14 வயதில் சாதனை புரிந்த 14 பிரபலங்கள்…..

11329809_836057236481068_6800187563480833305_n

பதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள் பற்றிய தொகுப்பு

ஷேக்ஸ்பியர்
———————- தந்தை பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால் சிறையில் தள்ளப்படுகிறார், தங்கை இறந்து போகிறார், பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார், சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது சிறுவன் அதை யெல்லாம் மறக்க தானே தனியாக முயற்சி செய்து தலை சிறந்த நூல்களை தேடித்தேடி படிக்கிறான். உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான் அந்த சிறுவன்.

அப்துல்கலாம்
———————-
உலகப்போர் சமயம் அது, வீட்டில் வறுமை தாண்டவமாட தினமணி செய்தித்தாள்களைதொடர்வண்டியில் இருந்து வீசும் பொழுது அதைப்பெற்று ஊரெல்லாம் விநியோகம் செய்து வீட்டின் வறுமை போக்க உதவுகிறான் அந்த சுட்டிப்பையன் கூடவே செய்திகளை ஊரில் பலருக்கு படித்து காண்பிக்கவும் செய்கிறான். வருங்காலத்தில் செய்திதாள்களெல்லாம் கொண்டாடப்போகும்அந்த பொறுப்பான சிறுவன் அப்துல் கலாம்.

மலாலா
————–
தாலிபான்கள் முதலிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் தடுக்கப்படும் அவலத்தை உலகுக்கு தன் எழுத்தின் மூலம் எடுத்து சொன்னவரும் அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடியவரும் ஆன மலாலாவுக்கு அவரின் பதினான்காம் வயதில் பாகிஸ்தானின் முதல் தேசிய இளைஞர் அமைதி விருது வழங்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தர்
———————————–
பதினான்கு வயதில் ராய்பூரை நோக்கி சொந்த ஊரான கல்கத்தாவில் இருந்து அப்பாவின் பணிமாறுதல் காரணமாக படிக்க போன நரேந்திரன் அங்கே நல்ல பள்ளிகள் இல்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்த பொழுது விளையாடி பொழுது போக்காமல் அப்பாவுடன் பல்வேறு ஆழமான தலைப்புகளில் அனுதினமும் பேசி பேசி அறிவை விரிவு செய்து கொண்டான். உலகமே சுவாமி விவேகானந்தர் என புகழும் மாமனிதரே அந்த சிறுவன்.

மைக்கேல் பாரடே
—————————
அந்த சிறுவனின் அப்பா கொல்லராக இருந்தார், சாப்பாட்டிற்கே வீட்டில் கஷ்டம், பள்ளி கல்வியே கிடைக்காமல் தானே முயன்று கற்க வேண்டிய சூழல், சிறுவன் புத்தக பைண்டிங் செய்யும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கே வரும் புத்தகங்களை அந்த வயதில் படித்து தேறினான். அவன் பிற்காலத்தில் அறிவியல் உலகின் தலைசிறந்த சோதனையாளர் என புகழப்பட்ட மைக்கேல் பாரடே.

விஸ்வநாதன் ஆனந்த்
———————————–
பதினான்கு வயதில் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் அந்த சிறுவன் யாருமே செய்யாத சாதனையான ஒன்பதிற்கு ஒன்பது என அனைத்து போட்டிகளிலும் வென்று தேசிய சாம்பியன் ஆனார். மின்னல் வேகத்தில் அவனின் மூவ்கள் இருந்தன. அந்த மின்னல் வேக ஆட்டக்காரர் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் .

பீலே
—————
சா பாலோ மாநில கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டான் அந்த பதினான்கு வயது பொடியன், இருந்தவர்களிலே நான் தான் மிகவும் குட்டிப்பையன் புல் தரையில் இல்லாமல் செயற்கை மைதானத்தில் ஆடுவது பயத்தை தந்தது. ஆனால் பந்து காலில் பட்டதும் மீன் நீரில் நீந்துவதை போல ஆடுவோம் என முடிவு செய்து ஆடினேன் என்று அதை இன்று விவரிக்கும் அவன் அந்த தொடரில் அதிகபட்சமாக பதினைந்து கோல்கள் அடித்தேன். வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என நான் புரிந்து கொண்ட வயது பதினான்கு. அவர் தான் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என புகழப்படும் பீலே. (மூன்று உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமானவர்).

