ஷிர்டி சாய் பாபா பகுதி – 25

 

பாபா சொன்னால் சொன்னபடி நடக்குமே? சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, பக்தர் ஆவலோடு காத்திருந்தார். தெய்வத்தின் திட்டங்கள்தான் எத்தனை ஆச்சரியமானவை! ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தாய்ப்பாசம் இருக்கிறது. தாய்ப்பால் கொடுத்துக் குழந்தையைத் தாய் வளர்ப்பதும், இயல்பாகவே அவளிடம் தோன்றும் அளவற்ற பாசத்தால்தான். தாயின் பெருமையை அறிவுபூர்வமாக உணர்ந்து அவளை அவளது வயோதிக காலத்தில் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை. தாய்தந்தையை முதியோர் இல்லத்தில் கொண்டு தள்ளுபவர்கள் அந்தப் பெரும் பாக்கியத்தை இழக்கிறார்கள். பிராயச்சித்தமே இல்லாத மாபெரும் பாவத்தைச் செய்கிறார்கள். விலங்குகளிடமும் பறவைகளிடமும் இயற்கை தேவையான நேரத்தில் மட்டும் தாய்ப்பாசத்தை உண்டு பண்ணுகிறது. எப்பேர்ப்பட்ட விந்தை அது! ஐந்தறிவே உள்ள அவற்றிடம் அப்படியொரு பாசம் தோன்றுவது எத்தனை ஆச்சரியம்! ஒரு தாய்க்கோழி தான் இட்ட முட்டையை எந்தக் கட்டளைக்குப் பணிந்து தொடர்ந்து அடை காக்கிறது? முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும், எதிரிகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வீர உணர்ச்சியைத் தாய்க்கோழியின் மனத்தில் புகட்டியவர் யார்? இறைவன் திட்டத்தில் பறவைகளிடமும் விலங்குகளிடமும் தோன்றும் தாய்ப்பாசம் மனிதர்களிடம் உள்ளது போல் நீண்டநாள் இருப்பதில்லை. பறவைகளின் குஞ்சுக்கு இறக்கை முளைத்த பிறகோ, விலங்கின் குட்டி சற்று வளர்ந்த பிறகோ தாய்ப்பாசம் மறைந்து விடுகிறது. அவைகள் தனித்தனி வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிடுகின்றன.

அபூர்வமாக அப்படி அல்லாமலும் விலங்குகளிடம் பாசம் தொடர்ந்து இருக்கும் போலும்! இதோ! இந்தப் பல்லியைத் தேடி இதன் சகோதரி வரப்போகிறதாமே? பக்தர் வியப்போடு கேட்டார்: பாபா! வெறும் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்குகள் எப்படி இவற்றையெல்லாம் அறிகின்றன? பாபா பக்தரைக் கூர்மையாகப் பார்த்தார். அவர் பார்வை பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிற்று. உண்மையில் ஐந்தறிவு என்பது நம் ஆறறிவை விடக் குறைவானது என்று நினைக்கிறோம். ஆனால், ஐந்தறிவு கொண்டவை நம்மை விடக் கூடுதல் சக்தி பெற்றிருப்பதை நாம் உணர்வதில்லை. இயற்கையின் ஆற்றலை முன்கூட்டியே தெளிவாக உணர்ந்துகொள்ளும் சக்தி நமக்கு இருப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அந்தச் சக்தி இருக்கிறது. நிலநடுக்கம் வருவதற்கு முன்பாகவே விலங்குகள் அதை உணர்ந்து நிலநடுக்கம் வராத பிரதேசத்திற்குத் தாவுகின்றன. சுனாமி வருவதற்கும் முன்பாகவே, அவை அச்சத்தோடு குரல் கொடுத்து மனிதர்களை எச்சரிக்கின்றன. விலங்குகளோ, பறவைகளோ எந்த வானிலை ஆராய்ச்சி மையத்தையும் சார்ந்து தம் அறிவைப் பெறுவதில்லை.

சம்பவம் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றை உணரும் நுண்ணறிவு இயல்பிலேயே அவற்றிடம் அடங்கியிருக்கிறது. மனிதர்களை விட விலங்குகளும் பறவைகளும் எத்தனையோ வகைகளில் உயர்ந்தவைதான். அந்த பக்தருக்கு ஒன்று புரிந்தது. பாபாவைப் பொறுத்தவரை விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். எல்லாமே அவரது படைப்புத்தான் என்பதால், எல்லாவற்றின் மீதும் பாபாவுக்கு நிரந்தரமான தாய்ப்பாசம் உண்டு! ஒரு தாய் தன் குழந்தை மீது பாசம் செலுத்துவது இயல்புதான் என்றால், பாபா தான் படைத்த அத்தனை உயிரினங்கள் மேலும் அளவற்ற பாசம் செலுத்துவதும் இயல்புதானே? ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பதற்கும் மேலாகத் தானே பாபா தன் பக்தர்களைக் கனிவுடன் காப்பாற்றுகிறார்? இப்படி அந்த பக்தர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஜல் ஜல் என்ற சப்தத்துடன் ஒரு குதிரை ஷிர்டி மசூதியின் வாசலில் வந்து நின்றது. பாபாவை தரிசிக்கும் ஆவலோடு அவுரங்காபாத்தில்இருந்து வந்த ஒரு பிரமுகர் குதிரை மேலிருந்து தாவிக் கீழே இறங்கினார். பாபாவை தரிசித்த பின், அதே குதிரையில் தனது பயணத்தைத் தொடர விரும்பினார் அவர். ஆனால் என்ன சங்கடம்? குதிரை நகர மறுத்தது. ஓர் அடி கூட எடுத்துவைக்க அதற்கு மனமில்லை. அது சரி.

ஏற்கனவே பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட திட்டப்படி எல்லாம் நடந்தால் தானே குதிரை நகரும்? குதிரைக்கு நல்ல பசி போலிருக்கிறது என்று நினைத்தார் பிரமுகர். அதற்கு கொள்ளு கொடுத்தால் அது பசியாறும். பின் மீண்டும் பயணத்திற்குத் தயாராகிவிடும். ஷிர்டியில் எங்கிருந்தாவது கொள்ளை வாங்கி வர வேண்டும். கொள்ளை எதில் வாங்கி வருவது? பிரமுகரின் தோளில் ஒரு காலிப் பை இருந்தது. அதில் கொள்ளை வாங்கிவர எண்ணினார். அதன் பொருட்டு காலிப் பையைத் தோளிலிருந்து எடுத்தார். துõசியைப் போக்குவதற்காகக் கீழே உதறினார். சடாரென்று பையிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. தன்னிடம் கேள்வி கேட்ட பக்தரைப் பார்த்தார் பாபா. கீழே விழுந்த பல்லியின் அடுத்த செயல்பாடுகளைக் கவனிக்குமாறு கண்ணாலேயே கட்டளை இட்டார். சரசரவென வேகமாக ஊர்ந்து சென்ற அந்தப் பல்லி, சுவரில் ஏறியது. சுவரில் ஏற்கெனவே அதன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லியின் அருகே போய் நின்றது. அடுத்த கணம் இரண்டு பல்லிகளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. நீண்டநாள் கழித்தல்லவா அந்த சகோதரிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்? பல்லிகள் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. மகிழ்ச்சியோடு முத்தம் கொடுத்துக் கொண்டன. பாபாவின் சந்நிதானத்தில் அவை மிகுந்த மன நிறைவை அடைந்தன.

