மின்சாரம் உயர்த்தியது 65 சதவிகிதம்… குறைத்தது 10 சதவிகிதம்!

100 யூனிட் இலவச மின்சாரம்

‘‘மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால், தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் அனைவரும் பயனடைவதுடன், தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை’’ – அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதி இது.

2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மே 23-ம் தேதி, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தன்னுடைய முதல் கையெழுத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவு அனைத்து வீடுகளுக்கும் பொருந்துமா அல்லது 100 யூனிட் மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தும் 78 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் உதவுமா என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது. பொதுமக்களுக்கு மட்டுமல்ல… மின்வாரிய அதிகாரிகளுக்கும் குழப்பம் இருந்தது.

மேலிடத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டதும், ‘அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ… அதற்கேற்றவாறு திட்டத்தை உருவாக்குங்கள்’ என்று உத்தரவு வந்தது. அதன்பிறகுதான், தற்போது வழக்கத்தில் உள்ள மின்கட்டண கணக்கீட்டில் சில மாற்றங்களைச் செய்து, புதிய மின்கட்டணத்தை அறிவித்தனர்.

100 யூனிட் இலவசமா?

புதிய கட்டண அறிவிப்பின்படி, 100 யூனிட் மின்சாரம் இலவசமாக்கப்படவில்லை. மாறாக, 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், ஒரு நுகர்வோர் 550 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அவருக்கு 100 யூனிட்டைக் கழித்துவிட்டு மீதமுள்ள 450 யூனிட்டுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என்பது தவறு. மாறாக, 550 யூனிட் மின்சாரத்துக்கான விலையை, பழைய மின்கட்டண அடிப்படையில் கணக்கிட்டு, அதில் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்து, மீதமுள்ள 450 யூனிட்டுக்கான கட்டணத்தை வசூலிப்பார்கள்.

இரண்டும் ஒன்றல்ல…

100 யூனிட்டை இலவசமாகக் கொடுப்பதும், 100 யூனிட்டுக்கான கட்டணத்தை மட்டும் கழித்துக்கொள்வதும் ஒன்றல்ல… இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

உதாரணம்…

550 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒருவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால், அவர் 450 யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ள கட்டணப் பட்டியலில் 2110 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது எப்படி? 550 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஒருவருக்கு, பழைய விலையின்படி 550 யூனிட்களுக்கு கட்டணத்தைக் கணக்கீடு செய்கின்றனர். அதன்படி,  இதில் முதல் 100 யூனிட்களுக்கான கட்டணம் 350 ரூபாய் கழிக்கப்படுகிறது. அப்படிக் கழித்தால், 2,060 ரூபாய் வரும். அதோடு மீட்டர் சார்ஜ் 50 ரூபாய் சேர்த்து, 2,110 ரூபாய் இனி வசூலிக்கப்படும். ஆக, அரசாங்கம் பொதுமக்களுக்குக் கொடுத்துள்ள சலுகை என்பது 100 யூனிட் மின்சாரம் இலவசம் அல்ல… 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் இலவசம்.

எப்போது நடைமுறைக்கு வருகிறது?

முதலமைச்சர் ஜெயலலிதா இந்தக் கோப்பில் மே 23-ம் தேதி கையெழுத்திட்டார். அன்றைய தேதியிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டம் அன்றில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. ஆனால், இந்தக் கணக்கீட்டுக்குத் தற்போது மின்வாரியத்திடம் உள்ள சாப்ஃட்வேரில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதனால், ஒரு நுகர்வோர் ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தி உள்ளார் என்பதைக் கணக்கிட்டு, 23-ம் தேதியில் இருந்து மொத்தம் 9 நாட்களுக்கான மின்கட்டணத்தில் விலை குறைப்பு செய்யப்படும். ஆனால், இந்த மாற்றங்களைச் செய்வதற்கான சாப்ஃட்வேர் இன்னும் தயாராகவில்லை. அதனால், இந்த மாதம் கடும் குளறுபடிகள் இருக்கும். அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து எடுக்கப்படும் கணக்கீட்டில்தான் முழுப்பலனை பொதுமக்கள் அடைய முடியும்.

