குழந்தைகளுக்காக ஒரு ஹெல்ப்லைன்!

H FOR HELPLINE

யல் 1098…

‘‘ஆன்ட்டி, என் ஃப்ரெண்ட் ரோஹித் பரீட்சையில் மார்க் கம்மியா வாங்கிட்டான். வாழவே பிடிக்கலைனு தப்புத்தப்பாப் பேசிட்டு இருக்கான். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. நான் என்ன பண்றது?”

“சார், என் அக்கா டென்த் படிக்கிறா. வீட்டுல  கட்டாயப்படுத்தி, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க. என் அக்காவைக் காப்பாத்த ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்!’’

“ஹலோ, என் பாட்டி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. வீட்டில் நான் மட்டும்தான் இருக்கேன். எதிர் ஃப்ளாட்டிலும் யாரும் இல்லை. ஹெல்ப் பண்ண முடியுமா?’’

“ஹலோ அங்கிள், என் ஃப்ரெண்டை அவங்க வீட்டில் எப்பவும் அடிச்சுக்கிட்டே இருக்காங்க. அவன் ரொம்ப கஷ்டப்படறான்.’’

‘இப்படி ஒவ்வொரு நாளும், நூற்றுக்கணக்கில் அழைப்புகள் வருகின்றன. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். சைல்டு ஹெல்ப்லைன் பற்றிய விழிப்புஉணர்வு குழந்தைகளிடம் அதிகரித்துள்ளது’ என்கிறது சைல்டுலைன் இந்தியா அமைப்பு. யார் இவர்கள்? இவர்களால் நமக்கு என்ன பயன்?

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை உடனடியாகத் தீர்ப்பதற்காக 1996-ம் ஆண்டு, குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உதவியுடன் ஜெரூ பில்லிமோரியா (Jeroo Billimoria) என்பவரால், ஒரு ஹெல்ப்லைன் மும்பையில் தொடங்கப்பட்டது. பின்னர், மத்திய அரசின் தொழில்நுட்பத் துறையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் பலவும் ஒன்றிணைந்து ‘சைல்டுலைன் இந்தியா ஃபவுண்டேஷன்’ (Childline India Foundation) என்ற அமைப்பை உருவாக்கி, இந்தியா முழுவதும்  விரிவுபடுத்தினார்கள். ஹெல்ப்லைன் எனப்படும் பத்து, ஒன்பது, எட்டு (1098) என்ற இந்த இலவச அழைப்பில் நமது பிரச்னைகளைச் சொல்லலாம்.

24 மணி நேரமும் இயங்கும் இந்த அழைப்பைத் தொடர்புகொண்டால், ஒரு ஆன்ட்டியோ, அங்கிளோ பேசுவார்கள். நீங்கள் சொல்லும் பிரச்னையை பொறுமையாகக் கேட்பார்கள். போனிலேயே தீர்க்கும் பிரச்னையாக இருந்தால், தகுந்த ஆலோசனையைச் சொல்வார்கள். உதாரணமாக, ‘ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கலை’ என்று சொன்னால், காரணம் கேட்பார்கள். பாடங்கள் கடினமாக இருக்கிறது, நடத்துவது புரியவில்லை என்றால், ஆலோசனை சொல்லி உங்கள் பயத்தைப் போக்குவார்கள். அதுவே, பள்ளிக்குச் செல்லும் வழியில் யாராவது உங்களை தொந்தரவு செய்வதாக இருந்தால், நேரில் வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

வீட்டில் தனியாக இருக்கும்போது திடீரென தேவைப்படும் உதவி, உங்கள் தோழன் அல்லது தோழிக்கு தொடர்ந்து ஏற்படும் பிரச்னை, பேட் டச் எனப்படும் உடல்ரீதியாகத் தொட்டு சீண்டுவது, குழந்தைத் தொழிலாளியாக நடத்தப்படுவது, கடத்தப்படும் குழந்தைகள், தற்கொலை எண்ணம் ஏற்படுவது, ஆதரவற்ற தெருவோரக் குழந்தைகள், கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்து உதவிக்குத் தவிப்பது, மனநலம் குன்றிய குழந்தைகள் என 18  வயதுக்கு உட்பட்டவர்களின் பலவிதமான பிரச்னைகளுக்கு 1098 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

1098 என்கிற இந்த ஹெல்ப்லைன் மூலம் தொடர்புகொண்ட ஒரு மணி நேரத்துக்குள் உங்களுக்குத் தேவைப்படும் நேரடி உதவி கிடைத்துவிடும். இந்தியாவில் உள்ள எந்த ஊரில் இருந்தும் எந்த போனில் இருந்தும் அழைக்கலாம். தொடர்புகொள்வதற்கு தொலைபேசி கட்டணம் தேவை இல்லை.

தற்போது, இந்தியா முழுவதும் 372 இடங்களில் சைல்டுலைன் அமைப்பின் மையங்கள் உள்ளன.  மார்ச் 2015 வரையில் 36 மில்லியன் அழைப்புகள் வந்துள்ளன. 30 மில்லியன் குழந்தைகளுக்கு நேரடியாக உதவி இருக்கிறார்கள் இந்த அமைப்பினர்.

ஆகவே நண்பர்களே, உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக பெற்றோர் அல்லது பெரியவர்களிடம்  தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் உதவி பெற முடியாத சூழ்நிலை என்றால், தாமதிக்காமல் 1098 ஹெல்ப்லைனுக்குத் தொடர்புகொள்ளுங்கள்.

Advertisements