இன்னிக்கி யாரெல்லாமோ டபுள் செஞ்சுரி அடிக்கான்… ஆனா, விதை சச்சின் போட்டது!

2010 பிப்ரவரி 24. அப்போது மம்தா பானர்ஜி ரயில்வே மினிஸ்டர். அன்று அவர் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருந்தார். வழக்கமாக, பட்ஜெட் விவரங்கள்தான் பத்திரிகைகளில் மறுநாள் தலைப்புச் செய்தியாகும். ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். மம்தாவின் ரயில்வே பட்ஜெட் முதல் பக்கத்தில் பெட்டிச் செய்தியானது.

கிரிக்கெட் கிரவுண்டுகளில் குவாலியர் அவ்வளவு பிரமாதமான ஸ்டேடியம் இல்லை. ஆனால், இந்த மும்பை மைந்தன் அந்த மத்தியப் பிரதேச நகருக்கு வரலாற்று முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தார். கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் அன்று கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை அள்ளிக் கொடுத்திருந்தார். சச்சின் அன்றி

சச்சின் 200

வேறு எவரால் இது சாத்தியம்?

அப்படி என்ன செய்தார்?
சிம்பிள்… ஒன் டேயில் டபுள்செஞ்சுரி. 200 அடித்த முதல் வீரர். அதுவும் இந்தியர். வேர்ல்ட் ரிக்கார்ட். படைத்தது நம் சச்சின். ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மட் தோன்றி 40 ஆண்டுகள் கழித்து, தனிநபர் ஒருவர் இரட்டைச்சதம் அடித்திருக்கிறார். நீண்ட காத்திருப்பு. நெடுநாள் பேசும் சாதனை. அதைப் படைத்தபோது சச்சின் வயது 36. கிரிக்கெட்டில் 20 ஆண்டுக் கால அனுபவம். கிட்டத்தட்ட இது ஓய்வை நெருங்கும் தருணம். இத்தருணத்தில் ஒரு உலக சாதனையா? ஆஃப் சைட், லெக் சைட் மட்டுமே தெரிந்த ரசிகனில் இருந்து, கிரிக்கெட்டை அக்குவேறு, ஆணி வேறாகப் பிரித்து மேயும் ஹர்ஷா போக்ளே வரை ஓஹோவெனப் புகழ்ந்தனர்.

பர்னல் வீசிய 46-வது ஓவரில் ‘ஷார்ட் ஃபைன் லெக்’ திசையில் ஒரு ‘ப்ளிக்’. அணிக்குக் கிடைத்தது இரண்டு ரன்கள். சச்சின் 195 நாட் அவுட். அரங்கம் ஆர்ப்பரித்தது. பாகிஸ்தானின் சயீத் அன்வர், ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவன்ட்ரி இருவரும் சச்சினுக்கு வழி விட்டு நின்றனர். ‘ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்’ – வர்ணனையாளர்கள் அலறினர். தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பெளச்சர், வேகமாக வந்து சச்சினுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். பொதுவாக பேட் கையில் இருக்கும்போது பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாத சச்சின் இந்தமுறையும் ஆர்ப்பரிக்கவில்லை. அவருக்குத் தெரியும். இதோ இன்னொரு மைல்கல். அதுவும் மிக அருகில்.

திக் திக் திக் நிமிடங்கள்
சச்சின் சதத்தை நெருங்கினாலே அவரது ரசிகனுக்கு உள்ளூற உதறும். இரட்டைச் சதத்தை நெருங்குகிறார். அதுவும் முதன்முறையாக… சொல்லவா வேண்டும்? 200 அடித்தால் உலக சாதனை. அடிப்பாரா? அடித்து விடுவார். இன்னும் முழுமையாக நான்கு ஓவர்கள் இருக்கின்றன. ஒருவேளை, 99 ரன்களில் அவுட்டாவது போல 199 ரன்களில் அவுட்டாகி விட்டால்? குழப்பம். அந்தத் தருணத்தில் எதிர்முனையில் இருந்த தோனி, விட்டு விளாசி, டென்ஷனை குறைக்கிறார். ஓகே. ரிலாக்சாக இருந்தால் ஈஸியாக அடித்து விடலாம். 49-வது ஓவர். ஸ்டெயின் வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி. அடித்தது தோனி. பரவாயில்லை. இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. இரண்டு பந்து கிடைத்தாலே போதும். அச்சோடா… கடைசி பந்தில் தோனி ரன் எடுத்து விட்டார்… அடேய்…

கடைசி ஓவர்… லெங்லெவ்டட் வீசிய முதல் பந்தில் சிக்ஸர். ‘டேய்… போதும்டா… சச்சினுக்கு ஸ்ட்ரைக் கொடு’ – இங்கிருந்து கத்தினான் ரசிகன். அடுத்த பந்தில் சிங்கிள். ஸ்ட்ரைக்கர் எண்டில் சச்சின். அதுவும் 199 ரன்களில்… கிரிக்கெட்டில் இதை விட டென்ஷனான தருணம் வேறு இருக்கிறதா என்ன? பாயின்ட் திசையில் சிங்கிள். அப்பாடா… 200. வழக்கம்போல ஹெல்மெட்டைக் கழற்றி அமரரான தந்தைக்கு அர்ப்பணம் செய்து, முதல் இரட்டைசதத்தைக் கொண்டாடினார் சச்சின். மைதானத்தில், டிவியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் கண்களில் திரைகட்டியது நீர். மனதில் நிம்மதி.