உயர்த்தியது 65 சதவிகிதம்…
குறைத்தது 10 சதவிகிதம்!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்புத் தலைவர் விஜயனிடம் இதுபற்றிப் பேசினோம். “2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ஒரு யூனிட் மின்சாரம் 65 காசுகள். அந்தக் கட்டணம் கடந்த ஆட்சியில் இரண்டு முறை உயர்த்தப்பட்டு, ஒரு யூனிட் மின்சாரம் 120 காசுகளானது. முதல்முறை மின்கட்டணத்தை உயர்த்தியபோது, அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்றைய அ.தி.மு.க அரசு, இரண்டாவது முறை கட்டணத்தை உயர்த்தியபோது, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தைக் குற்றம்சாட்டியது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவில் தமிழக அரசு தலையிட முடியாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இப்படி தொடர்ந்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

அதையடுத்து, அந்த மின்கட்டண உயர்வினை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மொத்தமாக 16 ஆயிரம் கோடி ரூபாய், அதாவது 65 சதவிகிதம் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, தற்போது அதில் 10 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது. மக்கள் தலையில் மின்கட்டணச் சுமையை ஏற்றியவர்களே, சுமையின் பளு அறிந்து அதைக் கொஞ்சம் குறைத்துள்ளார்கள். ஆனால், ஆட்சியில் உள்ள இந்த 5 ஆண்டுகளில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’’ என்றார்.

மின்கட்டண வித்தையா… கண்கட்டு வித்தையா?

நன்றி  – ஜூனியர் விகடன் 

 

Advertisements

சொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்?

வ்வொரு குடும்பத்தின் எதிர்கால ஆசைப் பட்டியலிலும் கார் நிச்சயம் இருக்கும். கார் தேவையாக இருக்கிறதோ இல்லையோ, பயன்படுத்துகிறோமோ இல்லையோ, வீட்டு வாசலில் ஒரு அழகான காரை நிறுத்தி வைக்கவே எல்லோரும் விருப்பப்படுவது உண்டு.

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி ஆல்டோ, இயான், நானோ போன்ற சிறிய கார்கள்தான் முதலிடங்களில் உள்ளன. இந்தச் சிறிய கார்கள் நடுத்தர மக்களின் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வருகின்றன. இந்திய கார் மார்க்கெட்டின் ஆணிவேர் இந்தச் சிறிய கார்கள்தான்.

ஆனால், நகரங்களில் கார்களை நிர்வகிப்பது என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் இப்போதெல்லாம் மொபைலை எடுத்தோமா, ஆப் மூலம் டாக்ஸியை புக் செய்தோமா, வேண்டிய இடத்துக்கு போய் வந்தோமா என்பதுதான் ட்ரெண்ட்-ஆக இருக்கிறது.

நகரங்களில் உபர், ஓலா போன்ற பல டாக்ஸி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அதுவும் ஆட்டோவில் செல்வதைவிடவும் டாக்ஸிகளில் செல்வது மலிவாக இருப்பதாகச் சொல்லப்படு கின்றன. இதனால் சொந்தமாக ஒரு காரை வாங்கி பயன்படுத்து வதைவிட வாடகை கார் பயன்படுத்திக் கொள்ளவே பலரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஒருவர் சொந்தமாக காரை வாங்கி பயன்படுத்துவது லாபமா அல்லது வாடகை காரைப் பயன்படுத்துவது லாபமா என்கிற கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

சொந்தக் கார் என்னும் கனவு!

காரில் பயணிக் கிறோம் என்பதைக் காட்டிலும் நம்மிடம் சொந்த கார் இருப்பது ஒரு ஸ்டேடஸ் கெளவரமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சொந்தமாக கார் வாங்கும்முன் நம் வருமானம், தேவை, எத்தனை பேர் பயணிப்போம் என்கிற விஷயங்கள் முக்கியமானவை. ஏனெனில், பெரும்பாலான நகரங்களில் இருப்போரின் வருமானம் ரூ.30,000-க்கும் அதிகமாக இருப்பதால் எளிதில் கார் வாங்கும் முடிவை எடுத்து விடு கிறார்கள். அதற்கேற்ப கார் நிறுவனங்களும், கார் கடன் விளம்பரங்களும் அவர்களை கவர்ந்து இழுக்கின்றன.

ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், பெரும் போக்குவரத்து நெருக்கடி உருவாகி இருக்கிறது. இதனால் சொகுசாக அலுவலகம் போகலாம் என்று நினைத்து, கார் வாங்கியவர்கள் அதனை வீட்டில் வைத்து விட்டு, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

போக்குவரத்து நெருக்கடி என்பதுடன், பார்க்கிங் பிரச்னையும் முக்கிய காரணம். நம் ஊரில், அதுவும் சென்னையில் கார் பாக்கிங் செய்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லாத தால், காவல் துறை எப்போது வேண்டுமானாலும் காரை   ‘டோ’ செய்து, எடுத்துக் கொண்டு போகலாம். அல்லது யாராவது வந்து இடித்து சேதப்படுத்தி விடவும் வாய்ப்புண்டு.

அதுமட்டுமல்லாமல் கார் வாங்கிய ஒரு ஆண்டில் உங்கள் காரின் மதிப்பு ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20% வரை குறைய வாய்ப்புண்டு.  இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால், 45% குறையும்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின்  காரின் மதிப்பு அதிகளவில் குறையும்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? கார் வாங்கும் ஆசையே இருக்கக் கூடாதா என்று கேட்கிறீர்களா?

சொந்த கார்தான் வாங்குவேன்!

சொந்த கார் வாங்குவது தவறே இல்லை. ஆனால், அது ஒரு செலவுதானே தவிர, முதலீடு அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.

கார்களின் விலை குறைந்த பட்சமாக ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை ஆகிறது. ஆனால், உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒரு வருடத்துக்கு மொத்தமாக எரிபொருள், பராமரிப்பு, சர்வீஸ் மற்றும் சாலைக் கட்டணம் (toll), பார்க்கிங் உட்பட பல்வேறு செலவுகளையும் பட்டியலிட்டு உங்களுடைய காருக்கான பட்ஜெட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, அவசியமான வசதிகள் கொண்ட ஒரு காரின் விலை ரூ.5 லட்சம் எனில், முழுத் தொகையையும் அப்படியே கட்டி வாங்க முடியாத நிலையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது.   முன்பணமாக ரூ. 1  லட்சம் செலுத்தி, பாக்கியை கடனுதவி மூலம் கட்டி காரை வாங்குகிறார்கள் பலர். கடன் வாங்கிய தொகைக்கான தவணைக் காலம் ஐந்து ஆண்டுகள் எனில், மாதம் சுமார் ரூ.8,400 மாதத் தவணை (9.5% வட்டியில்) செலுத்த வேண்டும். மாதத் தவணை மட்டுமல்லாமல் மற்ற செலவுகளையும் கணக்கிடுங்கள்.

சராசரியாக லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும் காரில் மாதம் 1000 கிமீ பயணிப்பீர்கள் எனில், பெட்ரோலுக்கு மட்டுமே மாதம் சுமார் 5000 ரூபாய் செலவாகும். சர்வீஸ், இன்ஷூரன்ஸ், பார்க்கிங், டோல் போன்றவற்றுக்கு மொத்தமாக மாதம் ரூ.3,500 வரை செலவாகும். மொத்தமாக மாதத்துக்கு சொந்த காருக்கு ஆகும் செலவு ரூ.16,900 ஆகும். டிரைவிங் தெரியாதவர்கள் டிரைவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். டிரைவர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.12,000 ஆகும்.

