ஆல் இன் ஆல் அம்மா

சொல்வதெல்லாம் சும்மா..?

அது என்ன அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையா அல்லது அம்மா அருள்வாக்கா? இந்தியா முழுமைக்குமான சர்வரோக நிவாரணிபோல ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார் ஜெயலலிதா. தனக்குப் ‘பிடித்தது – பிடிக்காதது’, தான் இதுவரை ‘எதிர்த்தது – எதிர்க்காதது’, ‘சொன்னது – சொல்லாதது’ அனைத்தையும் சேர்த்துக் குழைத்து சுண்டவைத்து ஒரு ஸ்பெஷல் சூப் தயாரித்துவிட்டார்.

இனி… இந்தியாவுக்கு காங்கிரஸும் தேவை இல்லை; கம்யூனிஸ்ட்களும் அவசியம் இல்லை. தி.மு.க-வும் வேண்டாம்; ம.தி.மு.க-வும் வேண்டாம். தமிழர் இயக்கங்களும் தேவை இல்லை; பி.ஜே.பி-க்கும் ஆம் ஆத்மி-க்கும் இனி வேலையே இல்லை… என்று சொல்லும் அளவுக்கு எல்லாக் கட்சிக் கொள்கைகளையும் கபளீகரம் செய்துவிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதா விரித்திருக்கும் இந்த மாயக் கம்பளம், மயக்கம் தருகிறது. முதலில் தலை சுற்றவைப்பது, தனி ஈழம் அமைந்திட, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் எடுத்திருக்கும் உறுதி. 2008-09-ல் இந்தியாவின் காலடியில் ரத்தம் பொங்கி இந்து மகா சமுத்திரத்தை மூழ்கடித்தபோது, ‘ஈழம்’ என்ற வார்த்தையே ஜெயலலிதாவுக்குக் கசந்தது. ‘ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?’ என்று ஜெயலலிதாவிடம் (18.1.2009) கேட்கப்பட்டபோது, ‘அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல்ரீதியில் அலுவல்ரீதியில் சொல்லப்படுகிறது’ என்று வியாக்கியான வகுப்பு எடுத்தவர்.

‘இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல. ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள், வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு, ராணுவத்தின் முன்னால் ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்’ என்று இலங்கை அரசைக் காப்பாற்றியவர் இவர்.

‘மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தபோது, தி.மு.க. அதைத் தட்டிக்கேட்கவில்லை’ என்று தேர்தல் அறிக்கையில் இப்போது குற்றம் சொல்லும் ஜெயலலிதா, ‘இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது’ (16.10.2008) என்றும் சொன்னவர்.  ‘போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்’ என்றும் சொல்லி, ஈழத்தின் பக்கமே முகத்தைத் திருப்பாமல் எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தார். சிங்களப் பத்திரிகைகள், முக்கியத்துவம் கொடுத்து இதனை வெளியிட்டுப் புல்லரித்தபோதுதான் சிங்கள ராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் போட்டன. கொடூரம் கூடியது; தேர்தல் நெருங்கியது. தனது நிலைப்பாட்டை மாற்றியாக வேண்டிய நெருக்கடியில் ஜெ., ஈழத் தாய் வேடம் இட்டார். கருணாநிதிக்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த விவகாரம் என்பதால், அதனைக் கையில் எடுத்தார். ஆட்சியும் மாறியது. ஈழத்துக்கு ஆதரவான தீர்மானங்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

தூக்கு விவகாரத்தில்கூட, ‘மாநில அரசால் இனி எதுவும் செய்வதற்கு இல்லை’ என்று முதல் நாள் சட்டமன்றத்தில் சொல்லிவிட்டு (29.8.2011), செங்கொடி தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு அரங்கேறுவதைப் பார்த்தும், உயர் நீதிமன்றம் தடைகொடுக்கத் தயார் ஆகிவிட்டதை அறிந்தும் தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார் ஜெயலலிதா. இப்போது ஏழு பேரை விடுதலை செய்யும் வேகத்தில் நிற்கிறார்.

‘விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட நானே காரணம்’ என்று பெருமைப்பட்டவர், ‘பிரபாகரனைக் கைதுசெய்ய ராணுவத்தை அனுப்ப வேண்டும்’ என்று ஆசைப்பட்டவர், கிட்னி செயல்படாத நிலையில் மரணப்படுக்கையில்கூட பாலசிங்கம் தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்றவர், இப்போது ஈழத் தமிழர்கள் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இத்தகைய தீர்மானங்களை அரங்கேற்றுகிறார் என்பதை நம்ப எவரும் இல்லை. ஆனால், கடல்கடந்த மக்களைக் கருவறுக்க காங்கிரஸ் அரசாங்கம் செய்த உதவிகள், இங்குள்ள தமிழர்களின் உதிரத்தில் அனலாகத் தகித்துவருவதை தேர்தல் நேரத்தில் அறுவடை செய்ய, ஈழம்தான் ஒரே வழி என்பதை ஜெயலலிதா கண்டுபிடித்திருக்கிறார்.

காங்கிரஸுடன் சண்டை போட கடல் சோகம் என்றால், பா.ஜ.க-வுடன் மல்லுக்கட்ட மதவாதம். ஜெயலலிதா பேச ஆரம்பித்துள்ள மதச்சார்பின்மை என்ற வார்த்தைதான் இந்த அறிக்கை நடிப்பின் உச்சம்.

