ஹார்ட் டிஸ்க்குகள் நீண்ட நாள் உழைக்க

cvhcwHC.jpg

நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும். ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.

நாமாக ஏற்படுத்தும் சேதம்:

ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்?

கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இடத்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.

ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது.

இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.

சிதறியபடி பதியப்படும் பைல்கள் (File fragmentation):

பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும். இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு. டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும்.

அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்:

ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும். இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது. குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.

மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு:

மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும். கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலிருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்?

சர்ஜ் ப்ரடக்டர் (surge protector)என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

Advertisements

பொதுவுடமை போராளி ப.ஜீவானந்தம் என்கிற தோழர் ஜீவா

சுதந்திர போராட்ட வீரராக, பொதுவுடமை போராளியாக, மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கிய தோழர் ஜீவாவின் பிறந்த நாள் இன்று.

தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய  தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது  வாழ்வில்  நாற்பது  வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய  ஆயுள் காலத்தில் பத்து  வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை  இயக்க பற்றாளராக, பொதுவுடமை  இயக்க தலைவராக செயலாற்றியவர்.

ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம்,
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்–உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து.

சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜீவா, ஒன்பதாம் வகுப்பு  படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும்
எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம்  மீது தனி ஆர்வம்  கொண்டிருந்தார். பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்கு புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர்.

பொதுவுடமை  மேடைகளில் முதல் முறையாக  தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா  தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல.

இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கு கிடைக்காத பேறு.

இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  மகளாகிய கண்ணம்மாவை திருமணம்  செய்து கொண்டார். இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

பெரியாரோடு இணைந்து  வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம்  ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு  அளிக்கப்பட்ட தூக்கு  தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால்  அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார். சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார். பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு,  திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

1930 களில் தன்னை  சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பொதுவுடமை தோழர்களுடன் சிறை சென்றார். வெளிவரும்போது தீவிர பொதுவுடமையாளனாக வெளிவந்தார்

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஜீவா,  சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார். சீனா, இந்தியாவில்  ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் முக்கிய பங்கு ஜீவாவினுடையது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939–1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்கு சென்று செயலாற்றினார்.

1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களை கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். எதிராளியையும்  பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்திய உரை “சட்டப்பேரவையில் ஜீவா” என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.

எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது.

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி ‘தாமரை’ இலக்கிய இதழை தொடங்கினார். ‘ஜனசக்தி’  நாளிதழையும் தொடங்கினார்.

தன் இறுதிக்காலம் வரை மக்களிடையே வாழ்ந்த ஜீவா, வறுமையிலேயே கழித்தார். ஜீவாவின் இறுதிக்காலம் வறுமையிலேயே கழிந்தது. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா  வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காமராஜரின் உதவியாளர்,  திறப்பு விழா நடக்கும் இடத்தின் அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிற போக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். காரணம் அது ஒரு குடிசைப்பகுதி.

நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர்,  அவரது எளிமையான வீட்டை கண்டு இன்னும் அதிர்ந்துபோனார். அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. அலுவலகம் திரும்பிய காமராஜர் உடனடியாக ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார்.

“என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதிக்காலமும் அத்தகைய மனநிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக்காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை” என மறுத்தார் நேர்மையாளர் ஜீவா.

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா.

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு  அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது.

மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள்.

இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.
நன்றி – ஆனந்த விகடன்

பான் கார்டின் அவசியம்

pan_card_12

இந்தியாவில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் நம்பர் எனப்படும் நிரந்தக் கணக்கு எண் கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

இந்த எண் குறிப்பிடப்படும்போது வருமான வரித் துறைக்கு அதன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் என்பதால் இது அவசியமானதாகிறது.