இந்த அபூர்வமான காட்சியைப் பார்த்த பக்தர் பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஆகிவிட்டதே? அவுரங்காபாத் எங்கே? ஷிர்டி எங்கே? இந்தப் பல்லி சகோதரிகள் எப்படிப் பிரிந்தார்கள்? இப்போது எப்படி இணைந்தார்கள்? எல்லாமே பாபாவின் திட்டப்படித் தான் நடக்கிறது என்றால், பாபாவைச் சரண்புகுந்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாமே? அனைத்தையும் பாபா பார்த்துக் கொள்வார் என்று நம்பிவிட்டால் ஒருவனுக்கு ரத்த அழுத்தமே தோன்றாதே! பிரமுகர் குதிரைக்குக் கொள்ளை வாங்கிக் கொடுத்துவிட்டு, தாம் வந்த அதே குதிரையிலேயே திரும்பிச் சென்றுவிட்டார். அவர் திரும்பிச் செல்லும்போது புதிதாய் ஷிர்டி வந்த பல்லி டிக்டிக் எனக் குரல் கொடுத்தது. பாபா சிரித்துக் கொண்டார். தன் சகோதரியைப் பார்க்கக் குதிரைச் சவாரி செய்து வந்த பெருமிதமல்லவா அதன் குரலில் தொனிக்கிறது? பாபாவின் லீலைகளில் இன்னொரு சம்பவம். தெய்வத்தை உணர விரும்பிய ஒரு செல்வந்தருக்கு, அவர் பணத்தைத்தான் தெய்வமாக எண்ணுகிறார் என்ற உண்மையை உணர்த்தி அவரைத் திருத்தினார் பாபா.

Advertisements

ஷிர்டி சாய் பாபா பகுதி – 24

 

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகிய ஆறு கெட்ட குணங்களையே பாபா தட்சிணையாகக் கேட்கிறார். பணத்தை அல்ல! உன்னிடம் பணம் இல்லையே என்று கவலைப்படாதே. இந்த ஆறு குணங்களை தட்சிணையாக பாபாவுக்குக் கொடுத்துவிடு. பின் அந்தக் கெட்ட குணங்கள் நிரந்தரமாக உன்னை விட்டுப் போய்விடும்! இந்த விளக்கத்தைக் கேட்ட பாபா, தட்கட்டின் கணவர் சொன்னதே சரி எனத் தலையாட்டினார். தட்கட்டின் விழிகளில் கண்ணீர்! பாபாவின் பாதங்களில் தனது ஆறு கெட்ட குணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக அவள் நெகிழ்ச்சியுடன் அறிவித்தாள். பாபாவைப் பூரண நம்பிக்கையுடன் நமஸ்கரித்து எழுந்தாள். பின் அவள் வாழ்க்கை ஆனந்தமயமாக அமைந்தது என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? பேராசையே பெரும்பாலானவர்களின் வாழ்வில் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதை பாபா அறிந்து வைத்திருந்தார். பேராசையை இயன்றவரை குறைப்பதன் பொருட்டே பக்தர்களிடம் பணத்தைக் காணிக்கையாக அதட்டிப் பெற்றார். ஆனால், பல நல்ல மனிதர்களிடம் பணமல்லாததைக் காணிக்கையாகக் கேட்டுப் பெற்று அவர்களை மேலும் நல்லவர்களாக்கும் வித்தையும் பாபாவுக்குத் தெரியும். தமது அடியவரான பேராசிரியர் நார்கேயிடம் பதினைந்து ரூபாய் தட்சிணை கேட்டார் பாபா.

மறுகணம் நார்கேயின் கண்களில் கண்ணீர் வழியத்தொடங்கியது. அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. பாபா கேட்டுவிட்டார். ஆனால் தன்னால் கொடுக்க முடியவில்லையே? அரே! உன்னிடம் பணம் இல்லையென்று எனக்குத் தெரியாதா? அப்படியிருக்க உன்னிடம் பணத்தை தட்சிணையாகக் கேட்பேனா? பணத்தைவிட உயர்ந்த ஒன்றை தட்சிணையாகப் பெற விரும்புகிறேன். நீ நாள்தோறும் படிக்கும் யோக வாசிஷ்டத்திலிருந்து தட்சிணை கொடு! என்று அதட்டினார் பாபா. அதாவது யோக வாசிஷ்டம் என்ற தத்துவ நுõலிலிருந்து பதினைந்து நீதிபோதனைகளை எடுத்துக்கொண்டு அந்த அடியவர் தமது வாழ்வில் அவற்றைத் தவறாமல் அனுசரித்து வரவேண்டும் என்பதே பாபா கேட்ட காணிக்கை. நார்கே நெகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். தன்னை மேலும் மேலும் நல்லவனாக்க பாபா எத்தகைய யுக்திகளையெல்லாம் கையாள்கிறார் என்றெண்ணி அவரின் மனம் தழுதழுத்தது. பாபாவை முன்னிட்டுப் பலர் பல விதமான வேண்டுதல்களை மேற்கொள்வார்கள். பாபாவின் புகழ் எங்கும் பரவியிருந்ததால் வேண்டுதல்களை மேற்கொள்ளும் அன்பர்கள் எண்ணிக்கையும் வளரத் தொடங்கியிருந்தது.

ஷிர்டியில் பாபாவை தரிசிக்க வரும் அன்பர்களின் கூட்டமும் அதிகமாகத் தொடங்கியது. மும்பை பகுதியில் அமைந்த தானே என்ற பிரதேசத்தில் சோல்கர் என்றோர் அன்பர் வசித்துவந்தார். பாபாவின் பெருமைகளைக் கேள்விப்பட்ட அவர் மிகுந்த பரவசம் கொண்டார். அவர் சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதிக வசதியில்லாதவர். உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை. அவர் ஒருநாள் மனத்தில் திடீரென ஓர் உறுதி ஏற்படுத்திக் கொண்டார். தற்காலிக ஊழியராக இருந்த அவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்றால் நிரந்தர ஊழியராக்கப்படுவார். அப்போது அவரது சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும். பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றிபெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி ஷிர்டி வருவேன். உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு ஷிர்டியில் கல்கண்டு வினியோகம் செய்வேன்! பாபாவைப் பூரணமாக நம்பிப் பிரார்த்தித்தவாறு தேர்வுக்குப் படிக்கலானார் சோல்கர். தேர்வுநாள் வந்தது. தேர்வு எழுதுவதற்கு முன்பும் தன் வேண்டுதலை ஒருமுறை மனத்தில் உறுதிப் படுத்திக்கொண்டார். பின் நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.