உங்கள் ஆண்டு வருமானத்தில் இந்தத் தொகையை மைனஸ் செய்யுங்கள். மீதமுள்ள தொகையிலிருந்து வீட்டுக் கடன் அல்லது வாடகை, வீட்டு இதர செலவுகள், பள்ளி/கல்லூரிக் கட்டணம் என அனைத்தையும் கழித்தால், மீதி என்ன இருக்கிறது என்று பாருங்கள். உங்களுடைய செலவுகளுக்கு மீறி 20% தொகை கையில் சேமிப்புக்காக நின்றால் மட்டுமே நீங்கள் கார் வாங்குவது சரியான முடிவாக இருக்கும்.

மேலும், சிலர் கார் வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசையில் பட்ஜெட் சரியாக இல்லா விட்டாலும்கூட கடனை வாங்கி கார் வாங்குவார்கள். அது தவறு. கிட்டத்தட்ட 80% பேர் கடனுதவி மூலம்தான் கார் வாங்குகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. இதில் எத்தனை பேர் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கி இருப்பார்கள் என்பது சந்தேகமே.  பட்ஜெட்டை முடிவு செய்யாமல், காரின் அழகைப் பார்த்து வாங்கிவிட்டு, பிறகு பராமரிப்பு, மைலேஜ் என பட்ஜெட்டில் பஞ்சர் ஆனவர்கள் அதிகம். அதே போல், அவசரப்பட்டு பழைய கார்களை வாங்காமல், எத்தனை வருடம் ஓடியது, என்ன காரணத்துக்கு விற்றார்கள் என்று தெரியாமல் வாங்குவதும் தவறு. பழைய கார்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம்.

சொந்த காரா, டாக்ஸியா?

சொந்த காரைப் பொறுத்த வரை, முதலில் அதற்கு ஆகும் செலவை சமாளிக்கும் வகையில் பணம் இருக்க வேண்டும். இரண்டாவது, காரைப்  பாதுகாப்பாக நிறுத்தி வைக்கத் தேவையான இடவசதி இருக்க வேண்டும். இது பெரும்பாலும் நகரத்தில் உள்ள நடுத்தர மக்களுக்கு சாத்தியமே இல்லை. அப்படிப்பட்டவர்கள் சொந்த காருக்கு பதிலாக வாடகை கார்களைப் பயன்படுத்துவதே சிறந்தது.

ஏனெனில் சொந்த கார் வைத்திருக்கும் பலரும் மாதச் சம்பளக்காரர்கள் என்பதால், அவர்களால் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அடிக்கடி சுற்றுலாவோ, ஊர் சுற்றவோ போக முடியாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வதே அதிசயம்தான். மேலும், தினசரி அலுவலகம் காரில் செல்பவர்கள் சொந்தமாக கார் வாங்கலாம். மற்றவர்கள் மாதாமாதம் செலவு வைக்கும் காரை ஏன் வாங்கி வீணாக்க வேண்டும்; அழகாக டாக்ஸியை புக் செய்துவிட்டு போய் வரலாம்.

முன்பு ஃபாஸ்ட் ட்ராக், என்டிஎல் என்று டாக்ஸிகள் இயங்கின. இப்போது ஓலா, உபர் என்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் ரக கார்கள்கூட டாக்ஸி சேவையில் இயக்கப்பட்டு வருகின்றன. சொந்த கார் வாங்கி அதிகம் பயணிக்காதவர்கள் டாக்ஸியைப் பயன்படுத்துவது லாபகரமானதா கவே இருக்கும். டாக்ஸியில் பயணிக்கும்போது, நாம் செலுத்தும் கட்டணம் எரிபொருள் செலவு, டிரைவர் ஊதியம், காரின் இன்ஷூரன்ஸ் மற்றும் கம்பெனியின் லாபம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டண அடிப்படையில் பார்க்கும்போது, மாதம் 1000 கிமீ பயணிக்கும் ஒரு நபர் டாக்ஸிக்கு செய்யும் செலவு குறைந்தபட்சமாக ரூ.8000 மட்டுமே. அதிகபட்சமாக சொகுசு கார்களுக்கு ரூ.20,000 வரை ஆகலாம். அதேபோல், நகரங்களுக்குள் பயணிப்பவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 – 20 கிமீ மட்டுமே பயணிக்கிறார் கள். மாதத்துக்கு 600 கிமீ பயணம் செய்தால், ஆகும் செலவு மேலும் குறையும்.