பகத் சிங்
—————
பதினான்கு வயதிற்கு முன்னமே விடுதலை போரில் பங்குகொள்ள ஆரம்பித்து இருந்த அந்த தைரியம் மிகுந்த சிறுவன் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அமைதி வழியில் போராடிய குழுவினர் ஊர் ஊராக சென்று ஆதரவு திரட்டிய பொழுது தன் ஊரில் முன்னணியில் நின்று அவர்களை ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் பதினான்கு வயதில் வரவேற்றான். அந்த வீரச்சிறுவன் பகத் சிங்.

பாப்லோ பிகாசோ
—————–
லோலா என்கிற தன் தங்கையை இழந்த சோகத்தில் முதல் கம்யூனியன் என்கிற அவள் நினைவாக ஒரு ஓவியத்தையும், ஆன்ட் பெப்பா என்கிற இன்னொரு ஓவியத்தையும் அந்த பதினான்கு வயது சிறுவன் தீட்டினான். அகோரமாக இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை என ஏளனம் செய்தார்கள் பலர். ஆனால் அந்த ஆன்ட் பெப்பா ஸ்பெயினின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாக பிற்காலத்தில் குறிக்கப்பட்டது. அந்த சிறுவன் தான் நவீன ஓவியங்களின் தந்தை என போற்றப்பட்ட பாப்லோ பிகாசோ.

மொசார்ட்
—————-
மிட்ரிடேட் ரி டி போன்ட்டோ எனும் இசைக்கோர்வை மொசார்ட் எனும் தலைசிறந்த இசைமேதை எழுதிய பொழுது வயது பதினான்கு. பதினான்கு வயது சிறுவன் ஆயிற்றே என சந்தேகத்தோடு வல்லுனர்கள் அதை இசைத்தார்கள் எந்த மாற்றமும் இல்லாமல் மக்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது. இருபத்தோரு முறை மக்கள் முதல் முறை இசைத்த பொழுது மீண்டும் மீண்டும் இசைக்க செய்தார்கள். ரோமை மீட்க போராடும் மிட்ரிடேட் எனும் மன்னனின் கதையை சொல்லும் இசைக்கோர்வையே அது.

சாப்ளின்
————-
பிரிந்து அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும் வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக் கொண்டு மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த குட்டிப் பையன் நடிக்கிறான் நாடகம் தோல்வியடைகிறது.அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் என பத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின்.

பில் கேட்ஸ்
——————-
எப்படி டைம் டேபிள் போடுவது என திணறிக்கொண்டு இருந்த பள்ளிக்கு பதினான்கு வயதில் செயல்பாட்டு திட்டத்தை கச்சிதமாக ப்ரோக்ராமிங் மூலம் நண்பர் பால் ஆலனோடு இணைந்து வடிவமைத்து கொடுத்து பள்ளியில் நான்காயிரத்து இருநூறு டாலர் வருமானம் பார்த்த அந்த சாகசக்கார பையன் பில் கேட்ஸ்.

தாமஸ் அல்வா எடிசன்.
————————–
படிக்க லாயக்கில்லை என பள்ளியை விட்டு ஐந்து வயதில் துரத்தப்பட்டு அம்மாவின் கவனிப்பில் மற்றும் கற்பிப்பில் வளர்ந்த அந்த சிறுவன் தன் பதினான்காம் வயதில் நாடு முழுக்க உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருந்த பொழுது சுடச்சுட செய்திகளை தானே முழுக்க முழுக்க தொடர் வண்டியிலேயே அச்சிட்டு அங்கேயே தி வீக்லி ஹெரல்ட் என்கிற பெயரில் விற்றும் காண்பித்தான் அந்த புத்திசாலி சிறுவன். அந்த செய்திதாளில் கிசுகிசுக்களையும் இணைத்து வெளியிட்டு குறும்பு செய்தான் அவன். அவனின் பெயர் தாமஸ் அல்வா எடிசன்.

