவேதனப் பொருள் எதையேனும் ஆழ்ந்த பக்தியோடு எடுத்துக் கொண்டு பாபாவைப் பார்க்கச் செல்வது அவர் வழக்கம்.அப்படித்தான் ஒருமுறை,ஒரு சிறு துணிப்பையில்,பாபாவுக்காகக் கொஞ்சம் சர்க்கரை எடுத்துக் கொண்டு, பாபாவைதரிசிக்கப் புறப்பட்டார். பாபாவை நினைக்கும் போதெல்லாம், மனமேசர்க்கரையாய்த் தித்திக்கிறதே!இந்தச் சர்க்கரையை பாபாஉண்ணும் அழகைக் கண்ணால் பருக வேண்டும்… இவ்விதம் நினைத்தவராய், துணிக்கடையைப் பூட்டிவிட்டு, பாபாதங்கியிருந்த மசூதி நோக்கி,சர்க்கரைப் பையுடன் சாலையில் நடக்கலானார்.

பாபா நினைவே துணையாக அவர் நடந்தபோது, வழியில் தன்னைச் சிலர்ரகசியமாகப் பின்தொடர்வதை அவர் கவனிக்கவில்லை.பின் தொடர்ந்தவர்கள்திருடர்கள்! துணி வியாபாரி, கையில் ஏதோ ஒரு சிறு பையை இறுகப் பற்றியவாறு நடப்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையில் அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணமோ, வேறு விலை உயர்ந்த பொருளோ இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.பாபா நினைத்தால் சர்க்கரையைக் கூடத் தங்கமாகவோ பணக் கற்றையாகவோ மாற்றக் கூடியவர்தான். ஆனால், அப்போது அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான். இதை அந்தத் திருடர்கள் அறியவில்லை.வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?சந்தேகமில்லால் பையில்ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள்.துணைக்கு யாருமில்லாத பகுதியில், துணி வியாபாரி நடந்தபோது அவர்கள் துணிவோடு வியாபாரியை வழிமறித்தார்கள். கத்தியைக் காட்டி காஷிராம்காதுகளில் இருந்த கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர்,கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றித் தரச்சொன்னார்கள். கையில்கத்தியோடு வந்திருக்கிறார்களே? உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார். அதன்பின், அவர் இறுகப்பற்றியிருந்த அந்தச் சிறுபையைத் தருமாறு அதட்டினார்கள் அவர்கள்.என்னது! இந்தப் பையை இவர்களிடம் கொடுப்பதா? பாபாவுக்கான சர்க்கரை அல்லவா இது? தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை யாராவது பன்றிகளுக்குப் போடுவார்களா? நகையும், கடுக்கனும் போனால் போகிறது. கடவுளுக்கான நிவேதனப் பொருள்பறி போகலாமா?இப்படி எண்ணியதுகாஷிராமின் மனம்.  அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 12

ஆனால், அடுத்த கணம்தான் மாதவராவுக்கும் சரி… கூடியிருந்த மக்களுக்கும் சரி… பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. உண்மையில் பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்  என்னும்போது விஷம் என்ன பிரமாதம்? அதுவும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்? பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் ஏறிக்கொண்டிருந்த விஷம் சரசரவென இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்ற மாதவராவ், என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார்.

அடியவர்களைக்  காக்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்! என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம் விரல்களால் துடைத்து விட்டார். அன்பே வடிவான பாபாவின் அளப்பரிய கருணையைக் கண்டு பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். இவ்விதம் பாபாவின் மகிமைகள் பரவினாலும், தொடக்க காலத்தில் ஷிர்டியிலும் சிலர் பாபாவைப் பைத்தியக்காரர் என நினைத்ததுண்டு! கானகத்தில் திரிவது, உடை பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது, பித்துப் பிடித்தாற்போல் மரத்தடிகளில் பல மணிநேரம் கண்மூடி அமர்ந்திருப்பது இதெல்லாம் பைத்தியக்காரரின் அடையாளங்கள் என்பது அவர்களின் எண்ணம். மகான்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் வெளித்தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை என்பதை அவர்கள் அறியவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கூடப் பைத்தியம் என்றுதானே தொடக்கத்தில் மக்கள் கருதினார்கள்! அவர் சாதாரணப் பைத்தியம் அல்ல, ஆன்மிகப் பைத்தியம்.. கடவுளை நேரில் தரிசித்துக் கடவுளாகவே மாறியவர் அவர் என்பதெல்லாம் மக்களுக்கு மெல்ல மெல்லத் தானே புரிய வந்தன! பாபாவைப் பைத்தியம் என நினைத்தார்கள் சில எண்ணெய் வியாபாரிகள்.