இது மட்டுமல்லாமல் டாக்ஸி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் தரப்படும் ஏராளமான சலுகைகள், ரைட் ஷேரிங் வசதிகள் ஆகியவை மேலும் லாபகரமானதாகவே இருக்கும். டாக்ஸி நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக் கான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. ஜிபிஎஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் டாக்ஸிகளில் புகுத்தப் பட்டுள்ளன.

எனவே, அதிகம் காரைப் பயன்படுத்தாததவர்கள்,  தனியாக மட்டுமே காரில் பயணம் செய்பவர்கள் சொந்தக் காரை வாங்குவதைக் காட்டிலும் டாக்ஸியைப் பயன் படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்.


சொந்த கார் Vs டாக்ஸி செலவு விவரம்:

சொந்த கார்

மாதம் 1000 கிமீ பயணம்

(காரின் விலை – ரூ. 5 லட்சம்

கடன் – ரூ. 4 லட்சம்)

மாதத் தவணை: ரூ.8,400 (9.5 % வட்டியில்)

பெட்ரோல்: ரூ.5000

சர்வீஸ், இன்ஸ்பெக்‌ஷன், டோல், பார்க்கிங், கார் வாஷ்: ரூ.2,000

இன்ஷூரன்ஸ்: ரூ.1500

மொத்தம் (தோராயமாக): ரூ.16,900 (டீசன்டான வசதி கொண்ட குறைந்தபட்ச விலை கார். சற்று விலை அதிகமான கார் என்றால் இந்த செலவு மேலும் அதிகம். டிரைவர் வைத்துக் கொண்டால் மாதம் ரூ.12,000 கூடுதல் செலவு ஆகும்)

வாடகை கார்:

அடிப்படைக் கட்டணம்: ரூ.30 – ரூ.50

கிமீ கட்டணம்: ரூ.6 -ரூ.8

காத்திருப்புக் கட்டணம்: ரூ.1 -ரூ. 5

மொத்தம் (தோராயமாக): ரூ.8,000

(1000 கிமீ பயணம், எடுத்துக்கொள்ளும் காரைப் பொறுத்து கட்டணம்)

வாடகை கார்களை ஆப் மூலம் இப்போது எளிதில் புக் செய்ய முடியும். அலுங்காமல் குலுங்காமல் பயணத்தை ஓய்வெடுத்துக்கொண்டே செல்ல முடியும். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு பயணம் செய்தால் செலவு இன்னும் குறையும்.


கார் வாங்குபவர்கள் என்ன செய்யவேண்டும்?

* உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். ஐந்து பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய செடான் காரா அல்லது அதிக மைலேஜ் தரக்கூடிய காரா?

* ஒரு காரை வாங்கும்முன் அந்த காரின் நிறை, குறைகள் குறித்த ரிவ்யூக்களைப் படித்து விட்டுச் செல்லுங்கள். அந்த காரின் பவர் என்ன, அது எந்த ஆண்டு மாடல், அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று ஒரு புரிதலுடன் செல்வது பயன்தரும்.

*  பயன்படுத்தப்பட்ட பழைய  கார்கள் எனில், சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கை மாறிய கார் என்றால், அந்த கார்களின் பராமரிப்பு சரியாக இருக்காது!

எது உங்களை ‘வெயிட்’டாக்கும்? எது உங்களை ‘லைட்’டாக்கும்?

“என்ன சாப்பிட்டாலும் எடை கூட மாட்டேங்குது” என்று புலம்பியபடி எதையாவது கொரித்துக்கொண்டிருப்பார்கள் சிலர். “எதைச் சாப்பிட்டாலும் வெயிட் ஏறுது… என்ன செய்யறதுன்னே தெரியலை” என்று சாலட், சூப் என எதையும் பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவார்கள் சிலர். “ஜிம்முக்குப் போறேன், டயட் ஃபாலோ பண்றேன்… ஆயில் ஃபுட்ஸை விட்டுட்டேன். ஆனாலும், வெயிட் குறைஞ்சபாடில்லை” என்று பலரும் புலம்புவார்கள். உணவைப் போட்டிபோட்டு சாப்பிடுபவருக்கு எடை கூடவில்லை; சாப்பிடாதவருக்கு எடை கூடுகிறது. இது எல்லாம் என்ன டிசைன் என்று ஆச்சரியமாக இருக்கும்.

