அந்த ஆமை என்ன பாவம் செய்தது? அதிர வைக்கும் அவலம்!

 

ம் அன்றாட வாழ்வை எளிமையாக்க, சீக்கிரம் மக்கிப் போகாத, அதாவது நெகிழாத தன்மையுடைய பொருட்களைப் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். அவை அனைத்தும் இயற்கையான பொருட்களாகவே இருந்தன. முட்டை ஓடு, மிருக ரத்தத்தில் உள்ள புரதம், ரப்பர் மரத்தின் பால் மற்றும் மரப்பட்டையில் செய்த பொருட்கள், இறந்து போன மான், மாடு, ஆடுகளின் பதப்படுத்தப்பட்ட கொம்புகள், இவைதான் அவர்கள் பயன்படுத்தியது.

1800-களில் தொழிற்புரட்சி ஏற்பட்ட நேரத்தில்தான் முதன்முதலில் நெகிழாத தன்மையுடைய பொருட்களை உருவாக்கினார்கள். 1856ல் UKவைச் சேர்ந்த Alexander Parke’s கண்டுபிடித்த Parkesine என்பதுதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நெகிழவே செய்யாததால் இதை நெகிழி (plastic) என்றே அழைத்தனர். இது, cellulose மற்றும் nitric acid சேர்த்து செய்யப்பட்டதாகும். பிறகு பலர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1900-களில் Bakelite கண்டுபிடிக்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்புதான் polythene, polystyrene (நம் உபையோகிக்கும் பைகள், கப்கள் அனைத்தும் இதில்தான் செய்யப்படுகின்றன) கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் வசதிக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று ஆடம்பரமாக மாறி, இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது. இப்போது மனித இனம் மட்டுமல்லாமல், பிற இனங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. இதில் வேதனையளிக்கும் விஷயம், ஆறு அறிவுள்ள நாம் செய்யும் சிறு பெரிய தவறின் விளைவை நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும். ஆனால், இப்போது எந்த தவறும் செய்யாத ஐந்து அறிவு ஜீவராசிகள் அனைத்தும் துன்பப்படுகின்றன. ‘வினை விதைத்தவன் வினை அறுத்துதான் ஆக வேண்டும்’ என்பது உலக நீதி. பிறருக்கு தீங்கு நினைக்காத மிருகங்களும் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? அனைத்து ஜீவராசிகளை விடவும் ஓர் அறிவு அதிகமாக நமக்கு கடவுள் கொடுக்கக் காரணம், பகுத்தறிவோடு செயல்படவே. ஆனால், நாம் விளைவைப் பற்றி சிறிதும்கூட யோசிக்காமல் செயல்களைச் செய்கிறோம்.

தெருவோரத்தில் யாரும் கண்டுகொள்ளாமல் சுற்றித் திரியும் மாடுகளை தினமும் நாம் பார்க்கிறோம். பார்க்கிறோம் என்பதைவிடக் கடக்கிறோம். என்றாவது, ‘நாம் தூக்கி எறியும் குப்பையை அது உண்டால் என்னவாகும்?!8 என்று யாருமே யோசித்தது இல்லை; யோசிக்க நேரமும் இல்லை. தெருவில் மேயும் ஒரு காளையைக் கண்டு அது ஏன் வித்தியாசமாக உள்ளது என்று பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்: அது 20 கிலோ நெகிழியை உண்டிருக்கிறது!

அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் வீடியோ காட்சி இங்கே…

மாடு நாம் வாழும் இடத்திலேயே இருப்பதால், நாம் தூக்கிவீசும் நெகிழிப் பையை உண்ணுகிறது. ஆனால், ஆமை எப்படி பாதிக்கப்பட முடியும்? Olive Ridley எனும் வகையைச் சார்ந்த இந்தக் கடல் ஆமையின் மூக்கினுள் 12 செ.மீ நீளமுள்ள plastic straw  சிக்கிவிட்டது. எப்படி? எங்கோ ஒரு மூலையில் நாம் குளிர்பானங்களை குடித்துவிட்டு போடும் straw மழையில் அடித்துச் செல்லப்பட்டு, கடலில் கலந்து பல வாயில்லா ஜீவராசிகளைக் காவு வாங்குகிறது. அதற்கு இந்த ஆமை ஒரு எடுத்துக்காட்டு. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில் பிறந்த நம் மனங்கள் நம் அன்றாட வாழ்வின் கவலைகளால் வறண்டு போய்விட்டன. சற்றேனும் ஈரம் மிச்சம் இருந்தால் நெகிழியை நாம் இனி தொட மாட்டோம் என்பது திண்ணம். அந்த ஆமையின் கண்களில் வலி தெரிகிறது பாருங்கள்:

நிலம், நீர், ஆகாயம் என அனைத்து இடங்களில் உள்ள வாயில்லா ஜீவன்களையும் நாம் விட்டு வைக்கவில்லை. காற்றில் சிறகடித்து சுதந்திரமாய்ப் பறந்து கொண்டிருக்கும் பறவையையும் நம் நெகிழி கொன்றது. ஆம். நம் ஊர் எல்லையில் ஓர் குப்பைக் கிடங்கும், அதில் உணவிற்காக வட்டமிடும் பறவைகளும் இருக்கும். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் அனைத்து நாடுகளிலும் இருக்கும். அமெரிக்கவிற்கு அருகிலுள்ள ஒரு தீவில் எடுக்கப்பட்ட காட்சி. ஒரு பறவை நெகிழி உண்டால் இறூதியில் என்னவாகும் என்பது பற்றிய உருக்கமான பதிவு.

கடலில் வாழும் மிகப் பெரிய உயிரியான திமிங்கிலத்தையும் நாம் விட்டு வைக்கவில்லை. நீரில் நீந்திச் செல்கையில் நெகிழிப் பையை விழுங்கி மூச்சுத் திணறி உயிர்விட்ட அந்த நொடிகள்:

நாம் ஆராய்ந்து பார்த்தால், நெகிழிப் பொருட்களால் அதிகமாகப் பாதிக்கப்படும் கடல் வாழ் உயிரி கடல் ஆமையாகத்தான் இருக்கும். வெளிநாட்டுக் கலாச்சாரமான Forkஐ வைத்து சாப்பிடும் பழக்கத்தின் விளைவு இந்த வீடியோவில் தெரியும். ஒரு plastic fork நம் மூக்கில் குத்தி உள்ளே நின்றால் ஏற்படும் வலியைக் கற்பனை செய்துகொண்டு இந்த வீடியோவைப் பார்க்கவும்.

கடலில் மீன் பிடிக்கும் போது தூண்டில் கடலில் விழுந்தால் யாரும் கவலைப்படுவதில்லை. அப்படி தொலைந்து போன தூண்டில் கம்பி ஒன்று Green Sea Turtle எனும் வகையைச் சார்ந்த ஆமையின் வாயில் சிக்கியது. அந்தக் கம்பியை எடுத்ததும் ‘அப்பாடா, இப்போதான் உசுரே வருது!’ என்ற உணர்வு ஆமையின் முகத்தில் தெரியும் பாருங்களேன்!

பாரதி வரம் கேட்கையில்,
“மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்புற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!”

என்றார். உலகில் நம் இருப்பு அனைவருக்கும் இன்பத்தை அளிக்க வேண்டும். ‘அனைவருக்கும்’ என்பது அனைத்து ஜீவராசிகளும் அடங்கும். நாம் இருக்கும் அவசர உலகில் பிற உயிர்களுக்கு இன்பத்தை அளிக்காவிட்டாலும், துன்பத்தையாவது கொடுக்காமல் இருப்போம்!

 

நன்றி – விகடன்

Advertisements