கிறிஸ்மஸ் தவளை

110

இது நடந்தது தென்னாப்பிரிக்காவின். ஜோஹான்னஸ்பேர்க் நகரில். அங்கே உள்ள பிரபலமான சுப்பர்மார்க்கெட் ஒன்று சில வருடங்களாக நட்டத்தில் ஓடியது. உரிமையாளர்கள் எத்தனையோ முயற்சிகள் செய்து பார்த்தனர். புதுவிதமான பொருட்களை கொண்டுவந்து நிரப்பினர். பல விளம்பரங்கள் செய்தனர்.  கழிவு விற்பனை என்று சனங்களுக்கு ஆசை காட்டினர். என்ன செய்தாலும் லாபம் ஈட்ட முடியவில்லை.

கடைசி முயற்சியாக ஒரு புது மனேஜரை நியமித்தார்கள். அவர் என்னவும் செய்யலாம் என்று அவருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்குள் சுப்பர்மார்க்கெட் லாபம் காட்டவேண்டும் அல்லாவிடில் அது மூடப்பட்டுவிடும். அதுதான் ஒப்பந்தம்.

மனேஜர் மனிதர்களின் இயல்பு பற்றி நன்கு அறிந்தவர். ஒரு வாரம் அவர் ஒன்றுமே செய்யவில்லை. சுப்பர்மார்க்கெட் எப்படி இயங்குகிறது என்பதை அவதானித்தார். இரண்டாவது வாரம் யாருமே எதிர்பார்த்திராத ஒரு சிறிய மாற்றத்தை செய்தார். அவருக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரியை முறைப்பாடுகளுக்கு பொறுப்பாளராக நியமித்தார். அவருக்கு வேறு ஒரு வேலையும் இல்லை. முறைப்பாடுகளை கவனிப்பது மட்டும்தான் அவருடைய கடமை. தினம் தினம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளைக் ஆராய்ந்து உடனுக்குடன் நிவர்த்தி காண வேண்டும். முறைப்பாடு எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதை தீர்த்து வைப்பது அவர் வேலை.

ஆறு மாத முடிவில் கிறிஸ்மஸ் அணுகியது. இந்தக் காலங்களில்தான் சுப்பர்மார்க்கெட்டில் அமோகமான விற்பனை நடக்கும். திறமையான நிர்வாகம் அமைந்தால் லாபம் காட்டலாம். எனவே சகல ஊழியர்களும் உற்சாகத்துடனும் அதி கவனத்துடனும் பணியாற்றினார்கள். கிறிஸ்மஸுக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. ஒருநாள் முறைப்பாடு அதிகாரி பதறியபடி மனேஜரின் அறைக்குள் ஓடி வந்தார். ’என்ன?’’ என்றார் மனேஜர். ஒரு மூதாட்டி தொலைபேசியின் மறுமுனையில் நிற்கிறார். மிகப்பாரதூரமான முறைப்பாடு என்று அச்சமூட்டுகிறார். என்ன விசயம் என்று கேட்டால் சொல்கிறாரில்லை. உடனே தன் வீட்டுக்கு வரட்டாம்.’ ’போவதுதானே’ என்றார் மனேஜர். ’இல்லை உங்களை நேரிலே வரட்டாம்.’.

மனேஜர் தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். மூதாட்டியின் வீடு நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. வீட்டு முகப்பிலே தென்னாப்பிரிக்காவின் ஆறு வர்ணக்கொடி பறந்தது. மெலிந்து நேராக நின்ற கிழவி ஒன்றுமே பேசாமல் கதவைத் திறந்து மனேஜரை அழைத்துக்கொண்டு சமையல் அறைக்கு  சென்றார். முட்டைக்கோசு ஒன்று இலைகள் பிரிக்கப்பட்டு ஏதோ சமையலுக்காக மேசையில் கிடந்தது.. கிழவி சொன்னார் ’இந்த முட்டைக்கோசை பிரித்தபோது அதற்குள் இருந்து ஒரு தவளை பாய்ந்தது. நான் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்?’ மனேஜருடைய மூளை வேகமாக வேலை செய்தது. கிறிஸ்மஸ் விற்பனையை யோசித்தார். இந்த விசயம் வெளியே தெரியவந்தால் சுப்பர்மார்க்கெட்டை மூடிவிடவேண்டியதுதான்.

‘அப்படியா? என் வாழ்க்கையில் இப்படியான ஒன்றை நான் பார்த்ததில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் இதுமாதிரி நடக்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு.’

‘இதைச் சொல்லவா இத்தனை தூரம் வந்தீர்?’

‘மன்னிக்கவேண்டும் அம்மையாரே. உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் கஷ்டத்தையும் எப்படியும்  சரிசெய்வோம்.’

‘’இது எத்தனை பாரதூரமான தவறு என்று உமக்கு புரிகிறதா?’

