மாற்றுத்திறனாளி அல்ல பலரை மாற்றும் திறனாளி கோவை ஜெகதீஷ்..

 

 

“வணக்கம் அண்ணா”

 

அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த அந்த இருபத்திரெண்டு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனையும்,கண்ணீரும் குபுக்கென்று பொங்குகிறது.

 

காரணம்

 

சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே உள்ள பாகங்களில் கைவிரல்களில் மட்டுமே அசைவு உண்டு, அதுவும் லேசாக.
அந்த லேசான அசைவுகளையும், தனக்குள்ளான ஆர்வத்தையும், கம்ப்யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களை பெற்றுள்ளார்.
ட்வீட்டரும், பேஸ்புக்கும், பிளாக்கிலும் புழங்குகிறவர்களுக்கு “ஜகூ’ என்ற வார்த்தை பிரபலம், “ஜகூ’ என்ற வார்தைக்கு பின் இருப்பவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் கோவை ஜெகதீஷ்.
எல்லோரும்தான் எழுதுகிறார்கள் ஆனால் ஜெகதீஷின் தனித்துவம் அவரது எழுத்தில் இருக்கிறது.
வெட்டி அரட்டை எல்லாம் இல்லை, எந்த ஓரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவீரமாகவும் விமர்சிக்கிறார்.
இந்திய பொருளை வாங்கு இந்தியனாக இரு என்பதை தீவிரமாக சொல்கிறார்.
தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு “ஆன் லைனில்’ தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்.


கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றவர்.அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்துவருகிறார்.

தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் நான் இறங்கத்தயார் அதுவும் உத்தமமான மாணவர் அமைப்போடு என்று அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், நான் கப்பல் என்ஜீனியர் எனக்கான புராஜக்டை என்னால் முடிக்க முடியவில்லை நீங்கள் உதவமுடியுமா?என்று கேட்ட என்ஜீனியருக்கு ஓ…தாரளமாக என்று முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஓரு பக்கம் என்று மனதால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று ஒடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம் இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்பமுடிகிறதா ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

வலியும்,வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை,
வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினரின் ஒரே மகனான ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு, ஆனால் கண்பட்டது போல நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது. மூன்று வயதில் உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் முகத்தின் பற்கள் சேதமடைந்தது, ஏழு வயதில் நிற்கவைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது, மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம் உயிரை விட்டுவிட்டு உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது, இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, சேமித்த பணம் போனது கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது…

தந்தை தனது தொழிலைவிட்டுவிட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவராயிருக்கிறார், ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், அந்தக்கால பிகாம் படிப்பாளியான ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து ஜெகதீஷின் குடும்பம் பசி, தாகம் அறியாது காத்து வருகிறது.
இந்த நிலையில் ஜெகதீஷ் தனது ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனது தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இண்டர்நெட் உதவியுடன் உதவியுடன், மெத்த படித்த கம்ப்யூட்டர் அறிவாளிகளுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில் தனது அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார், எங்காவது போவது என்றால் பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருவார், மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில் இயர் போனை செருகிக்கொண்டு இடது கையின் நடுவிரலை

jaggu

அசைத்து,அசைத்தே, நம்மில் பலராலும் முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார், இல்லையில்லை செதுக்குகிறார்.
இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், இதைவிட மேலானாது, தான் கற்றதையும், பெற்றதையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார். தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்க விரும்புகிறார்.

இவரிடம் கம்ப்யூட்டர் திறமை நிறைய இருக்கிறது, தமிழில் வளமையான அறிவு இருக்கிறது, எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும் இருக்கிறது, எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவு இருக்கிறது.
இல்லாதது, நிரந்தர வருமானம். என்னைப்பெற்ற அவர்களது மனதிலும்,கண்ணிலும் மகிழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன்,அதற்காக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறேன், இனியும் இவன் சுமை அல்ல, சுகமானவனே என என்னைச் சார்ந்தவர்களை அனைவரும் எண்ணும்படி மாறவேண்டும், அதற்கு உழைக்க தயராக இருக்கிறேன். ஆனால் என் தகுதி அறிந்து வேலை தருபவர் யாரும் உண்டா? என்பதை தினமலர் இணையதளம் மூலம் அறிய விரும்புகிறேன்.
வறுமையும், திறமையும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா வாசகர்களே
உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையை,தொழிலை தர எங்கள் வாசகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்கள் உங்கள் எண்ணில் தொடர்பு (9791497906) கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அவருள் விதைத்துவிட்டு விடைபெற்றேன்.


(வேலை தருவதற்காக இல்லாவிட்டாலும் பராவாயில்லை இவருடன் நேரம் கிடைக்கும் போது பேசிப்பாருங்கள், கொங்கு மண்ணின் மரியாதை என்றால் என்ன என்பது தெரியவரும், இவரது ஆளுமை புரியவரும்.)
விடைபெறும் போது பாசமும், அன்பும் இழையோட ஜெகதீஷிடம் இருந்து குரல் வந்தது
“நன்றி!அண்ணா”!          

                                                                                                               

நன்றி: தினமலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s