பாபாவை நம்பியவர்களை பாபா கைவிட்டதாகச் சரித்திரம் இல்லையே? தேர்வில் வெற்றிபெற்றார். அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சம்பள விகிதம் அமல்படுத்தப்பட்டு அவர் கைக்கு வரச் சில மாதங்கள் ஆகலாம். ஆனால், அதுவரை வேண்டுதலை நிறைவேற்றக் காத்திருப்பது சரியல்ல என்று சோல்கருக்குத் தோன்றியது. ஷிர்டி செல்லப் பணம் வேண்டுமே? அவ்வளவு பணம் எப்படி கிடைக்கும்? யோசித்து ஒரு முடிவுசெய்தார். செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க எண்ணினார். எனவே, தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என முடிவெடுத்தார். அதனால் சர்க்கரைக்கு ஆகும் செலவு மட்டுப்பட்டு அவரால் ஷிர்டிபயணத்திற்கான பணத்தைச் சிறிதுநாளில் சேகரிக்க முடிந்தது. தான் சேமித்த பணத்தின் மூலம் ஷிர்டி வந்த அவர், பாபாவைப் பார்த்தது பார்த்தபடி நின்றார். அவ்வளவு பரவசம் அவரைத் தொற்றிக் கொண்டது. மனித வடிவெடுத்த கடவுள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது. பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பாபா அவரையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை. பின் பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் சோல்கர். பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை அழைத்தார். அதோ அங்கே என் அன்பர்களுக்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்! என்றார் பாபா! கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த வாக்கியங்களின் முழுப்பொருள் புரியவில்லை.

ஆனால், புரிய வேண்டியவருக்கு அதன் உள்ளர்த்தம் முழுவதும் புரிந்தது. தாம் ஷிர்டி வருவதற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச்சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார். அவரை இரு கைகளால் துõக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்தார். இரவும் பகலும் எப்போதும் உன் இதயத்தில் தானே நான் இருக்கிறேன். நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேனே அப்பா! நீ என்னை நாடி வருவதற்காக இனிப்பைத் தியாகம் செய்தது எனக்குத் தெரியாதா என்ன? என்று அவரது பார்வை சொல்லாமல் சொல்லிற்று. ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தபோது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. இதென்ன? கெட்ட சகுனமா நல்ல சகுனமா? என்று கேட்டார் அவர்முன் அமர்ந்திருந்த பக்தர். இரண்டுமில்லை. இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது. அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் பாபா! என்னது! பல்லிக்கு சகோதரியா? கேட்டவரின் தலை சுற்றியது. ஆனால், பாபா சொன்னபடி அந்த சகோதரிப் பல்லி ஷிர்டி வந்து சேர்ந்ததே, அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்..

ஷிர்டி சாய் பாபா பகுதி – 23

 

தெய்வமேயான அவருக்கு அகில உலகமும் உரிமை உடையது என்கிறபோது, அனைவரின் பணமும் அவருடையதுதானே! சூரியனைக் கற்பூர ஆரத்தியால் வழிபடுவது மாதிரி தான் இதுவும். நம் பணமெல்லாம் பாபா கொடுத்த செல்வம்தான். அதில் ஏதோ கொஞ்சம் பணத்தை என்ன காரணத்திற்காகவோ தமக்குக் காணிக்கையாக பாபா உரிமையுடன் கேட்கிறார் என்பதை அடியவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்வதுபோல், பாபா பணத்தில் கொஞ்சத்தைக் கிள்ளி அவருக்கே காணிக்கையாக்கினார்கள். திருவண்ணாமலை மகான் சேஷாத்ரி சுவாமிகள், எந்தக் கடைக்குச் சென்று பொருட்களை வாரி இறைத்தாலும், அந்தக் கடையில் அன்று வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பார்களே? அதன்பொருட்டு கடைக்காரர்கள் சேஷாத்ரி சுவாமி தங்கள் கடைக்கு வரமாட்டாரா என்று காத்திருப்பார்களாமே? அதுபோல் பாபா தங்களிடம் காணிக்கை கேட்க மாட்டாரா என்று அடியவர்களும் காத்திருந்தார்கள். அவர் காணிக்கை கேட்டு அதைக் கொடுத்துவிட்டால், தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பினார்கள்.

இல்லாவிட்டாலும் தங்களுக்கு நிகழவிருந்த ஒரு கெடுதலை பாபா தங்களிடம் காணிக்கை வாங்கிக் கொண்டதன் மூலம் நீக்குகிறார் என்று புரிந்து கொண்டார்கள். எரிந்த தீக்குச்சிகள் கீழே கிடந்தால் அவற்றை எடுத்துச் சேமித்துத் தம் பைகளில் வைத்துக் கொள்வார் பாபா! பணத்தையும் எரிந்த தீக்குச்சியையும் அவர் ஒன்றாகத்தான் கருதுகிறார் என்பதை அடியவர்கள் புரிந்துகொள்வதற்காக இப்படிச் செய்தாரா? இல்லை, இந்த எரிந்த தீக்குச்சிபோல் மனித உடலும் ஒருநாள் எரிந்து பயனற்றதாகப் போகப்போகிறது எனக் காட்டி அடியவர்களுக்கு வாழ்வின் நிலையாமையை போதித்தாரா? யார் அறிவார்! தொடக்க காலத்தில் பாபா யாரிடமும் காணிக்கை கேட்டதில்லை. ஆனால், யாராவது ஒரு பைசா கொடுத்தால் அதை வாங்கி ஞாபகமாகத் தம் பையில் போட்டுக் கொள்வார். இரண்டு பைசா கொடுத்தாலோ திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு அதை கொடுத்தவரிடமே திரும்பக் கொடுத்துவிடுவார். யோகி ராம்சுரத்குமார் தம்மைப் பிச்சைக்காரர் என்று சொல்லிக்கொள்வாரே? அதுபோல் பாபாவும் தம்மைக் கருதினாரா? ஒரு பிச்சைக்காரர் ஒரு பைசா பெற்றுக் கொள்வதுதான் சரி என்பது அவர் கருத்தா? இதெல்லாம் விளங்கிக் கொள்ள இயலாத புதிர்கள்.