‘புரிகிறது. அந்த தவறுக்கு ஈடாக என்னவும் செய்யக் காத்திருக்கிறோம்.’

‘என்ன செய்வீர்?’

‘இன்றிலிருந்து எங்கள் சுப்பர்மார்க்கெட்டில் உங்கள் தேவைக்கான சாமான்களை  வாழ்நாள் முழுக்க பாதி விலையில் வாங்கலாம்.’

அவ்வளவுதானா?’

‘மேலும் ஈடாக 10,000 ராண்டுகள் பணமாகத் தருகிறோம். விசயம் எங்களுடனேயே இருக்கட்டும்.’

’அவ்வளவுதானா?’

‘என்ன எதிர்பார்க்கிறீர்கள், அம்மையாரே.’

‘உம்முடைய பணம் யாருக்கு வேண்டும்? இந்த தவளையை என்ன செய்வதாக உத்தேசம்?’

அப்பொழுதுதான் மனேஜர் திரும்பிப் பார்த்தார். கண்ணாடிக் குவளைக்குள் நீண்ட பின்னங்கால்களுடனும், பிதுங்கிய கண்களுடனும் பச்சை நிறத்  தவளை ஒன்று குந்தியிருந்தது. ஒரு கண் மேற்கே பார்த்தது; மறு கண் கிழக்கே பார்த்தது. அதன் அளவைப் பார்த்து மனேஜருக்கு சிரிப்பு வந்தது. ஓர் அங்குலம் நீளம்கூட இல்லை.

தவளைக்கு சம்பாசணை தன்னைப்பற்றி என்று தெரிந்திருக்கவேண்டும். தாடையை உப்பி உப்பி வேடிக்கை காட்டியது.

‘இந்த தவளையை பாரும். தண்ணீருக்குள் தோலினால் மூச்சுவிடும். வெளியே இருக்கும்போது சுவாசப்பையினால் மூச்சு விடுகிறது. இது அழிவின் விளிம்பில் உள்ள அபூர்வமான. பிக்கர்கில்ஸ் ரீட்தவளை. இந்த இனம் பூமியிலிருந்து மறைந்தால் மனிதர்களுக்குத்தான் நட்டம். 10,000 ராண்டுகள் அந்த நட்டத்தை தீர்க்காது.

இடுப்பிலே கைகளை வைத்துக்கொண்டு மேல் உதட்டைச் சுழித்தபடி கிழவி மனேஜரைக் உற்றுப் பார்த்தார். மனேஜருக்கு நடுக்கம் தொடங்கியது. பணிவான குரலை வரவழைத்துக்கொண்டு ’நான் என்ன செய்யவேண்டும்?’ என்றார்.

’இந்த தவளையை அது எங்கே இருந்து வந்ததோ அங்கே கொண்டுபோய் விடவேண்டும். வேறு யாருமல்ல. நீர் செய்தால்தான் எனக்கு திருப்தி.’

மனேஜர் கண்ணாடிக் குவளையுடன் தவளையை எடுத்துக்கொண்டார். 300 மைல் தொலைவிலிருந்த ஒரு விவசாயியின் தோட்டத்திலிருந்து அந்த தவளை வந்திருந்தது. கிழவிக்கு எங்கே தெரியப் போகிறது என்று அவர் தவளையை பக்கத்து காட்டிலே எங்காவது விட்டிருக்கலாம். 300 மைல் தூரம் பயணம் செய்து தவளையின் பிறப்பிடத்தை கண்டுபிடித்து அங்கேயிருந்த குளத்தில் அதை விட்டுவிட்டு திரும்பினார்.

இந்த விசயம் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது. பத்திரிகை ஒன்று அந்த விவசாயியை சந்தித்து எழுதியது. இன்னொரு பத்திரிகை கிழவியை பேட்டி கண்டது. மனேஜருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. நூற்றுக்கணக்கான கிறிஸ்மஸ்  அட்டைகள் வந்தன. கிறிஸ்மஸ் விற்பனை முன்னெப்பொழுதும் தொடாத உச்சத்தை தொட்டதுடன் முதல் தடவையாக சுப்பர்மார்க்கெட் லாபமும் காட்டியது.

ஒரு வருடம் சென்றது. கிழவியிடம் இருந்து மனேஜருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை வந்தது. அதன் கீழே இப்படி எழுதியிருந்தார். ‘தவளை எப்படி இருக்கிறது?’.

மனேஜர்  பதில் எழுதினார்.

‘கடந்த வருடம் நகரத்திலே தான் கிறிஸ்மஸ் கொண்டாடிய கதையை தன் நூற்றுக்கணக்கான சந்ததியினருக்கு தவளை கதை கதையாக சொல்லிக்கொண்டிருக்கிறது.’

– அ. முத்துலிங்கம்

(படித்ததில் பிடித்தது)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s