வருமான வரி செலுத்துபவர் பற்றிய விவரங்களை ஆராயவும் அவரது பல்வேறு முதலீடுகள், கடன்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த இணைப்புகள் உதவும். இந்நிலையில் பான் எண் அவசியமாகத் தேவைப்படும் சில முக்கிய இடங்களையும், அதன் வழிமுறைகளையும் பார்ப்போம்…

பணப் பரிவர்த்தனை

ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புடைய வியாபாரத்திற்கு நிரந்தரக் கணக்கு எண் அல்லது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது டீலர்களுக்குத் தரப்படும் தொகை மற்றும் தங்க நாணயம் வாங்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

ஹோட்டல் அல்லது உணவு விடுதி

ஒரே நேரத்தில் இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ஒரு ஹோட்டலுக்கோ அல்லது உணவு விடுதிக்கோ தரப்படும்போது பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

விமானப் பயணம்

வெளிநாடு செல்ல ஒரே சமயத்தில் பயணக் கட்டணமாகச் செய்யப்படும் செலவு இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு மேல் இருந்தால் விமான நிறுவனங்கள் பான் எண்ணை அவசிமாகப் பெறப்படுகிறது.

ஆயுள் காப்பீடு

ஒரு வருடத்திற்குள் ஐம்பதாயிரம் அல்லது அதற்கதிகமான தொகைக்கு ஆயுள் காப்பீட்டுப் பிரிமியத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.

வைப்பு நிதி திட்டம்

வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலகத்தில் செலுத்தப்படும் ஐம்பதாயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான வைப்புத் தொகை

தொலைப்பேசி இணைப்பு

தனிநபர் அல்லது அலுவலகத்திற்குத் தொலைப்பேசி அல்லது செல்ஃபோன் இணைப்புப் பெறத் தரப்படும் விண்ணப்பத்தில் கூடப் பான் எண்ணை முக்கியமாக ஆவணமாகக் கருதப்படுகிறது.

காசோலை

ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வங்கி ஆணை அல்லது காசோலைகளை வங்கிகளில் பெற விண்ணப்பிக்கும் போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

பங்கு அல்லது கடன் பத்திரங்கள்

ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் பங்கு அல்லது கடன் பத்திரங்கள் வாங்க அல்லது விற்கப்படும்போது செய்யப்படும் ஒப்பந்தத்தில் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

வங்கிக் கணக்கு

வங்கிக் கணக்கை துவக்கும் நபர் இளையவராக அதாவது மைனர் இருந்தால், அவருடைய தந்தை, தாய் அல்லது காப்பாளர் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

பண அட்டை

வங்கிகள் உங்கள் சேமிப்பு கணக்கின் மீது நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க விரும்பினால், இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது பாண் எண் கட்டாயமாகக் கோரப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் அல்லது பங்குகள் வாங்கும்போது அதன் மதிப்பு ஐம்பதாயிரம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால்.

ரிசர்வ் வங்கி

ஐம்பதாயிரத்திற்கு அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு ஒரு நிறுவனம், அமைப்பு அல்லது ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன்பத்திரங்கள் அல்லது பங்குப்பத்திரங்கள் வாங்கும்போது பாண் எண்ணை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

வாகனம்

கடந்த சில மாதங்களாக எந்த ஒரு வாகனம் அல்லது மோட்டார் வாகனங்களை வாங்கும்போதும் பாண் எண் பெறப்படுகிறது. இதன் மூலம் அரசு அதிக மதிப்புடைய உங்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் கவணிக்கத் துவங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது.

படிவ எண் 60ஐ

பான் எண் இல்லாமல் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புபவர் படிவ எண் 60ஐ சமர்ப்பிக்க வேண்டும். விவசாயத்தின் மூலம் வருமானம் பெறும் நபர் படிவ எண் 61ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டில் எந்த க்ளவ்ட் சர்வீஸ் சிறந்தது?

qWn1OzJ.png?1

இணைய சேவையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும், தன் பயனாளர்களுக்கு, க்ளவ்ட் சேவையின் மூலம் அவர்களின் பைல்களைத் தேக்கி வைக்க இடம் அளித்து வருகிறது. அவ்வப்போது, தேக்கும் இடத்தின் அளவினை அதிகரிப்பதன் மூலமும், வேறு சில கூடுதல் வசதிகளைத் தருவதன் மூலமும், தங்கள் வாடிக்கையாளர்களைத் தங்களிடமே தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றன. 

