திருமணத்துக்கு முன்…கவனிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்!

ஆறு மாத பணக் கையிருப்பு அவசியம்!

திருமணத் தேதி குறித்தவுடனே ஆறு மாதங்களுக்குத் தேவையான குடும்பச் செலவு எவ்வளவு என்பதைத் தோராயமாகக் கணக்கிட்டு, அதற்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தைக் கடனாக வாங்கக் கூடாது. திருமணத்துக்குப்பின் ஏற்படும் அவசர கால செலவுக்கு இந்த சேமிப்பு நிச்சயம் உதவும்.

p31a.jpg

ஆயுள் காப்பீடு அவசியம்!

திருமணத்துக்கு முன்பே ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களது வருமானத்துக்கு ஏற்ற ஆயுள் காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கட்டப்படும் பிரீமியம் ஒருவரது  வருமானத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டியது அவசியம்.

கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனம் தேவை!

திருமணமானவுடன் புதுப் பெண்டாட்டியை அசத்த பலரும் வேண்டிய, வேண்டாத பொருட்கள் என்றுகூட பார்க்காமல் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கித் தள்ளுவார்கள். கிரெடிட் கார்டு பயன்படுத்தி அதில் உள்ள கடன் வரம்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது தவறு. நம்மை அறியாமல் பெறும் இந்த கிரெடிட் கார்டு கடன், பிற்பாடு மிகப் பெரிய சுமையாக மாறிவிடும் என்பதால் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக் குவிப்பதில் கடன் வரம்பை மீறாமல் இருப்பது அவசியம்.

திருமணச் செலவுக்கு பெர்சனல் லோன் வேண்டாமே!

திருமணம் முடிவானதும் நண்பர்களுக்கு பார்ட்டி தருவதில் ஆரம்பித்து பலவிதமான செலவுகளை சமாளிக்க பலரும் நாடுவது  பெர்சனல் லோனைத்தான். பெர்சனல் லோன் வாங்கி இந்தச் செலவுகளை சமாளிக்க நினைப்பது பெரும் தவறு. பெர்சனல் லோன்கள் அவசரத்துக்கு உதவியாக இருக்கும் என்றாலும் பிற்பாடு அதுவே பெரும்சுமையாக மாறிவிடும். இந்தக் கடனை சமாளிக்க வெளியில் கடன் வாங்கி இரண்டுக்கும் வட்டி கட்டும் சூழல் ஏற்படும். இதனைத் தவிர்க்க, வேலை கிடைத்த நாளில் இருந்தே திருமணத்துக்கு என நல்ல வருமானம் தரும் முதலீட்டில் சேமித்தால் அடுத்த நான்கு வருடங்களில் ஒரு நல்ல தொகை கையில் இருக்கும்.

p31b.jpgதிருமணச் செலவுகளைக் குறையுங்கள்!

திருமணம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் ஒருமுறை நடப்பதுதான். அதனை சிறப்பாக செய்யவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்யவேண்டும் என்பதில்லை.   2 – 3 லட்சங்களில் செய்யவேண்டிய ஒரு  செலவை 5 – 6 லட்சத்துக்குக் கொண்டு செல்வதைக் குறைக்கலாம். திருமணச் செலவைக் குறைப்பதன் மூலம் திருமணத்துக்குப்பின் நிதி தொடர்பான சிக்கல் எழாமல் இருக்க உதவும்.

இஎம்ஐல் கவனம் தேவை!

திருமணமானவுடன் வாகனக் கடன், வீட்டுக் கடன் என வாங்கிக் குவித்துவிட்டு, இஎம்ஐயில் எளிதாகக் கட்டலாம் என பலரும் நினைக்கிறார்கள்.  இஎம்ஐல் கடனைத் திரும்பக் கட்டுவது   தனியாளாக இருக்கும் வரை எளிது. ஆனால், திருமணம், குடும்பம் என்று ஆகிவிட்டால், அது சுமையாக மாறிவிடும். காரணம், மாதச் செலவுகளில் பெரும் தொகையை இஎம்ஐ கடன்கள் ஆக்கிரமித்துவிடும். அதனால் குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகும். உங்கள் வருமானத்தில் இஎம்ஐயானது 10 – 15 சதவிகிதத்துக்குள் இருந்தால் நல்லது.

பிபிஎஃப்ல் சேமியுங்கள்!