பாபா தாம் பெற்ற காணிக்கைக் காசில் விளக்கெரிக்க எண்ணெய் வாங்குவதுண்டு. தண்ணீராலேயே விளக்கெரிக்க முடிந்தவர் ஏன் காசு கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பது ஒரு கேள்வி. இயற்கையின் நியதிகளை சில விசேஷ சந்தர்ப்பங்களில் மீறலாமே அன்றி மற்றபடி இயற்கை நியதிகளுக்குக் கீழ்ப்படிவதே சரி என அவர் கருதியிருக்கலாம். தாம் வகுத்த விதிகளுக்குத் தாமே கீழ்ப்படியாவிட்டால் எப்படி என்றும் அவர் எண்ணியிருக்கலாம். அவர் பிச்சை எடுத்துத்தான் உணவுண்டார். எனவே அவருக்குச் செலவு என்று எதுவும் கிடையாது. பணத்தைக் காணிக்கையாகப் பெற்றாலும் பணத்தால் அவர் அடைந்த தனிப்பட்ட பயன் ஒன்றுமில்லை. தாம் பெற்ற பணத்தையெல்லாம் பணம் தேவைப்படும் எளியவர்களுக்கு அவர் உடனுக்குடன் வழங்கிவிடுவார். ஒருநாளில் அவர் எவ்வளவு காணிக்கை பெற்றாலும் அவற்றையெல்லாம் உடனே தேவைப்படுபவர்களுக்கு வழங்கிவிடுவதால், மறுநாள் பொழுது விடிந்ததும் மீண்டும் பழையபடி அவர் ஏழைப் பக்கிரிதான். பின்னாட்களில் ஆயிரமாயிரம் ரூபாய்களைக் காணிக்கையாகப் பெற்றார் பாபா. ஆனால், அவர் ஸித்தி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன. துறவி, குழந்தை, நோயாளி மூவரையும் வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என்று இந்திய மரபு சொல்கிறது. துறவியைப் பராமரிக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை. குழந்தை, பெற்றோரின் சொத்து மட்டுமல்ல, சமுதாயத்தின் சொத்து. நோயாளிக்கு திடீர்ச் செலவு வரும். எனவே இம்மூவரையும் பார்க்கும்போது ஏதேனும் கையில் கொடுத்துப் பார்ப்பதை ஒரு வழக்கமாக நாம் பின்பற்றி வருகிறோம்.

அதன்படி துறவியான பாபாவைப் பார்க்க வருபவர்கள் பூ, பழம், இனிப்பு போன்றவற்றையோ காணிக்கைப் பணத்தையோ கொண்டுவந்து  தருவது உண்டு. காணிக்கைப் பணத்தை பாபா அடியவர்கள் முன்னிலையிலேயே தர்மம் செய்தது ஏன்? தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை அடியவர்களுக்கு போதிக்கத்தான். தாங்கள் பெரிதும் நேசிக்கும் பணத்தைக் காணிக்கையாகக் கொடுக்க முன்வருவதன் மூலம், பணத்தின் மேல் உள்ள பற்று அடியவர்களுக்குக் குறைய வேண்டும் என்பதும் பாபாவின் எண்ணம். பாபாவுக்குக் காணிக்கை கொடுத்தவர்களுக்கு ஏராளமான செல்வம் வந்துசேரும். பாபா சிலரிடம் வற்புறுத்திக் காணிக்கை கேட்டு வாங்கினால் கொடுத்தவருக்கு மிகச் சில நாட்களில் பதவி உயர்வு வரும். இதையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்த அடியவர்கள் பாபா கேட்ட காணிக்கைப் பணத்தை மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள். மராத்திய நடிகரான கணபதிராவ் போடஸ், சுயசரிதை எழுதியிருக்கிறார். அதில் அவர் தம் குரு பாபாவைப் பற்றிய பல செய்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பாபா அவரிடம் திரும்பத் திரும்ப தட்சிணை கேட்டது. போகும்போதெல்லாம் அதட்டி தட்சிணை வாங்கிக் கொள்வாராம். வாங்கிய பணத்தையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம்.

ஏறக்குறைய அவரின் பணப் பையையே பாபா காலியாக்கி விட்டாராம். ஆனால், பின்னாளில் பாபாவுக்குக் காணிக்கை கொடுத்ததைப் போல் ஆயிரம் மடங்கு செல்வம் அவரிடம் தேடி வந்து குவிந்ததாம். தன்னிடம் அதிகப் பணம் சேர்வதற்குத் தடையாக இருந்த முன் வினையைத் தனக்குக்காணிக்கை கேட்டுப் பெற்றுக் கொண்டதன் மூலம் பாபா அழித்து விட்டார் என்றும், அதனால்தான் தன்னால் மாபெரும் செல்வந்தனாக முடிந்தது என்றும் அந்த நடிகர் குறிப்பிட்டிருக்கிறார். சிலர் என்ன வற்புறுத்தி தட்சிணை கொடுக்க முயன்றாலும் பாபா  சீற்றத்தோடு அதை மறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. விலை மதிப்புள்ள தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை யாரேனும் காணிக்கையாகக் கொண்டுவந்தால் பாபா சீறுவார். அவற்றை ஏற்க மாட்டார். வீட்டில் இவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும் என நினைத்து நேரில் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் முதலில் அந்த அன்பர் மனத்தில் நினைத்ததைக் கூறி அதை மட்டுமே ஏற்பார். சிலர் பாபாவைச் சந்திக்க சந்தர்ப்பம் அமையாவிட்டால், நண்பர்களிடம் காணிக்கை கொடுத்தனுப்புவார்கள். கொடுத்தனுப்பப்பட்ட காணிக்கைப் பணத்தைத் தர அந்த நண்பர் மறந்துவிட்டால் பாபா நினைவுபடுத்தி காணிக்கையைப் பெற்றுக் கொள்வார். ஒருமுறை தட்கட் என்ற பெண்மணி, தம் கணவருடன் பாபாவை தரிசிக்க வந்தாள். ஆறு ரூபாய் தட்சிணை கொடு! எனக் கேட்டார் பாபா. பணம் இல்லையே என்ற அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. பாபா, அவள் கணவரைப் பார்த்து, ம்! நீ சொல்! என்று கட்டளையிட்டார். பாபாவின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட கணவர் என்ன சொன்னார்?…

ஷிர்டி சாய் பாபா பகுதி – 22

 

மீதித்தொகை ரகசியத்தை அறியும் முன், வாடியா பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்து விடுவோம்.நாந்தேட் கிராமத்தில் வசித்தவர், பார்சி மில் காண்டிராக்டர் ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா. எல்லாச் செல்வங்களும் இருந்தன, ஒரே ஒரு செல்வத்தைத் தவிர. அதுதான் மக்கட்செல்வம். தமக்கு ஒரு குழந்தையில்லையே என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவர் முழுமையான மகிழ்ச்சியோடு இருக்கக் கூடாது என்பது இயற்கையின் திட்டம்போலும். அவரை மக்கள் பெரிதும் மதித்தனர். காரணம் அவர் தர்மசீலர். ஏழை எளியவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்துவந்தார். ஆனால், தமக்கு ஒரு குழந்தையில்லாதது குறித்து அந்தரங்கமாக அவர் பெரிதும் வருந்தி வருகிறார் என்பதை மக்கள் அறியவில்லை.  நாட்கள் செல்லச் செல்ல அல்லும் பகலும்அவரை இந்தச் சிந்தனைதான் ஆக்கிரமித்துத் துன்புறுத்தியது. பணி செய்துகொண்டே இருப்பார். திடீரெனத் தமக்குப் பின் தம் தான தர்மங்களைத் தொடர,  வாரிசு இல்லையே என்ற உண்மை நினைவு வரும். அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்படும். அப்படியான ஒரு தருணத்தில் அவரது உற்ற நண்பரான தாஸ்கணு, ஏன் இந்தப் பெருமூச்சு? என அன்போடு வினவினார்.