புதிய பயனாளர்களைக் கவரவும் இந்த வழிகளைப் பயன்படுத்துகின்றன. எனவே, தற்போது கிடைக்கும் க்ளவ்ட் சேவைகளில், எந்த நிறுவனத்தின் க்ளவ்ட் சேவை சிறந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையையும், க்ளவ்ட் சேவை நிலைகளையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“எனக்கு எது சிறந்த க்ளவ்ட் சேவை?” என்ற கேள்விக்கான பதில் உங்களிடம் தான் உள்ளது. உங்களுக்கு பைல்களைத் தேக்கி வைக்க எவ்வளவு இடம் தேவை மற்றும் எந்த அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய பைல்களுக்கு இடத்தைத் தேடுகிறீர்கள் என்பவற்றைப் பொறுத்தே இதற்கான பதில் கிடைக்கும்.  நிதி பரிமாற்றம், மக்கள் நலத்துறை சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் நீங்கள் செயல்படுபவராக இருந்தால், உயர்ந்த பாதுகாப்பான நிலையில் தேக்குவதற்கான இடம் அளிக்கும், கட்டண சேவையே உங்களுக்கு உகந்தது.

நீங்கள் ஒரு நுகர்வோராக இருந்து, அல்லது ரகசிய தகவல்களைக் கையாளாத, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால், உங்களைப் பொறுத்தவரை எளிமையாகக் கையாளக் கூடிய வசதி, குறைந்த கட்டணம், அதிக தேக்ககத்திற்கான இடம் ஆகியவை பாதுகாப்பினைக் காட்டிலும் முன்னிலை தர வேண்டிய விஷயங்களாக இருக்கும். இருப்பினும், க்ளவ்ட் ஸ்டோரேஜ் என்று வருகையில், நம் பைல்கள் சுருக்கப்பட்டு தேக்கப்படுவதும், இடத்தின் அளவுமே முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வகையில், தனிப்பட்ட நபர் பயன்பாட்டிற்கும், வர்த்தக நிறுவனப் பயன்பாட்டிற்குமான க்ளவ்ட் ஸ்டோரேஜ் குறித்து இங்கு பார்க்கலாம். தற்போது நமக்குக் கிடைக்கும் ஐந்து க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகளை இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.

ட்ராப் பாக்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் கூகுள் ட்ரைவ்அதிக வசதிகளைக் கொண்டவையாக இந்த மூன்றும் இயங்குகின்றன. தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை அளிக்கின்றன. வசதிகளை அளிப்பதுடன், கட்டண விகிதங்களும் பயனாளர்கள் எளிதாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளன. பாதுகாப்பு வகையில், இந்த மூன்றும் ஒரு குறையைக் கொண்டுள்ளன. பைல்களை இணையத்திற்குக் கொண்டு செல்கையில், இங்கு அவற்றைப் பாதுகாப்பாகச் சுருக்குவது இல்லை. ஆனால், தேக்கி வைக்கப்படும் இடத்திற்குச் சென்றவுடன், சுருக்கப்பட்டே பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பு தன்மை, தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் சில நிறுவனங்களுக்கு பெரிய இழப்பினைத் தரப்போவதில்லை. ஒரு சில நிறுவனங்கள் கையாளும் பைல்களின் தன்மையைப் பொறுத்து, வடிவமைக்கப்படும் அமைப்பினைப் பொறுத்து, தொடக்கத்திலேயே அவை சுருக்கப்படுவது தேவைப்படலாம். எனவே, அத்தகைய நிறுவனங்கள், இந்த சேவையைப் பெறாமல் போகலாம்.