சச்சின்
———–
மும்பை கிரிக்கெட் சங்கம் வருடா வருடம் தேர்ந் தெடுக்கும் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த சச்சினுக்கு அவரின் பதினான்காம் வயதில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. போன சீசனில் நீ நன்றாக விளை யாடினாய் விருதுகளை பற்றி கவலைப்படாதே, பிற வீரர்கள் சரியாக ஆடாத பொழுது நீ மட்டும் போராடியது எனக்கு பிடித்து இருந்தது.
பின் குறிப்பு: விருது கிடைக்காததற்கு வருந்தாதே அந்த விருதை வாங்காத ஒரு இளைஞன் டெஸ்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தான். (கவாஸ்கர் தன்னை குறிப்பிடுகிறார்) இக்கடிதமே தன்னை கவாஸ்கரை போல சாதிக்க தூண்டியது என்கிறார் சச்சின்.

Advertisements

டீ கடை விஜயனின் அமெரிக்க அனுபவங்கள்!

Captureaa
டீகடை விஜயனின் அமெரிக்கபயண அனுபவங்கள்…

டீகடை விஜயன் யார் என்பதை முதலில் சொல்லிவிட்டு பிறகு அவரது அமெரிக்க பயணத்தை பற்றி பிறகு சொல்கிறேன்

தற்போது 64 வயதாகும் விஜயன் கேரளா மாநிலம் கொச்சியில் கடலங்கரா என்ற இடத்தில் ஸ்ரீபாலஜி காபி ஹவுஸ் என்ற பெயரில் சிறிய அளவில் டீகடை நடத்திவருகிறார்.காலை மாலையில் இட்லி தோசை பூரி உப்புமா போன்ற பலகாரங்களும் நாள் முழுவதும் டீயும் விற்றுவருகிறார்,இவருக்கு உதவியாக இருப்பவர் இவரது 63 வயதான மணைவி மோகனாதான்.இருவரும் பள்ளி படிப்பைக்கூட தாண்டாதவர்கள். இரண்டு பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து இரவு ஒன்பது மணிவரை தம்பதிகள் கடுமையாக உழைப்பார்கள் மகள்கள் திருமணத்திற்கு உழைத்து உழைத்து களைத்துப்போன தம்பதிகளுக்கு வயதான காலத்தில் எங்காவது வெளியூர் போய் கொஞ்ச நாளைக்கு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதில் விஜயனுக்கு ஊர் சுற்றுவதில் நிறைய ஆர்வம் உண்டு ஆனால் பொருளாதாரம் காரணமாக அந்த ஆர்வத்திற்கு அணைபோட்டு வைத்திருந்தார்.மகள்கள் திருமணத்திற்கு பிறகு சிறிது சிறிதாக சேர்த்துவைத்திருந்த பணத்தை மணைவி மோகணா கொடுக்க உள்ளூர் டிராவல்ஸ் மற்றும் பாங்க் கடன் உதவியுடன் 2007-ம் ஆண்டு எகிப்து இஸ்ரேல் ஜோர்டன் பாலஸ்தீன் துபாய் உள்ளீட்ட நாடுகளுக்கு 18 நாள் பயணம் சென்று வந்தனர்.

பாங்க் கடனை சிறுக சிறுக அடைத்து முடித்த போது அடுத்த எந்த நாட்டிற்கு போகிறீர்கள் எவ்வளவு பணம் வேண்டும் என்று பாங்க் கேட்கவே அடுத்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு பயணம் சென்று வந்தனர்.

இப்படியே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வெளிநாட்டு பயணம் என்ற அளவில் லண்டன்,ஜெர்மன்,ரோம் உள்ளீட்ட பல நாடுகளுக்கு போய்விட்டு வந்துவிட்டனர்.