சச்சின் 200

என்னென்ன வார்த்தைகளில் புகழ வேண்டுமோ அத்தனை வார்த்தைகளிலும் புகழாரம். ‘Endulkar’ என தலைப்பிட்ட பத்திரிகை ‛IMMORTAL AT 200’ என உச்சிமுகர்ந்தது. வரிசைகட்டி நின்றன வாழ்த்துகள். ‘‘சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே. யாரோ ஒருவர் (சார்லஸ் கோவன்ட்ரி) என் சாதனையை ‘பிரேக்’ செய்ததாகக் கேள்விப்பட்டேன். அவர் யாரென்றே தெரியாது. தற்போது மும்பையைச் சேர்ந்த என் நண்பன் முறியடித்திருப்பது மகிழ்ச்சி’’ என்றார் சயீத் அன்வர். ‘‘ஜிம்பாப்வே – வங்கதேசம் மோதலுக்கும், இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது. சில நாள்கள் அந்த சாதனையில் இருந்ததில் மகிழ்ச்சி. 200 ரன்கள் என்ற இமாலய சாதனைக்கு சச்சினை விட தகுதியானவர் வேறு யாருமில்லை’’ என்றார் கோவன்ட்ரி.

ஒருவகையில் கோவன்ட்ரி சொல்வது அத்தனை உண்மை. 20-20 ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலம். ஒண்டே மேட்ச்சில் 200 என்பது அசாதாரணம் இல்லை. சச்சின் அதை வலுவான தென் ஆப்ரிக்க அணியிடம் அடித்ததுதான் விஷயம். ‘பேட்டிங் பவர்பிளே’ எடுத்த 35-வது ஓவரில் ஸ்டெய்ன், சச்சினை அவுட்டாக்க எல்லா வழிகளிலும் முயற்சித்தார். ‘யார்க்கர்’ வீச முயல, அது ‘ஃபுல் டாஸ்’ ஆக, அதை சச்சின் ‘ஸ்கொயர் லெக்’ திசையில் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் ரன் இல்லை. ஐந்தாவது பந்தில் ‘மிட் விக்கெட்’ – ‘ஸ்கொயர் லெக்‘ இடையே ஒரு ‘ஃப்ளிக்’. பந்து பவுண்டரிக்குச் செல்ல, ஸ்டெய்ன் தோள்களைச் சிலுப்பி, விரக்தியில் தலையை அசைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

சச்சின் 200

காலிஸ் பந்துவீசும் முன் ஸ்லிப்பில் இருந்தவர்களை எல்லாம், 15 யார்டு வட்டத்துக்குள் கேட்ச் பிடிக்கும் பொசிஷனில் நிறுத்தினார். தென் ஆப்ரிக்கா ஃபீல்டிங் பற்றி சொல்லவா வேண்டும்? பட்டினி கிடக்கும் நாய் எலும்பைக் கவ்வுவது போல பாய்வார்கள் தென் ஆப்ரிக்க ஃபீல்டர்கள். அடுத்தடுத்து அதே லெங்த்தில், அதே திசையில் போட்டால்  எப்படியும் சச்சின் சிக்குவார் என்பது காலிஸ் கணிப்பு. அனுபவம். ஆனால், சச்சின் தன் ‘ட்ரைவ்’-களால், தென் ஆப்ரிக்க ஃபீல்டர்களை ஓட விட்டுக் கொண்டே இருந்தார். சந்தித்த 147 பந்துகளில் எதிரணிக்கு ஒரு ‘சான்ஸ்’ கூட கொடுக்கவில்லை. ஒவ்வொரு பந்தையும் அவ்வளவு கவனமாக எதிர்கொண்டார். ஒவ்வொரு ரன்னையும் அவ்வளவு நுணுக்கமாக எடுத்தார். 111 ரன்கள் எடுத்தபின்புதான், ‘லாங் ஆன்’- ல் ஒரு சிக்ஸர்  பறக்க விட்டார். இன்னும் ஏராளம் இருக்கிறது அந்த இன்னிங்ஸ் பற்றிச் சொல்ல.

சச்சினுக்குப் பின், சேவாக், ரோகித் சர்மா (இரண்டுமுறை), கிறிஸ் கெய்ல், மார்ட்டின் குப்டில் இரட்டைச்சதம் அடித்து விட்டனர். T-20 ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் இனி, ஒண்டே ஃபார்மட்டில் டபுள் செஞ்சுரி என்பது சாதாரணம். யார் வேண்டுமானாலும் எளிதாக அடிக்கலாம். ஆனால், அதற்கான விதை சச்சின்தூவியது.

நன்றி – விகடன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s