ட்ராப் பாக்ஸ்:

Rre0gg0.png

மற்ற ஸ்டோரேஜ் வசதிகளைக் காட்டிலும், ட்ராப் பாக்ஸ் பலவகை சாதனங்களுக்கு சப்போர்ட் செய்திடுகிறது. லினக்ஸ், விண்டோஸ் போன், பிளாக் பெரி போன்றவற்றில் உருவாக்கப்படும் பைல்களையும் இதில் தேக்கி வைக்கலாம். ஆனால், இது அளிக்கும் இடம் மிகவும் கஞ்சத்தனமாக, 2 ஜி.பி. அளவே உள்ளது. நீங்கள் முயன்றால், கூடுதல் இடம் இலவசமாகப் பெறலாம். உங்கள் நண்பர்களுக்கு, நீங்கள் ட்ராப் பாக்ஸ் பரிந்துரைத்தால், அதற்கேற்றபடி, தேக்கும் இடம் அதிகரிக்கும். மேலும் உங்கள் மொபைல் போனில், தானாக கேமரா அப்லோட் வசதியை செட் செய்தாலும், ட்ராப் பாக்ஸை உங்கள் சமூக தளப் பக்கங்களில் தொடர்பு படுத்தினாலும், ட்ராப் பாக்ஸ் கூடுதல் இடத்தினை வழங்குகிறது.

ட்ராப் பாக்ஸ் ப்ரோ (Dropbox Pro): 

tfrRWwt.png?1

 இந்த வசதி, மாதந்தோறும் 9.99 டாலர் செலுத்தினால் கிடைக்கிறது. அல்லது ஆண்டுக்கு 99 டாலர் செலுத்தி கூடுதல் இடம் பெறலாம். ஒரு டெரா பைட் இடம் தரப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களுக்கு, ஒன்றுக்கு ஆண்டுக்கு 150 டாலர் கட்டணத்தில் ஒரு டெரா பைட் இடம் தரப்படுகிறது.

ஒன் ட்ரைவ்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவ் க்ளவ்ட் சேவை, இலவசமாக 15 ஜி.பி. இடம் ஒருவருக்கு தருகிறது. மற்றவர்களுக்கு இதனைப் பரிந்துரை செய்வதன் மூலம், மேலும் 5 ஜி.பி. இடம் பெறலாம். நீங்கள் Office 365 பயனாளராக இருந்தால், 1 டெரா பைட் இடம் இலவசமாகக் கிடைக்கும். இதில் தேக்கப்படும் பைல்களை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கையில், பார்க்க மட்டும், அல்லது எடிட் செய்வதற்கும் என பல நிபந்தனைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வசதிகள் ட்ராப் பாக்ஸ் ப்ரோ கட்டணம் செலுத்தி வாங்கினால் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஒன் ட்ரைவில் இது இலவசம். கூடுதலாக, 100 ஜி.பி. 200 ஜி.பி. மற்றும் ஒரு டெரா பைட் இடம் வேண்டும் என்றால், மாதந்தோறும் முறையே 1.99 டாலர், 2.99 டாலர் மற்றும் 6.99 டாலர் செலுத்திப் பெறலாம். ஆனால், மைக்ரோசாப்ட் ஒரு நிபந்தனை விதிக்கிறது. அதன் பார்வையில் சரியற்ற கோப்புகளை அழித்துவிடும் உரிமையை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது.

கூகுள் ட்ரைவ் : 

Xr4evSv.png

ஜி மெயில், கூகுள் அப்ளிகேஷன்ஸ், கூகுள் போட்டோஸ் எனத் தன் அனைத்து சேவைகளுக்காக என 15 ஜி.பி. இலவச இடத்தினை கூகுள் ட்ரைவ் அளிக்கிறது. உங்களிடம் ஏற்கனவே கூகுள் அக்கவுண்ட் ஒன்று இருந்தால், உங்களுக்கு கூகுள் ட்ரைவ் வசதி உள்ளது; அதனை நீங்கள் அனுபவித்துக் கொண்டுள்ளீர்கள் என்று பொருள். இங்கு தேக்கப்படும் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கையில், அதற்கான நிபந்தனைகளை எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் அமைக்க கூகுள் ட்ரைவ் உதவுகிறது. ஆனால், ட்ராப் பாக்ஸ் 256 பிட் என்கிரிப்ஷன் வசதி தருகையில், இது 128 பிட் என்கிரிப்ஷன் வசதி மட்டுமே தருகிறது. 