வெளிநாடு போகும் போது இவரது கடையை மூடிவிடுவார் திரும்பிவந்து கடையை திறந்ததும் பழையபடி இவரது வாடிக்கையாளர்கள் இவரை தேடிவந்துவிடுவர் காரணம் குறைந்த விலையில் தரமான உணவு பொருள் கொடுப்பதால்.விஜயன் அடிக்கடி சொல்வதே என் கடைக்கு வந்து சாப்பிடுபவர்களுக்கு வயிறு மட்டுமல்ல மனசும் நிறைஞ்சு இருக்கும் என்பதே.

இப்படி வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வதை நிலத்தில் நகையில் முதலீடு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்குமே என்று சொல்பவர்களை பார்த்து இவர் நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க பாருங்கள் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை விட்டுவிடாதீர்கள் என்பதே.இங்கெல்லாம் போகமுடியுமா? என்று யோசித்தால் எதுவும் நடக்காது முடியும் என்று முயற்சித்தால் எதுவும் முடியும் ஒரு டீ கடைகாரனால் இவ்வளவு முடியும்போது மற்றவர்களால் எவ்வளவோ முடியும்தானே.

இப்படியே பல நாடுகளுக்கு போய்வந்த விஜயன் தம்பதியினர் நீண்ட கால கனவான அமெரிக்காவிற்கும் போய்விட்டு வந்துவிட்டனர்.இவர்கள் சமீபத்தில் சென்னை வந்தபோது அவர்களை வைத்து இன்விசிபிள் விங்ஸ் என்ற குறும்படத்தை எடுத்துள்ள ஹரி என்பவர் மூலம் சந்திக்க முடிந்தது.

மிகவும் உற்சாகமாக தனது அமெரிக்க பயணத்தைபற்றி சொன்னவர் நாயகரா,ஹாலிவுட்,டைம்ஸ்கொயர்,வெள்ளை மாளிகை,சுதந்திராதேவி சிலை போன்ற இடங்கள் தந்த சந்தோஷத்தை பிரமிப்புடன் விவரித்தார்.

மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும் ஸ்மார்ட் போன் கிடையாது இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும் எனக்கு இல்லையில்லை எங்களுக்கு என்று மணைவியின் தோள்தொட்டு சொல்கிறார், வெட்கமும் சந்தோஷமும் மோகனாவிஜயனின் முகத்தில் பொங்குகிறது…

நன்றி – தினமலர்

காசு பணம் துட்டு

ஒரு ரூபாய் காசு பார்த்திருப்பீர்கள். ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்கான செலவு அதிகமாக இருந்ததால் 1994 நவம்பர் மாதத்தோடு, ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியிருந்தது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் நாம் பயன்படுத்தும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து ஆச்சரியமான, அதிகம் தெரியாத, சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போமா:

$ நாம் நினைப்பதற்கு மாறாக ரூபாய் நோட்டுகள் காகிதத்தால் ஆனவை அல்ல. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் பருத்தி, பருத்திக் கழிவால் உருவாக்கப்படுகின்றன.

$ இந்தியாவில் 18-ம் நூற்றாண்டில் காகித ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அப்போது இந்துஸ்தான் வங்கி, வங்காள வங்கி, பம்பாய் வங்கி, சென்னை வங்கி ஆகிய நான்கு தனியார் வங்கிகள் காகித ரூபாய்களை அச்சிட்டு வெளியிட்டுவந்தன. 1861-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு மட்டுமே காகித ரூபாய்களை வெளியிடலாம் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனியார் காகித ரூபாய்கள் தடை செய்யப்பட்டன.

$ நாட்டின் அதிகாரபூர்வ முதல் காகித ரூபாயை மத்திய ரிசர்வ் வங்கி 1938-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. அந்த 5 ரூபாயில் பிரிட்டன் மன்னர் நான்காம் ஜார்ஜின் படம் இடம்பெற்றிருந்தது.

$ மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சிட்டதிலேயே அதிகபட்ச மதிப்புகொண்டது 10,000 ரூபாய் நோட்டு. அது 1938, 1954-ம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டது. ஆனால், இடையில் 1946, 1978-ம் ஆண்டுகளில் இவை மதிப்பற்றவையாக அறிவிக்கப்பட்டன. 1934-ல் இயற்றப்பட்ட ரிசர்வ் வங்கிச் சட்டத்தின்படி 10,000 ரூபாய்க்கு மேல் காகித ரூபாய் நோட்டை அச்சிட முடியாது.

$ மக்களின் பொதுப் புழக்கத்துக்காக 500 ரூபாய் நோட்டு 1987-ம் ஆண்டும், 1000 ரூபாய் நோட்டு 2000-ம் ஆண்டும் வெளியிடப்பட்டன.

$ 1957-ல்தான் இந்திய நாணயங்கள் 100 பைசாக்களைக் கொண்ட ஒரு ரூபாய் என மாற்றப்பட்டது. அதற்கு முன் 16 அணாக்கள்தான் ஒரு ரூபாய். ஒரு அணா என்பது 4 பைசாக்களுக்குச் சமம்.

$ 75, 150, 1000 ரூபாயிலும் நாணயங்கள் இருக்கின்றன தெரியுமா? 2010-ம் ஆண்டில் பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாட மேற்கண்ட மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இவை பொதுப் பயன்பாட்டுக்கானவை அல்ல.

ரிசர்வ் வங்கியின் 75-வது ஆண்டு விழா, ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் 1000-வது ஆண்டு விழாக்களை கொண்டாடும் வகையில் இந்த நாணயங்கள் வெளியாயின. நாணயம் சேகரிப்பவர்கள், நாணயச் சாலைகளுக்கு விண்ணப்பித்து இவற்றை வாங்கிக்கொள்ள முடியும்.

$ 2011-ம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி 1000 ரூபாய் வரையிலான மதிப்பில் நாணயங்களை வெளியிடலாம்.

$ ஒவ்வொரு ரூபாய் நோட்டின் இடது கைப் பக்கத்தில் தூக்கலாகச் செதுக்கப்பட்ட ஏதாவது ஒரு வடிவம் இருக்கும். ஆயிரம் ரூபாயில் வைரம், 500 ரூபாயில் வட்டம், 100 ரூபாயில் முக்கோணம், ரூ. 50-ல் சதுரம், ரூ. 20-ல் செவ்வகம், ரூ. 10-ல் எந்த வடிவமும் இருக்காது. இந்த வடிவங்களைத் தடவிப் பார்த்தே பார்வையற்றவர்கள் ரூபாயின் மதிப்பை அறிகிறார்கள்.

$ நாசிக் (மகாராஷ்டிரம்), தேவாஸ் (மத்திய பிரதேசம்), மைசூர் (கர்நாடகம்), சல்பானி (மேற்கு வங்கம்) ஆகிய நான்கு இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.

$ மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத்தில் உள்ள நாணயச் சாலைகளில் நாணயங்கள் உருவாக்கப்படுகின்றன.

$ எந்த நாணயச் சாலையில் நாணயம் உருவாக்கப்படுகிறது என்பதற்கு அடையாளமாக நாணயத்தில் ஆண்டுக்குக் கீழே டெல்லி என்றால் புள்ளி, மும்பை என்றால் வைரம், ஹைதராபாத் என்றால் நட்சத்திரம், கொல்கத்தா என்றால் எந்த அடையாளமும் இன்றி இருக்கும்.

$ நாடு விடுதலை பெற்று பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் இந்திய ரூபாய் நோட்டுகளின் மீது பாகிஸ்தான் என்று முத்திரையிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. 1948-ல்தான் புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பாகிஸ்தான் வெளியிட்டது.

$ பயன்படுத்த முடியாத பழைய ரூபாய் நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன என்று தெரியுமா? பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்துப் புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி சேகரித்து, அவற்றைத் துண்டு துண்டாக்கி, பந்தைப் போல மாற்றி, தேநீர்க் குவளை மூடிகள், பேப்பர் வெயிட், பேனா ஸ்டாண்ட், கீ செயின் போன்றவை செய்யப் பயன்படுத்துகிறது.

நன்றி – தி ஹிந்து