உடல் பருமனுக்குக் காரணம் என்ன? அதிகமாகச் சாப்பிடுவதா? சரியானதைச் சாப்பிடாததா? உணவில் இருந்து, நமக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதில் ஏற்படும் சமச்சீரின்மையே உடல் பருமனுக்குக் காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, அதிகம் சாப்பிடுவது மட்டும் அல்ல, அதை எரிக்காமல் உடல் உழைப்பற்ற வாழ்க்கை வாழ்வதுதான் உடல் பருமன் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது.

எது உங்களைப் பருமனாக்குகிறது?

நிச்சயமாக உணவை மட்டும் குறைசொல்ல முடியாது. எதைச் சாப்பிடுகிறோம், அதில் எவ்வளவு கலோரி கிடைக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். கிடைத்த கலோரியை செலவழித்தோமா என்பதைக் கவனிக்க வேண்டும். செலவாகாத கலோரிதான் கொழுப்பாக மாறும். இது உடலில் சேகரிக்கப்படும். தொடர்ந்து சேகரிக்கப்படும்போது உடல் பருமன் ஏற்படும். இந்தச் சுழற்சியைப் புரிந்துகொண்டாலே உடல் பருமனைத் தவிர்க்கலாம்.

ஏன் கொழுப்பை உடல் சேகரிக்கிறது என்று சந்தேகம் எழலாம். உடல் ஆரோக்கியமாக இயங்க ஆற்றல் தேவை. தினசரி, போதுமான ஆற்றல் கிடைத்தாலும் எதிர்காலத் தேவையை உடல் கவனத்தில்கொள்ளும். எனவே, தேவையான அளவு பயன்படுத்திக்கொண்டு, மீதம் உள்ள கலோரியை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதுபோல, உடலில் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கும்.

இதனால்தான், ஒன்று இரண்டு நாட்கள் உண்ணாமல் இருந்தாலும்கூட பசி உணர்வைத் தவிர ஒன்றும் ஆவது இல்லை. ஏனெனில், உடலில் சேகரிக்கப்பட்ட கொழுப்பு, மீண்டும் ஆற்றலாக மாற்றப்பட்டு உடல் சோர்வடையாமல் இருக்கச் செய்யும். கலோரியை செலவிடாமல் சேமித்துவைக்கும்போது,  உடல் பருமன் தவிர்க்க முடியாததாகிவிடும்.

கலோரியை எரிக்க, கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டு வேலை, தோட்ட வேலை, நடைப்பயிற்சி போன்ற எளிய விஷயங்களைச் செய்தாலேபோதும், கலோரிகள் எரிக்கப்படும்.

உணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நார்ச்சத்து என நான்கு முக்கிய சத்துக்கள் இருக்கின்றன. தவிர, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்‌ஸிடன்ட்கள் உள்ளன. இதில், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மூன்றும் கலோரிகளாக மாற்றப்படும்.  இந்த அடிப்படையைத் தெரிந்துகொண்டால், உடல் எடையைத் தவிர்க்க முடியும்.

காலை உணவு என்பது அந்த நாள் முழுதும் எனர்ஜியைத் தரக்கூடியது. சாப்பிட்ட சில மணி நேரங்களில் எனர்ஜியாக மாறும். தேவையான நேரத்தில் உணவு உள்ளே செல்லும்போது, செரிமானம் சீராக நடக்கும். காலை உணவைத் தவிர்த்துவிட்டோம் எனில், உடல் அதன் தேவையைத் தானாகக் கட்டுப்படுத்தி இருக்கும். அந்த நேரத்தில் 11 மணிக்குப் போய் காலை உணவை வயிறு நிறைய சாப்பிட்டால், பாதி உணவு செரிமானம் ஆகாமல் கழிவாகவும் மாறாமல் கொழுப்பாக மாறிவிடும்.