நண்பரிடம், வாடியா தம் உள்ளத்தை மறைக்க விரும்பவில்லை. தசரதருக்கு இருந்த மனக்குறைதான் எனக்கும் இருக்கிறது. ஒரு குழந்தை எனக்கில்லை என்ற எண்ணம் என்னைத் துயரில் ஆழ்த்துகிறது, என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். பாபாவின் பரம பக்தர் தாஸ்கணு. பாபா நினைத்தால் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தக்கூடியவர் என்பதை அவர் அறிவார். எனவே அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார். தசரதருக்குக் குறையிருந்தது உண்மைதான். ஆனால் ரிஷ்யசிருங்கர் மூலம் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து குறை தீர்ந்ததே? ஸ்ரீராமர் அல்லவா மகனாய்ப் பிறந்தார்? பாபாவைச் சென்று தரிசிப்பது என்பது புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்குச் சமானம். பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு  கிட்டும் என்றார் தாஸ்கணு. கடலில் மூழ்கித் தத்தளிப்பவனுக்கு ஒரு பற்றுக்கோடு கிடைத்த மாதிரி மகிழ்ந்தது வாடியாவின் மனம். அவர் ஷிர்டி செல்ல முடிவெடுத்தார். சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு ஷிர்டி புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டார். ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார்.

தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பியது பாபாவின் பார்வை. எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு! என்றார் பாபா உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா. இந்த சந்தர்ப்பத்தில் தான், அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!என்றார் பாபா அதட்டலுடன். வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே? ஆனால், பாபா எதுசொன்னாலும் அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என அவர் ஏற்கனவே தாஸ்கணு மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணாவைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என நேரடியாகவே பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார். மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.

நண்பர் தாஸ்கணுவிடம் நடந்தது அனைத்தையும் வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார். தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது. சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! என்றார் தாஸ்கணு. வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர். அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதிநான்கு அணாவாக இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை! மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார்!

எல்லா நல்லவர்களின் இதயத்திலும் குடியிருக்கும் இறைவன் பாபாவே என்பதையும், எல்லா நதி நீரும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா நற்செயல்களும் இறுதியில் பாபாவையே போய்ச் சேர்கின்றன என்பதையும் இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாக்கி விட்டார். வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், பாபா ஏன் தட்சிணை கேட்டார்? பாபா சரிதத்தில் அவர் அன்பர்கள் பலரிடமும் தட்சிணை கேட்டது பற்றிய குறிப்புகள் வருகின்றன. பணத்தின் மேல் அறவே பற்றில்லாமல் இருப்பவர் தானே தூய துறவி! ராமகிருஷ்ண பரமஹம்சர், வலது கையில் பணத்தையும் இடது கையில் மண்ணையும் வைத்துக்கொண்டு பணம் மண், மண் பணம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவை இரண்டையும் கங்கையில் வீசி எறிந்தார் என்பதை அவர் சரிதம் சொல்கிறது. வள்ளலார் போன்ற உயர்நிலைத் துறவிகள் பணத்தை ஒருசிறிதும் லட்சியம் செய்யாமல் வாழ்ந்தார்கள். அப்படியிருக்க பாபா தம் அடியவர்களிடம் காணிக்கை கொடு என்று கேட்டது ஏன்?….

ஷிர்டி சாய் பாபா பகுதி – 21

 

கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதும், அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும்தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. பாபாவின் லீலைகள் பல்லாயிரம். அவற்றின் சூட்சுமம் அறிந்தவர் யார்? கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்தார். அன்று காலை சமைத்த உணவின் மீதி. இது இப்போது தன் கண்ணில் மீண்டும் மீண்டும் படுவானேன்? பாபாதான் இக்காட்சியைத் தனக்குக் காட்டுகிறாரோ? உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று, பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.

ஆனால், பாபாவின் சாம்ராஜ்யத்தில் என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கும்.  கடலிலிருந்து அருவி நீர்,  மலைமேல் ஏறிப் போனாலும் போகும். நெருப்பைத்  தொட்ட அன்பர்களுக்கு, பாபா நினைத்தால் அது கூட குளிர்ச்சியாகத் தான் இருக்கும். எனவே, தன் வியப்பிலிருந்து விடுபட்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய், நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள்.

கண்பத்தின் இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன. இந்த நிகழ்வின் பின்னணி என்ன சொல்கிறது? பாபாவின் செயமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை தான். ஆனால், அவற்றின் பின்புலத்தில் நாம் எளிதில் கண்டுணர இயலாத ஓர் ஆன்மிக விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது ஆன்மிக விஞ்ஞானத்தின் அடிப்படை விதி. மூட நம்பிக்கைகளின் தொகுப்பாக, இன்றிருக்கும் பல ஆன்மிக விஷயங்கள் மாறிப் போனாலும், உண்மையான ஆன்மிகம் என்பது, உளவியல் சார்ந்த விஞ்ஞானம்தான் என்பதை அடியவர்களின் வாழ்வு நமக்குத் தொடர்ந்து உணர்த்தி வருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்ச்செயல் உண்டு என்கிறது பவுதிகம் சார்ந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இது பவுதிக விதி மட்டுமல்ல, நம் வாழ்க்கை விதியும் கூட. ஒருவருக்கு ஆயுள் நூறு என்று வைத்துக்கொள்வோம். அவர் வாழ்வின் முற் பாதி  என்பது முதல் ஐம்பது ஆண்டுகள். பிற்பாதி என்பது அடுத்த ஐம்பது ஆண்டுகள். முதல் பாதியில் அவர் செய்த நற்செயல்கள்மற்றும் தீய செயல்களின் விளைவுகளைத் தான் அவர் தன் வாழ்க்கையின் பிற்பாதியில் அனுபவிப்பார்.