பல நூறு ஆண்டு கால மத சகிப்புத்தன்மைக்கு பாபர் மசூதி இடிப்பின் மூலமாக பங்கம் வந்தபோது, தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், கரசேவையை (23.11.92) ஆதரித்துப் பேசியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. ‘ராமர் கோயிலை இந்தியாவில் கட்டாமல் எங்கே போய் கட்டுவது?’ என்றும் (29.7.2003) கேட்டவர். இன்றைக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக, ‘ராமர் பாலத்தை இடிக்கலாமா? இந்துக்களின் மனதைப் புண்படுத்தலாமா?’ என்று (26.7.2008) கேட்டுக்கொண்டும் இருப்பவர்.

ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டம் உருவாக்கப்படுகிறதா என்பது இருக்கட்டும், ‘சேது சமுத்திரத் திட்டத்தை அறிவித்துவிட்டு சல்லிக்காசுகூட பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என்று 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ‘சேது சமுத்திரத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வைப்போம்’ என்று 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும், ‘சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிவைக்க தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் தவறிவிட்டன’ என்று 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் சொன்ன ஜெயலலிதா, இப்போது மௌனமாகிவிட்டு மதச்சார்பின்மை பேசுகிறார்.

மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்து, ஆடு, கோழி வெட்டக்கூட கோயில்களில் தடைபோடும் அளவுக்குப்போன ஜெயலலிதா, இன்று மதச்சார்பின்மை பேசுவது, கிளம்பி எழும் மோடி அலையில் மூழ்கி சிறுபான்மை வாக்குகளை அள்ளத்தான்.

ஆம் ஆத்மிகூட ஜெயலலிதாவை ஆட்டுவிப்பதற்கு அடையாளம்தான், கறுப்புப் பணத்தை மீட்டு எடுப்பது பற்றி கவலைப்படுவது, வெளிநாடுகளில் முடங்கிக்கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர ஆவன செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். வெளிநாட்டில் என்ன, கணக்குக் காட்டாமல் தமிழகத்துக்கு உள்ளேயே முடக்கப்பட்டுக் கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர கடந்த இரண்டு ஆண்டு காலத்தை ஜெயலலிதா பயன்படுத்தி இருக்கலாம்.

ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் தரும் ஜெயலலிதா, லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு சிறு துரும்பைக்கூட இதுவரை தூக்கிப் போடவில்லை. பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கை துணிச்சலாக எதிர்கொண்டு, என்ன தீர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என்று இருந்திருந்தால், சிந்துபாத்துக்குப் போட்டியாக அந்த வழக்கு மாறியிருக்காது. ஊழல் பற்றிப் பேச அண்ணா ஹஜாரேவுக்கு அடுத்த தகுதிகூட அவருக்கு வந்திருக்கக்கூடும்.  பொதுத் துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கவே கூடாது என்பதில் ஜெயலலிதா காட்டும் உறுதியைப் பார்த்து, கம்யூனிஸ்ட்கள் விக்கித்து நிற்பார்கள். மாநில நலனுக்குக் குந்தகம் இல்லாத வெளியுறவுக் கொள்கையைக் கேட்டு, ம.தி.மு.க-வினர் மலைத்துப்போயிருப்பார்கள். சிறுபான்மையினர் நலன்களைப் பார்த்து, இஸ்லாமியர்கள்,  கிறிஸ்தவர்கள் கிறுகிறுத்துப்போயிருப்பார்கள்.

ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு என்பது மத்திய தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது.

எல்லாமே சரிதான்! இவற்றை தமிழ்நாட்டில் செய்துகாட்டுவதற்கு உங்களுக்குத் தடங்கலாக இருந்தது, இருப்பது எது? எவ்வளவு பெரிய மாளிகை கட்டுவதற்கு முன்பும், முதலில் அதேபோன்ற மாதிரி ஒன்றை உருவாக்குவார்கள். அப்படி உங்கள் கையில் கிடைத்த வாய்ப்புதான் இந்தியப் பிரதமருக்கு முன்னால், தமிழக முதல்வர் என்ற மகுடம். ஒன்றல்ல… இரண்டல்ல… மூன்றாவது முறையாக உங்களுக்கு வாய்த்துள்ளது. ஆனால், முன்மாதிரித் தமிழகமாக முகிழ்க்கவைக்க முடியாமல் தடுத்தது எது?

இந்தக் கேள்விகள் மூலமாகக் கிடைக்கும் பதிலால்தான், உங்கள் மீதான நம்பிக்கை பலப்படும். மிக எளிமையான, ஆனால் மனம் கரையவைக்கும் ஓர் உதாரணம்…

‘மாற்றுத் திறனாளிகள் சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் அ.இ.அ.தி.மு.க. உறுதியாக உள்ளது’ என்று கூறியிருப்பதுதான். பட்டப்பகலில் மொட்டை வெயிலில் மாற்றுத் திறனாளிகளான பார்வையற்றவர்களை ஒரு வார காலம், தினந்தோறும் பலவந்தமாக இழுத்துப்போன போலீஸ்காரர்களில் ஒரே ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தகவல் இல்லை. கண் பார்வையற்றவர்களை சென்னைக்கு வெளியே கொண்டுசென்று இருட்டில் விட்டுவிட்டுத் திரும்பிய மனிதாபிமான காவல் துறை அதிகாரிகளுக்கு அடுத்த சுதந்திர தினத்தில் மெடல் அணிவிக்கப்படலாம்.

மொத்த அறிக்கையில் ரணம் ஏற்படுத்திய வரிகள் இவைதான். ஒருவேளை… ஓட்டுப் போடும் மொத்த வாக்காளர்களையும் மாற்றுத் திறனாளிகளாக நினைத்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருப்பார்களோ?

 

நன்றி – ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான் ( ஆனந்த விகடன் )

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s