இரவு தாமதமாகத் தூங்குவது தவறு. இரவெல்லாம் விழித்திருக்க, நிறைய உடல் சக்தி தேவைப்படும். இதனால், இரவு நேரத்தில் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், செரிமானமும் பாதிக்கப்படும், அதிகப்படியான கலோரியால் உடல் எடை அதிகரிக்கும்.
‘எனக்குச் சாப்பிடணும் போல மூட் இருக்கு’ எனச் சாப்பிடுவது, நான்கு பேருடன் பேசும்போது சும்மா நொறுக்குத்தீனிகளைக் கொறிப்பது,  ‘இந்தக் கடையில் ஸ்வீட் சூப்பர்’, ‘இந்த கலர்…செம’, ‘இந்த உணவு டேஸ்ட்டி’ எனத் தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடுவது போன்றவை உடல் எடை கூடுவதற்கான முக்கியக் காரணங்கள்.

தண்ணீர் சரியாகக் குடிக்காமல் இருந்து, உணவை அதிகமாகச் சாப்பிட்டால் செரிக்கும் சக்தி குறையும். உடலில் உறிஞ்சும் சக்தியும் குறைந்துபோகும். அதுபோல், சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவதால் உடலின் கிரகிக்கும் தன்மை குறைந்துபோகும்.

நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால் வாயு சேரும். சில வகை உணவுகளாலும் வாயு சேரும். இப்படி, பல வகையில் வாயு சேர்ந்தால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும்.

கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளைச் சர்க்கரை, மைதா, பேக்டு உணவுகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும்.

கடைகளில் கிடைக்கும் ‘ரெடி டூ ஈட்’ மற்றும் நிமிடங்களில் சமைக்கலாம் போன்ற உணவுகள். ‘நங்கட்ஸ்’, ‘ஃபிரென்ச் ஃப்ரைஸ்’, ‘ஸ்மைலீஸ்’ போன்ற உடனடியாகத் தயாரிக்கப்படும் உணவுகளில் மோனோசோடியம் உப்பு, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் அதிக அளவில் இருக்கின்றன.

மனஅழுத்தத்துக்கும் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனஅழுத்தம் காரணமாக எதையாவது கொரிக்கத் தோன்றும். இதனால், உடல் பருமன் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது, சுவாரஸ்யம் காரணமாகப் போதுமான அளவைவிட சற்றுக் கூடுதலாகச் சாப்பிட நேரும். இதனால், சாப்பிடும்போது டி.வி பார்ப்பது, பத்திரிகை படிப்பதைத் தவிர்க்க வேண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் எப்போதும் கவனம் தேவை.
ஏ.சியிலேயே இருப்பவர்கள், வியர்க்காமல் இருப்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் உடல் உழைப்பு இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இடுப்பு, வயிற்றுப்பகுதிகளில் சதை போடத்தான் செய்யும். வியர்வை வெளியே போகாமல் இருந்தால், கழிவுகள் அப்படியே உடலில் தங்கும்.

மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்குக் கழிவுகள் உடலில் தேங்கி நிற்கும். உடல் எடை கூட வாய்ப்பாக அமைந்துவிடும்.

ஹார்மோன் பிரச்னைகளும்கூட பருமனுக்குக் காரணம் ஆகலாம். ஹைப்போதை ராய்டிசம், தைராய்டு, ஹார்மோன் பிரச்னை இருப்பவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும்.

ஃபிட் உடல் அமைப்பு கிடைக்க…

பசிக்குச் சாப்பிட வேண்டும். முழு வயிறு நிரம்பும் அளவுக்குச் சாப்பிடக் கூடாது. நேரத்துக்குச் சரியாகச் சாப்பிடுவதும் முக்கியம்.

உணவைச் சமைத்த, மூன்று நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இதுதான் உணவு உண்ணும் நல்ல முறை. மறுமுறை சூடுபடுத்தும்  உணவுகளில் பூஞ்சைகள் உருவாகி, ஃபுட் பாய்சனுக்கு வழி வகுக்கும்.