முதல் பாதியில் முயன்று கல்வி கற்றதின் விளைவையும் கடினமாக உழைத்ததின் விளைவையும் பிற்பாதியில் அவர் பொருளாதாரப் பலனாகப் பெறுவார். முதல் பாதியில் கெட்ட பழக்கங்களால் அவர் பீடிக்கப்பட்டிருந்தால் பிற்பாதியில் நோய் அவரைத் தாக்கும். இதை சொந்த அனுபவத்திலும், பிறரைப் பார்த்தும் நாம் உணரலாம். ஆனால், எல்லா நிகழ்வுகளையும் இப்படிப் பொருத்திப் பார்த்து விடை கண்டுவிட  இயலாது. ஒருவருக்கு ஆடிசம் குறைபாடுள்ள குழந்தை பிறக்கிறது. நல்ல பழக்கங்கள் மட்டுமே கொண்டுள்ள இன்னொருவருக்குப் புற்றுநோய் வருகிறது. இதற்கெல்லாம் ஆன்மிக விஞ்ஞானம் என்ன விடை சொல்கிறது? இவர்களைப் பொறுத்தவரை முற்பாதி என்பது முற்பிறவி. பிற்பாதி என்பது இந்தப் பிறவி. முற்பிறவியின் நன்மை தீமை ஆகிய இருவினைகளின் பலன்களையும் அவர்கள் இந்தப் பிறவியில் அனுபவிக்கிறார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல கெட்ட பழக்கங்கள் உடைய ஒருவர் நீண்ட ஆயுளோடு இந்தப் பிறவியில் வாழ்கிறார் என்றால், முற்பாதியான  முற்பிறவியில் அவர் செய்த நல்வினைகளின் பலனை பிற்பாதியான இந்தப் பிறவியில் அவர் அறுவடை செய்கிறார் என்றே கருதவேண்டும். கண்பத் அந்த நாயை முற்பிறவியில் பட்டினி போட்டாரோ என்னவோ?

அந்த நாய் அவரிடம் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்து உரிய ஊதியம் கொடுக்கப்படாமல் வருந்தியதோ என்னவோ? யாரறிவார்? அந்தப் பாவத்தின் காரணமாக இப்பிறவியில் கண்பத்திற்கு வந்த மலேரியா, அந்த நாய்க்குத் தயிர்ச்சோறு கொடுத்தவுடன் விலகியதோ? ஒருவரின் முற்பிறவியைக் கூடக் கண்டுணரும் வல்லமை பெற்ற சித்தர் அல்லவா பாபா? இப்படியெல்லாம் பலவிதமாக யோசித்து பக்தியில் நெகிழ்ந்தார் கண்பத். பாபாவின் இன்னொரு லீலையை உற்று நோக்குவோம்.ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர், நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் என்ற இடத்தில் வசித்தவர். பெரும் செல்வந்தரான அவருக்குப் புத்திர பாக்கியம் அமையவில்லை. மனம் வருந்திய அவர், தம் நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க முடிவுசெய்தார். பாபாவுக்குத் தட்சணையாகக் கொடுக்க வென்று ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டார். பாபாவைச் சந்தித்து மெய் மறந்து அவர் வழிபட்டபோது, பாபா அவரிடம் தட்சிணை கேட்டார். நீ ஐந்து ரூபாய் கொடுக்க எண்ணியிருக்கிறாய். ஆனால், ஏற்கனவே எனக்கு நீ மூன்று ரூபாயும், பதினான்கு அணாவும் கொடுத்துவிட்டாய். மீதித் தொகையை இப்போது கொடு! என்றார். வாடியாவுக்கு வியப்பு! இவரை இப்போது தானே முதன் முதலாக தரிசிக்கிறோம்…ஆனால், ஏன் இப்படி சொல்கிறார்…வியப்பு விலகாவிட்டாலும், அவர் கேட்டபடியே மீதித் தொகையைக் கொடுத்தார். முதன் முறையாக ஷிர்டி வரும் அவர் எப்படி முன்னரே தட்சணை கொடுத்திருக்க முடியும்? ஆனால். மிக விரைவில் அது எப்படி என்ற விவரம் வாடியாவுக்குப் புரியவந்தபோது. அவர் மனம் மலைப்பில் ஆழ்ந்தது.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 20

 

இந்த மருத்துவர் அப்படி ஓடியதற்கு காரணம் உண்டு. சாயி அமர்ந்திருந்த இடத்தில் புன்முறுவலுடன் அமர்ந்திருப்பது யார்? தசரத குமாரனான ராமன் அல்லவா? கையில் வில்லோடும், தலையில் ஒளிவீசும் மகுடத்தோடும், சித்திரத்தில் அலர்ந்த  செந்தாமரை போன்ற முகத்தோடு காட்சி தருகிறானே என் ராமன்? ராமா! எங்கெங்கோ உன்னைத் தேடினேன். கடைசியில் இங்கேயா இருக்கிறாய்? பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் நடந்த உன் பாதங்கள் நொந்திருக்குமே அப்பா? நான் பிடித்து விடவா? மருத்துவர் சடாரென்று பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார். சரணாகதி தத்துவத்தை நிலை நிறுத்தியவன் அல்லவோ ராமன்? வேடன் குகனானாலும், குரங்கு சுக்ரீவன் ஆனாலும், அரக்கன் விபீஷணன் ஆனாலும் தன் பாதங்களில் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளல் அல்லவா அவன்! காகத்திற்கும் அடைக்கலம் தந்த காகுத்தன். அணிலின் முதுகைப் பரிவோடு தடவி அருள்புரிந்த அண்ணல். உன் பாதங்களில் சரணடைந்த என்னையும் காத்தருள் என் தெய்வமே….!

இப்படி நினைத்தவாறே நிமிர்ந்து பார்த்த மருத்துவர் திடுக்கிட்டார். சடாரென்று தன் கைகளை உதறினார். அங்கே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தது பாபா தான். ராமனல்ல. அப்படியானால் சற்றுமுன் கண்ட காட்சி பொய்யா? என் கண் என்னை ஏமாற்றியதா? அதுசரி… ஆலயத்தில் இருக்கும் ராமபிரான், எப்படி இங்கே இருப்பான்? மருத்துவருக்குத் தலை சுற்றியது. எதுவும் பேசாமல் விறுவிறுவென்று தான் தங்கியிருந்த இடம் நோக்கிச் சென்றார். பாபா ராமனாக உருமாறியது உண்மையா.. இல்லை பிரமையா? இதன் சூட்சுமத்தை பாபாவே அறிவிக்கட்டும். அதுவரை தான் உணவு உண்ணப் போவதில்லை. யாராவது வற்புறுத்தி அழைத்தாலன்றி, மசூதிக்கும் போகப் போவதில்லை. திடசித்தத்தோடு ஒரு முடிவெடுத்த மருத்துவர் எதையும் சாப்பிடாமல் விரதமிருக்கலானார். மூன்று நாட்கள் கடந்தன. பசி வயிற்றைக் கிள்ளியது. வயிறு என்னைக் கவனி கவனி எனக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. ஆனாலும், அவர் வயிற்றின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் உண்ணாவிரதம் இருப்பதையோ, தன் எண்ணங்களையோ யாருக்கும் தெரிவிக்கவுமில்லை. நான்காம் நாள் அதிகாலை அவரைத் தேடி வந்தார், ஷிர்டி அருகே கான்தேஷ் என்னும் கிராமத்தில் வசிக்கும் அவரின் நண்பர்.