பிபிஎஃப் போன்ற நீண்ட கால முதலீடுகளில் சேமிப்பை ஏற்படுத்துவது உங்களுக்குத் திருமண நேரத்தில் உதவியாக இருக்கும். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து ஆறு வருடங்களில் ஒருவருக்குத் திருமணம் ஆகிறது எனில், பிபிஎஃப்ல் சேமித்த தொகை மிகப் பெரிய உதவியாக இருக்கும். எனவே, பிபிஎஃப் போன்ற நீண்ட கால முதலீட்டை அவசியம் செய்யுங்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்!

21 வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும், ஆண், பெண் இருவருக்குமே 25 அல்லது 26 வயதில் திருமணம்  ஆகிறது எனக் கொண்டால், இடையே நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் உள்ளன. இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் சராசரியாக ஆண்டுக்கு 3,00,000 ரூபாய்ச் சம்பாதிப்பவர் எனில், உங்கள் அத்தியாவசியமான செலவுகள் அனைத்தும் போக மாதமொன்றுக்கு 5,000 ரூபாயை ஒருவரால்  சேமிக்க முடிந்தால், ஐந்து வருடங்களில் அவரிடம்  3 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். திட்டமிட்டு சேமிப்பதன் மூலமே இது சாத்தியம்.

p32a.jpg

இம்பல்ஸிவ் பர்ச்சேஸை குறையுங்கள்!

திருமணமானவுடன் மனைவி கேட்டதை எல்லாம் வாங்கித் தரவேண்டும் என்று நினைக்கத் தோன்றும். இதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும் சம்பளம் கிடைத்தவுடன் அடிக்கடி மால்களுக்கு விசிட் செய்து, ஒரு பொருளை பார்த்தவுடன் வாங்க விரும்பும் இம்பல்சிவ் மனநிலை அதிகரிப்பதால், நிதி நிர்வாகம் கடுமையாகப் பாதிப்படையும். ஆன்லைனில் பொருட்களை வாங்குவது துவங்கி ஷாப்பிங், சினிமா எனப் பட்டியல் நீளும். திருமணத்துக்குமுன் இவை உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும், திருமணத்துக்குப்பின் இவை சிரமம் தரும் என்பதால் முடிந்த அளவுக்கு இந்த இம்பல்ஸ் பர்சேஸை குறைத்தால் உங்கள் நிதிப் பிரச்னை குறையும்.

புதிய நிதி சூழலுக்குத் தயாராகுங்கள்!

இன்று பெரும்பாலானோர் வெளியில் தங்கி வேலை பார்ப்பவர்களாக இருப்பீர்கள். அப்போது நீங்கள் தங்கும் இடத்துக்கான வாடகை துவங்கி உணவு வரை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது என்ற நிதி சூழலில்தான் இருந்திருப்பீர்கள். தற்போது திருமணம் ஆனவுடன் தனி வீடு, உணவுக்கான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் எனத் தொடங்கி அனைத்துக்கும் நீங்களே செலவு செய்யும் சூழல் உருவாகும். அப்படி உருவாகும்போது அந்த நிதிச் சூழலில் உங்களது சம்பளத்தில் இருந்து பங்களிப்பு அதிகமாகும். அதனைச் சமாளிக்கும் விதமாக உங்கள் சம்பளமும் அதில் நீங்கள் செய்யும் செலவு களும் இருக்க வேண்டும். இதனைச் சமாளித்தால் உங்கள் நிதிச் சூழல் சிறப்பாக அமையும்.

ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

நன்றி – விகடன்

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!

‘பெண்களை கவர்வது எப்படி’ என்ற பதிவிட எனக்கு தெரிந்த பெண்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [ சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ‘ மனைவியை கவர்வது எப்படி’ என்ற பதிவிட மணமான பெண்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ‘ என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா’ என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அதனால் நைசாக பேசி, நாசூக்காக நான் கேட்டு தெரிந்துக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில், மனைவியை கவர சில டிப்ஸ்…………….

டிப்ஸ் -1:
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ‘ உம் ‘ ‘உம் ‘ என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ‘ உப்பு சப்பில்லாத டப்பா ‘ மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

‘உம்’ கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், ” ஓ! அப்படியா”, ” ஆஹா! இப்படியா?” என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ‘ அல்வாவும், ஒரு முழம் பூவும்’ வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு ‘பூ’ பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து ‘ஐஸ்’ வைக்கும் காலம் மலையேறி விட்டது.

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்……] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ‘ சர்பரைஸ்’ ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள்.மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்……..ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் ” சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்” என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
“எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ”ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!