யதார்த்த சிறுகதை – என்னத்தை சம்பாதிச்சு…?

“முடியாது, முடியவே முடியாது” கறாராக சொன்னார் வேதாசலம்.

 
“அப்படி சொன்னா எப்படிங்க? இப்பல்லாம் வசூல் பண்றதே கஷ்டமா இருக்கு. கவர்மென்ட் ஆபீசுக்குன்னா கேள்வி கேக்காம பணம் கொடுத்துடறாங்க, ஆனா இந்த மாதிரி கூட்டத்துக்குலாம் பணம் கொடுக்க ஆயிரம் கேள்வி கேக்கறாங்க. எங்க கஷ்டத்தையும் பார்க்கணும் நீங்க”
 
“அது உங்க கஷ்டம். ஆனா அதுக்காக என் ரேட்டைக் குறைச்சுக்க முடியாது.”
 
“மருதாசலம் ஐயா கூட கொஞ்சம் குறைச்சுக்க சம்மதிச்சுட்டாரு, நீங்க கொஞ்சம் மனசு வச்சா….”
 
“மருதாசலமும் நானும் ஒண்ணா, அவருக்கு என்ன தெரியும்? என்னோட தகுதி என்னன்னு உங்களுக்கு தெரியாதா?”
 
“அதுக்கு சொல்லலீங்க, …”
 
“இதோ பாருங்க, என் ரேட் கட்டுப்படியாச்சுன்னா என்னைக் கூப்பிடுங்க, நான் விழாவுக்கு வர்றேன். இல்லையா, மருதாசலம் இன்னும் வேற யார் யார்லாம் உங்க ரேட்டுக்கு ஒத்து வர்றாங்களோ, அவங்களை கூப்பிட்டுக்குங்க, எனக்கு ஆட்சேபனை இல்லை.”
 
“அப்படி இல்ல, ஆனா…”
 
“சொல்லப் போனா, நீங்க கூப்பிடற அன்னிக்கு எனக்கு வேற ஒரு ஊரில கூட கூப்பிட்டாங்க, ஆனா தெரிஞ்சவங்களாச்சேன்னு தான் உங்க ஊருக்கு வர சம்மதிச்சேன்.”
 
“சரிங்க, நீங்க சொன்ன ரேட்டுக்கே ஒத்துக்கறோம். அவசியம் விழாவுக்கு வரணும்”
 
“இது நிர்வாகிகளுக்கு அழகு. ஆமா, விழா என்னிக்கு?”
 
“வர்ற திங்கக்கிழமை”
 
“அவசியம் வர்றேன்” 
 
*****************************************
 
விழா மேடையில் வேதாசலம் பேசிக் கொண்டிருந்தார் 
 
“…….அதாவது, என்ன கொண்டு வந்தோம், எடுத்துட்டு போறதுக்கு? காசு பணம் இன்னிக்கு வரும், நாளைக்கு போகும், ஆனா மனுசங்க தான் முக்கியம். குறிப்பா எல்லா மனுசனும் ஒன்னுங்கற நினைப்பு எப்பவுமே நமக்கு இருக்கணும், அதுனால தான் பெரியவங்கல்லாம் எப்பவுமே காசு பணத்துக்கு அலையக் கூடாது, அடுத்தவனை தரக்குறைவா நினைக்கக் கூடாது அப்படினு சொல்லியிருக்காங்க. என்னத்தை சம்பாதிச்சு என்ன கொண்டு போகப் போறோம்?…………………..”
Advertisements