அவர் இதுவரை பாபாவை தரிசித்ததில்லை. பாபாவை தரிசிக்க விரும்பிய அவர், மசூதிக்கு வாருங்கள் என்று மருத்துவரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார். அவர் வற்புறுத்தலால் அவருடன் மசூதி  நோக்கி நடந்தார் மருத்துவர். ராமரும் பாபாவும் ஒன்றுதானா? இந்தக் கேள்விக்கு அன்று விடை கிடைக்குமா? விடை கிடைக்கும் வரை தன் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டியதுதான். மருத்துவர் நண்பரோடு மசூதிக்குள் நுழைந்தார். மருத்துவரின் நண்பரைப் பார்த்த பாபா, என்ன, கான்தேஷில்இருந்து வருகிறீர்களே? கான்தேஷில் எல்லோரும் நலமா? என்று அக்கறையோடு விசாரித்தார்! அவர் கான்தேஷிலிருந்து வருகிறார் என்று பாபாவுக்கு எப்படித் தெரிந்தது? நண்பரும் மருத்துவரும் வியப்போடு பாபாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாபா மருத்துவரிடம் பேசலானார்: இப்படிப் பிடிவாதம் பிடித்தால் எப்படி? கடைசியில் உன்னை அழைத்துவர கான்தேஷிலிருந்து ஒருவர் வர வேண்டிஇருக்கிறது! நீயே மருத்துவன். உடலுக்குச் சாப்பாடு எவ்வளவு முக்கியம் என்று உனக்குத் தெரியாதா? வேளாவேளைக்குச் சரிவரச் சாப்பிட வேண்டும் என்று நீயல்லவா மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்? தான் உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பாபாவுக்கு எப்படித் தெரிந்தது? வியப்போடு பாபாவை நிமிர்ந்து பார்த்தார் மருத்துவர். அவரை நோக்கிப் பரிவோடு புன்முறுவல் பூத்தது – பாபாவின் முகமல்ல, ராமனின் திருமுகம்!

மருத்துவரின் விழிகளிலிருந்து கண்ணீர் பெருகியது. எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும், இறைவன் உறையும் புனிதத்தலங்கள்தான் என்பதையும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் உறைவது ஒரே தெய்வ சக்திதான் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டார் மருத்துவர். பாபாவைப் பற்றிய சந்தேக நோயால் பீடிக்கப்பட்டிருந்த மருத்துவரின் மனம், அன்று முழு ஆரோக்கியம் அடைந்தது. அன்று தொட்டு அவர் பாபா பக்தரானார். பாபாவைத் தேடிவருபவர்களில், வியாதி குணமாக வேண்டும் என்னும் கோரிக்கையோடு வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். பலதரப்பட்ட மருந்துகளை சாப்பிட்டும், குணமாகாத வியாதிகள் பாபாவின் தரிசனத்தால் குணமாவதை பக்தர்கள் அறிந்திருந்தார்கள். ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். மருத்துவர்கள் மேல் இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்தநம்பிக்கை அவர்களுக்கு அதிகம். பூட்டி என்பவருக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார். எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்டார்கள். அவருக்கு பாபா மேல் அளவற்ற பக்தி உண்டு. ஆனால், நேரில் சென்று பாபாவைத் தரிசிக்கும் அளவு அவர் உடலில்  தெம்பில்லை. கிழிந்த நாராகப் பாயில் படுத்திருந்தார். பாபா எவ்விதமேனும் அவரை அழைத்து வருமாறு, ஓர் அடியவரை அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.

பாபா! என்னைக்  காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா? என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் வார்த்தைகளுக்கு மந்திர சக்தி உண்டல்லவா? வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் அவரது அதட்டலால் பயந்திருக்க வேண்டும். அடுத்த கணமே அவரது நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின்திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். தன்னை ஒரே அதட்டலில் குணப்படுத்திய பாபாவின்கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது. பாபாவுக்கு கண்பத் என்றொரு பக்தர் உண்டு. அவர் கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்டார். பாபாவைச் சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார்.  பின் அந்தத் தயிர் கலந்த சோறை என்ன செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். அப்படிச் செய்வதற்கும், தன் நோய்க்கும் என்ன சம்பந்தம்? இப்படி செய்வதனால் தன் நோய் எப்படி குணமாகும்? எனப் பெரும் திகைப்பில் ஆழ்ந்தார் கண்பத்…..!

ஷிர்டி சாய் பாபா பகுதி – 19

 

பாபாவின் உருவம் காற்றில் கரைந்து மறைந்தது. பாபாவுக்கு பதிலாக, பாபா அமர்ந்திருந்த அதே இடத்தில், சாஸ்திரியின் குருவான அமரர் கோலப் ஸ்வாமியின் திருவுருவம் திடீரென்று தோன்றியது! கோலப் ஸ்வாமி எப்போதும் குங்குமப் பூ நிற உடை அணிவது வழக்கம். இப்போதும் அதே குங்கும வர்ண உடையில் தோன்றினார் அவர். பாபா ஏற்கனவே அணிந்திருந்த குங்குமப்பூ நிற உடை இப்போது கோலப் ஸ்வாமிக்கு என்னமாய்ப் பொருந்துகிறது! குங்குமப் பூ வண்ணத்தில் பாபா அன்று ஏன் உடை அணிய விரும்பினார் என்பதன் சூட்சுமம் இப்போதல்லவா புரிகிறது! சாஸ்திரியின் கண்களில் அருவிபோல் கண்ணீர்! ஆகா! என் குரு கோலப் ஸ்வாமி அமரராகி விட்டார் என்று வருந்தினேனே! அவர் ஸித்தி அடையவில்லை. பாபா வடிவில் உரு மாறியிருக்கிறார். அவ்வளவுதான். இதை  இத்தனை காலம் புரிந்து கொள்ளாமல் போனேனே? இதோ! நானும் பாபாவும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் தன் முந்தைய வடிவிலேயே காட்சி தருகிறாரே என் குரு! மெய்மறந்து நின்ற சாஸ்திரி, பாபாவைப் பார்த்துப் படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