பாபாவைத் தேடி வெளியூரிலிருந்தெல்லாம் அடியவர்கள் வருவதைப் பார்த்து அவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த அற்புதமும் நிகழ்த்திக் காட்டப்படவில்லை. எனவே அவர்கள் பாபாவைத் தெய்வம் என நம்ப மறுத்தார்கள். ஆனால், அவர்களும் பாபாவைப் பூரணமாக நம்பி ஏற்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாபா, தன் மசூதியில் திசைக்கு ஒன்றாக நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். விளக்குகள் எரிய எண்ணெய் வேண்டுமே! தமக்கான உணவை யாசிப்பதுபோல, விளக்கிற்கான எண்ணெயையும் அவர் பல கடைகளில் யாசித்துப் பெறுவதுண்டு. தொடர்ந்து பாபாவுக்கு எண்ணெய் வணிகர்கள் மூலம் எண்ணெய் கிடைத்து வந்தது. ஒருமுறை பாபா எண்ணெய் கேட்டு வந்தபோது, அந்த வணிகர்கள் யோசித்தார்கள். இந்தப் பைத்தியத்திற்கு எண்ணெய் கொடுக்க வேண்டிய அவசியமென்ன? தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, எல்லா வியாபாரிகளுமே எண்ணெய் தர மறுத்துவிட்டார்கள். பாபாவின் மசூதியில் விளக்கெரிய எண்ணெய் தருவது மாபெரும் புண்ணியச் செயல் என்பதை அந்த அறிவிலிகள் அறியவில்லை. பாபா ஏற்றும் விளக்குகளால் தான் அந்த ஊரின் தீமைகள் சுட்டெரிக்கப்படுகின்றன என்பதையும் அவர்கள் உணரவில்லை.

பாபா தமக்கு எண்ணெய் தரப்படாததைப் பற்றி எதுவும் கூறவில்லை. புன்முறுவலோடு மசூதியை நோக்கி நடந்தார். வியாபாரிகள் கண்சிமிட்டித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டார்கள். இவர் இன்று எப்படி விளக்குகளை ஏற்றுவார் பார்க்கலாம் என்று சில வணிகர்கள் மசூதிக்கு வேடிக்கை பார்க்க வந்தார்கள். பாபா மண்பானையில் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரைக் குவளையில் எடுத்தார். பின் அந்தத் தண்ணீரை எல்லா விளக்குகளிலும் ஊற்றினார். அதன்பின் திரியை ஏற்றினார். பாபாவின் கட்டளைக்கு அந்தத் திரிகள் பணிந்தன. தண்ணீரை அவை எண்ணெயாகக் கருதத் தொடங்கின. எல்லா விளக்குகளும் தண்ணீரால் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தன. இதைப் பார்த்த எண்ணெய் வணிகர்கள் மனத்தில் அச்சம் தோன்றியது. ஊருக்குள் ஓடிச் சென்று மக்களிடமும் சக வணிகர்களிடமும் இந்த அற்புதம் பற்றி திகைப்புடன் விவரித்தார்கள். மக்களும் வணிகர்களும் பெருந்திரளாக ஓடோடி வந்து தண்ணீரால் விளக்குகள் எரியும் அதிசயத்தைக் கண்டு பிரமித்துப் போனார்கள். எல்லா வணிகர்களும் பாபாவின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். பாபா எண்ணெய் கேட்டது தனக்காக அல்ல. தங்களின் பாவங்களைப் போக்குவதற்காகத்தான் என்பதை அவர்கள் அப்போதுதான் புரிந்து கொண்டார்கள். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் பாபாவுக்குக் கட்டுப்பட்டவை என்ற பேருண்மையையும் அறிந்துகொண்டார்கள்.

பாபா கலகலவென்று நகைத்தார். எல்லோரையும் தட்டிக் கொடுத்தார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் பேசாத விஷயங்களையெல்லாம் தண்ணீரால் எரிந்துகொண்டிருந்த தீபங்கள் ஒளிமொழியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தன. தென்னகத்து மகானான வள்ளலார் வாழ்வில் கூட, அவர் தண்ணீரால் விளக்கேற்றிய சம்பவம் வருகிறதே! பக்தி என்னும் எண்ணெய் ஊற்றி அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் என்னும் சுடரை எரியச் செய்பவர்கள் அல்லவா மகான்கள்? ஒருநாள் மாலை மயங்கும் நேரம். ஒரு நீதிபதி பாபாவை தரிசிக்க வந்தார். பாபா உண்பதற்குஎன்று பிரியத்தோடு போண்டா பொட்டலம் வாங்கி வந்திருந்தார் அவர். போண்டாவை ருசித்துச் சாப்பிட்டார் பாபா. பொட்டலத்தில் கட்டப்பட்டிருந்த மெல்லிய நூலை ஞாபகமாகத் தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டார். போண்டா சாப்பிட்டு முடித்ததும் அந்த நூலை தான் தங்கியிருந்த மசூதியின் வெளியே தள்ளித் தள்ளி இருந்த இரு தென்னை மரங்களின் இடையே இணைத்துக் கட்டினார். அப்போது அங்கே நீதிபதியையும், பாபாவையும் தவிர வேறு யாருமில்லை. அந்த நூலால், இரண்டு தென்னை மரங்களை இணைத்துக் கட்ட வேண்டிய அவசியமென்ன என்று நீதிபதிக்குப் புரியவில்லை. நான் ஓய்வெடுக்கப் போகிறேன். நீங்கள் புறப்பட்டுப் போவதானால் போகலாம்! என்றார் பாபா. அடுத்த கணம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்து நீதிபதிக்குக் கிறுகிறுவென்று தலை சுற்றியது….!