ஸ்பைடர் ஓக் மற்றும் ட்ரெசோரிட் (SpiderOak and Tresorit):

 இந்த இரண்டு க்ளவ்ட் சேவை வசதிகளும், நாம் என்ன வகையான பைல்களைத் தேக்குகிறோம் என்று கண்டு கொள்வதே இல்லை. ஏனென்றால், நம் கம்ப்யூட்டரை விட்டு பைல்கள் செல்லும்போதே, அது சுருக்கப்பட்டுவிடுகிறது. இவை இரண்டும், பைல் பகிர்தல் மற்றும் பாதுகாப்பு குறித்த வசதிகளை வெவ்வேறு வகைகளில் அளிக்கின்றன.

ஸ்பைடர் ஓக் :

e9wdR81.jpg?1

நீங்கள் தேக்கும் பைல்களைப் பகிர்ந்து கொள்கையில், ஸ்பைடர் ஓக், இந்த பைல்களை உருவாக்கிய உங்களுக்கும், யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கிறீர்களோ அவர்களுக்கும், ஒரு “தனி அறை” தருகிறது. இந்த “அறை” பாஸ்வேர்டினால், பாதுகாக்கப்படுகிறது. இதனை இணையதள லிங்க், பைல் லிங்க் அல்லது மின் அஞ்சல் அழைப்பு மூலமாக மட்டுமே அணுக முடியும். இங்கு கிடைக்கும் Hive என்னும் வசதி மூலம் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள பைல்களை ஒருங்கிணைக்க முடியும். ஆனால், அதற்கு உங்கள் சாதனத்திலிருந்து பைல்களை நீங்கள் இழுத்து வந்து இந்த Hiveல் அமைக்க வேண்டும்.  இது இலவசமாக 2 ஜி.பி. இடம் அளிக்கிறது. கட்டணம் செலுத்தி 30 ஜி.பி. ஒரு டெரா படி, 5 டெரா பைட் இடத்தினைப் பெறலாம். இதற்கான கட்டணம் முறையே, மாதம் ஒன்றுக்கு டாலர் 7, 12 மற்றும் 25 ஆகும்.

ட்ரெசோரிட்:

RuhxW2A.png

 இந்த க்ளவ்ட் சேவை, குழுக்களை அதாவது tresor களை அமைக்க அனுமதிக்கிறது. இந்த குழுக்களுக்கு, நீங்கள் உங்கள் நண்பர்களை அழைக்கலாம். உங்கள் நண்பர்களுடன் இந்த குழுவில் பைல்களைத் தேக்கிப் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும், குழுவினை அணுக அனுமதி தனித்தனியே தரப்படுகிறது. தன் தேக்கும் இடத்தினை, அனுமதியின்றி உடைக்கும் ஹேக்கர்களுக்கு, 50 ஆயிரம் டாலர் அளிப்பதாக, இந்நிறுவனம் சவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த ஹேக்கரும் இந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. மாதந்தோறும் 12.5 டாலர் செலுத்தினால், சுருக்கப்பட்ட இடமாக 100 ஜி.பி. கிடைக்கிறது. வர்த்தக நிறுவனங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புடன், கூடுதல் வசதிகளுடன், அதிகக் கட்டணத்தில் இடம் அளிக்கிறது.

இந்த ஆண்டில், இதுவரை நாம் அறிந்த வரையில் கிடைக்கின்ற க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகள் மேலே தரப்பட்டுள்ளன. நீங்கள் எதிர்பார்க்கும் வசதி, உங்கள் பட்ஜெட் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில், நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.