நகைத்தவாறே, சாஸ்திரி அருகில் வந்தார் பாபா. இப்போது எனக்கு தட்சணை தருவதில் ஆட்சேபணை ஒன்றுமில்லையே? என்று கேட்பதுபோல் ஒரு பார்வை பார்த்து சாஸ்திரியை நோக்கிக் கைநீட்டினார். ரேகை பார்ப்பதற்காக நீட்டப்படாத கை, இப்போது தனக்குரிய தட்சணையைப் பெறுவதற்காக சாஸ்திரி முன் உரிமையுடன் நீண்டது. அந்த மலர்க்கரத்தில் சாஸ்திரி தன்னிடமிருந்த தட்சணை அனைத்தையும் கலகலவெனக் கொட்டினார். தட்சணைக் காசுகள் அவரது கண்ணீரால் நீராட்டப் பட்டிருந்தன. மசூதி என்றும், ஆலயம் என்றும் சாஸ்திரி மனத்தில் இருந்த வேறுபாட்டு உணர்வு முற்றிலுமாய் மறைந்தது. அன்றுமுதல் அவர் பாபாவை வழிபடலானார். அவர் நெஞ்சில் தம் குரு கோலப் ஸ்வாமி ஸித்தி அடைந்தது பற்றிய துயரம் மறைந்து, அவரே சாய்பாபாவாக உருமாறியிருக்கிறார் என்ற எண்ணத்தால் ஒரு நிம்மதி பரவியது. பாபாவின் இனிய மொழிகளைப் பற்றி என்ன சொல்ல! அவர் பல நேரங்களில் கண்ணால் பேசுவார். மவுனத்தாலும் பேசுவார். சில நேரங்களில் சொற்களாலும் பேசுவார். அவர் பயன்படுத்தும் சொற்களைப் பற்றி என்னென்பது! அவை தேனில் ஊறவைத்து வெளிப்படுத்தியதுபோல் செவிகளில் தித்திக்கும். உரையாடலின்போது அதிரப் பேசமாட்டார். மிருதுவாகப் பேசுவார். வார்த்தைகளுக்கு வலிக்குமோ, என்று யோசித்துப் பேசுவதுபோல் இருக்கும்.

சுருக்கமாக, எளிமையாக இருந்தாலும், அது ஆழமான கருத்துகளைக் கொண்டிருக்கும். மேற்பார்வைக்குப் புரியாததுபோல் தோன்றும் சில வார்த்தைகள், பின்னர்  யோசித்தால் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டதாய் விரிவடையும். பாபா பேசியவை அனைத்துமே கீதைதான். என்றும் நிலைத்திருக்கும் நீதிகளை அவரது பேச்சு புலப்படுத்தும். பேச்சில் தென்படும் உண்மையின் பேரொளி கேட்பவர்களின் இருண்ட மனங்களில்  வெளிச்சத்தைத் தோற்றுவிக்கும். பாமரர்க்கும் பண்டிதர்க்கும் ஒருசேரப் புரியும் ஆழமான பேச்சு அவர் பேச்சு. பண்டிதர்கள், பல ஆயிரம் நூல்களைப் படித்தாலும் கிடைக்காத அற்புதக் கருத்துகள் அவர் பேச்சில் கிடைப்பதைக் கண்டு வியப்பார்கள். பாமரர்கள் அவர் பேச்சையே வாழ்வின் வேதமாகக் கொண்டு அதன்படி வாழத் தலைப்படுவார்கள். பாபா, தம் பேச்சாலும், செய்கைகளாலும், நிகழ்த்திய அற்புதங்களாலும் மனிதர்களை மேலான வாழ்க்கை வாழுமாறு மாற்றிக் கொண்டே இருந்தார். இப்போதும் அவ்விதமே மாற்றிக் கொண்டிருக்கிறார். எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்தி உலகையே சொர்க்கமாக மாற்றிவிட வேண்டும் என்பதே பாபாவின் விருப்பம். என் அன்பர்களே! மாயைக்கு ஆட்பட்டு விடாதீர்கள். எது என்றும் உள்ளது, எது நிரந்தர ஆனந்தத்தைக் கொடுப்பது என்பதைத் தீவிரமாக யோசியுங்கள்.

அந்த வழியிலேயே சென்று உண்மையான பேரானந்தத்தைக் கண்டுகொள்ளுங்கள். முன்வினை காரணமாகத் துன்பங்கள் உங்களைப் பீடித்தால், சாயி சாயி என்று என் நாமத்தை விடாமல் சொல்லுங்கள். உங்கள் அனைவரையும், கர்மவினை சார்ந்து வருகிற துன்பங்களிலிருந்து மீட்கத்தானே நான் அவதரித்திருக்கிறேன். உங்களைத் துன்பங்களிலிருந்து காப்பதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? யார் அதிர்ஷ்டசாலியோ அவர்களே என்னை வழிபடுகிறார்கள். என்னைப் பூரணமாய் நம்புபவர்களை எந்தத் துயரும் வாட்டுவதில்லை! தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு பாபா கொடுக்கும் உறுதி மொழி இது. பாபா தம் அடியவர்களை ஒருபோதும் கஷ்டத்தில் இருக்க அனுமதித்ததில்லை. இக உலக நன்மைகள் அனைத்தையும் பக்தர்கள் விரும்பியதுபோல் வாரிவாரிக் கொடுத்து, பர உலக நன்மையையும் சேர்த்துத் தருவதே பாபாவின் அருள் நெறி. தம் அடியவர்கள், பக்தியால் தங்கள் உடலை வருத்திக் கொள்வதை பாபா அனுமதித்ததில்லை. அடியவர்கள் உள்ளன்போடு தன்னை வழிபட வேண்டும் என்பது மட்டுமே அவர் விரும்புவது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் தான், உண்மையான வழிபாடு என்பதே அவர் கருத்து.

ஒருமுறை மருத்துவர் ஒருவருடன் ஷிர்டிக்கு வந்தார் ஒரு பாபா பக்தர். அந்த மருத்துவர் அதுவரை ஷிர்டி வந்ததில்லை. அவரோ தீவிர ராம பக்தர். ராமரைத் தவிர வேறு யாரையும் வழிபடுவதில்லை என்பதில் அவர் திட சித்தத்ததோடு இருந்தார். என் இஷ்ட தெய்வம் ராமனிருக்க, இன்னொரு தெய்வம் எனக்கு ஏன் என்பதே அவர் கருத்து. உண்மையில் ஷிர்டிக்கு வர அந்த மருத்துவருக்கு விருப்பமே இல்லை. சாயி பக்தர் தான் அவரை வற்புறுத்தி அழைத்து வந்தார். ஆனால், சாயி பக்தர் அவரிடம் தீர்மானமாய்ச் சொன்னார்: பாபாவை வணங்குமாறோ, அவரை நீங்கள் ஏற்க வேண்டும் என்றோ உங்களை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். நானும் நீங்களும் உற்ற நண்பர்கள் அல்லவா! நான் பாபாவைப் பார்க்கச் செல்லும்போது, நீங்களும் என் நண்பராக உடன் வருகிறீர்கள். அவ்வளவே. இது என் நட்பைக் கவுரவிக்க நீங்கள் செய்யும் செயல். உங்கள் இஷ்ட தெய்வம் ராமன்தான் என்பதையும், நீங்கள் ராமரைத் தவிர யாரையும் வணங்குவதில்லை  என்பதையும் நான் அறிவேனே! பிறகு நீங்கள் மசூதிக்கு என்னுடன் என் நண்பராய் வர ஏன் தயங்கவேண்டும்? அவர் சொன்ன வாதம் சரியாகத்தான் இருந்தது. அவருடன், அந்த மருத்துவர் மசூதி நோக்கி நடந்தார். மசூதி நெருங்கியது. திடீரென தன்னுடன் வந்த பக்தரைத் தள்ளிவிட்டு, பாபாவை நோக்கி ஓடினார் அந்த மருத்துவர். அடடா! என்ன செய்யப் போகிறார் அவர்? அனைவரும் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.