எடை குறைக்க வேண்டும் என்று நினைப்போர், கட்டாயம் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது முக்கியம். உடலில் நீரின் அளவு குறைந்தாலும் உடல் எடை கூடலாம்.

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை உணவைப் போதுமான அளவு சாப்பிடுவது முக்கியம். இரவில் பாதி வயிறு சாப்பிடுவதே சரி.

மண் குளியல் (மட் தெரப்பி) உடலில் உள்ள நச்சுத்தன்மையை உறியும். செரிக்காத உணவுகள் மூலமாக ஏற்படும் கழிவுகளை மட் தெரப்பி சரி செய்துவிடும்.

வாழை இலைக் குளியல் (Plantain Leaf bath), மாதம் ஓரிரு முறை எடுத்தால், உடலில் வியர்வை நன்கு சுரக்கும். கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறும்.

அடிபோஸ் கொழுப்புத் தசையில் இரண்டு வகை உள்ளன. அதில், பழுப்புக் கொழுப்பு (Brown fat) அடர்நிறத்தில் இருக்கும் எடை அதிகரிக்கும். வெள்ளைக் கொழுப்பு (White fat) எடை அதிகரிக்காது. ஐஸ் தெரப்பி (Ice pack) மூலம், பழுப்புக் கொழுப்பு, வெள்ளைக் கொழுப்பாக மாறும்.  இதனுடன், நாம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தோமானால், உடல் எடை விரைவில் குறைய இந்த தெரப்பி உதவும். தொடை, இடுப்பு, வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்பைக் கரைக்க ஐஸ் தெரப்பி சிறந்தது.

நீராவிக் குளியல், நச்சுத்தன்மையையும் தேவை இல்லாத கொழுப்பையும் கரைத்து வியர்வை மூலமாக வெளியேற்றிவிடும்.

மூச்சுப்பயிற்சி, நடை, ஓட்டம், சைக்கிளிங், நீச்சல் போன்ற பயிற்சிகள் உடல் எடையைச் சீராகப் பராமரிக்கும். வாரத்தில் ஐந்து நாட்கள், ஏதாவது ஒரு பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

– ப்ரீத்தி


உணவால் எடையைக் கட்டுப்படுத்த முடியுமா?

உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதுதான். ஒருநாளைக்கு இரண்டு முறை  அரிசி உணவை எடுத்துக்கொள்ளலாம். வயிறு நிறைந்த உணர்வு வரும் வரை இரண்டு முறை நன்றாகச் சாப்பிட்டாலே போதும்.

வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளது. எனவே, அதைத் தவிர்த்து பழுப்பு அரிசி, சிறுதானியம், பழங்கள், காய்கறிகள் சாலட், ஃபிரெஷ் ஜூஸ், முளைவிட்ட தானியங்கள், நட்ஸ், பருப்பு, பயறு வகைகளைச் சாப்பிடலாம். இதன்மூலம், சரிவிகிதத்தில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து கிடைக்கும்.

கொள்ளுப்பருப்பை சட்னி, துவையல், ரசம், குழம்பு என அடிக்கடி சாப்பிட்டுவர நல்ல மாற்றம் தெரியும்.

ரத்தத்தில் சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கும் தன்மை உள்ள குறைந்த கிளைசெமிக் எண் கொண்ட உணவுகளான சிறுதானியம், கைக்குத்தல் அரிசி, பழுப்பு அரிசி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள் என்றால் குறைந்த கலோரி கொண்டது என்று அர்த்தம். இதை, தேவையான அளவில் நாள்தோறும் சாப்பிட்டுவர, உடல் எடையைச் சீராகப் பராமரிக்க முடியும்.

நீர்க் காய்கள்: வெள்ளரி, பூசணி, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பரங்கிக்காய், தக்காளி.

நீர் பழங்கள்: தர்பூசணி, முலாம், கிர்ணி.

நன்றி – டாக்டர் விகடன்