கமலும் பாலாவும் காட்டிய வழி இது! – சடச் சடக்கும் சீரியஸ் விவேக்

Image

கையிலும் பையிலும் மரக்கன்றுகளோடு அலைந்து திரியும் ’சனக்களின் கலைஞன்’ விவேக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்குத் திரும்பியிருக்கிறார். இயக்குனர் பாலாவின் உதவியாளர் ஆர்.கண்ணன் இயக்கும் ‘நான்தான் பாலா’ படத்தில் முதல்முறையாக, நகைச்சுவை உதறிவிட்டுச் சீரியஸ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.இந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொண்டார் விவேக்? அவர் வழிபடும் அப்துல் கலாமிடம் அவருக்குப் பிடிக்காதது என்ன? இன்னும் பல சூடான கேள்விகளுக்கு இந்தப் பிரத்தியேக நேர்காணல் வழியாகத் தி இந்து செய்தியாளர் ஜெயந்தனோடு பேசியிருக்கிறார் விவேக்…

நகைச்சுவை நடிகராக மட்டும் உங்களைப் பார்க்க முடியவில்லை. சமூக ஆர்வலராக இயங்குவதற்கு அப்பால், ஒரு கவிஞராக, ஒரு கட்டுரையாளராக ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். எப்போது எழுதத்தொடங்கினீர்கள்?

உண்மையில் எனக்குப் பிடித்தமானது எழுதுவதுதான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோதே எழுதத் தொடங்கி விட்டேன். வீதீநாடகங்கள் எழுதி, சகமாணவர்களுடன் நடிக்கவும் செய்தேன். மதுரையை ஒட்டிய சின்ன ஊர்களின் உள்ளூர் வினாக்களை எழுதி, அதில் நடிக்கவும் செய்தேன். எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் சுத்தானந்தா எனது நாடக எழுத்தின் குரு. கே.பாலச்சந்தர் இயக்கிய கருப்பு வெள்ளைப் படங்களின் காதலன் நான். சென்னை வந்து அவரிடம் உதவியாளராகச் சேரவேண்டும் என்று விரும்பினேன். நான் பார்த்து வந்த அஞ்சல்துறை பணி அதற்குத் தடையாக இருந்தது. வேலையை உதறிவிட முடிவெடுத்தபோது, சென்னையில் தலைமைச் செயலகத்திலேயே புதிய வேலை கிடைத்தது. பிறகு பாலச்சந்தர் சாரிடம் உதவியாளனாகச் சேரும்வரை, சென்னை ஹியூமர் கிளபுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். என்னை மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகப்படுத்தினார். பிறகு புதுப்புது அர்த்தங்கள். அந்தப் படத்தின் வெற்றி என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.

நீங்கள் இணை இயக்குனர் என்பதும், உங்களுக்கொரு இசைமுகம் இருப்பதும் கூடப் பலருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.

இருக்கலாம். எனக்கு ஹார்மோனியம் வாசிப்பதில் அலாதியான ஈடுபாடு உண்டு. அதன் குரல், ஒரு குழந்தையின் குரல்போல அத்தனைக் கனிவானது ஆனால் தெளிவானது. உலகில் உள்ள எந்த இசை வடிவத்தத்தையும் ஹார்மோனியத்தில் சேதாரம் இல்லாமல் வாசிக்கமுடியும். சரண் அவர்கள் இயக்கிய காதல் மன்னன் படத்தில் பணியாற்றியபோது அந்தப் படத்தில் ’மெஸ் விஸ்வநாதன்’ என்ற கதாபாத்திரம் இருந்தது. அதில் எம்.எஸ்.விஸ்வநாதன் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ’கண்ணதாசன் பெயரில் ’ கண்ணதாசன் மெஸ்’ வைத்து நடத்துபவர் கண்டிப்பாகச் சம்மதிப்பார் என்று நினைத்து, அவரைச் சந்தித்தேன். ” பாலச்சந்தர், பாரதிராஜா நடிக்க அழைத்தே நான் போகவில்லை தம்பி. என்னை விட்டுடு என்றார். கொஞ்ச நாட்களுக்குப்பிறகு மீண்டும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது.. ” துபாய் விமான நிலையத்தில் என்னோட ஹார்மோனியத்தை அக்குவேறு ஆணிவேராகப் பிரிச்சுட்டாங்க. எனக்கு ஈரக்குழையே அறுந்துபோச்சு. காரணம் கேட்டப்போ ஹார்மோனியத்தில் வைச்சு போதைப்பொருள் கடத்துறதா அவங்களுக்கு தகவல் வந்துதாம்”என்றார். ” அவர்கள் சொன்னது உண்மைதானே என்றேன் நான். ” என்ன சொல்கிறாய் !? என்று கேட்டுப் பதறிப் போய்விட்டார். ” இத்தனை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மெட்டுகளைப் போட்டு, தமிழ்நாட்டு மக்களைப் போதையில் ஆழ்த்தினீர்கள். அதற்கு உங்கள் ஹார்மோனியம்தானே காரணம். அப்படிப்பார்த்தால் இன்னும் எவ்வளவு போதை மருந்தை உங்கள் ஹார்மோனியத்தில் பதுக்கி வைத்திருக்கிறீர்களோ யாருக்குத் தெரியும்?” என்று சொன்னேன். எனது பேச்சு, அவரது வருத்தத்தைப் போக்கிவிட்டது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

இயக்குனர் சரணுடன் மனவருத்தம் ஏற்பட்டுப் பிறகு பிரிந்து விட்டீர்கள் இல்லையா?

தொழில்முறையில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் எல்லா இடத்திலும் உண்டுதானே. அப்படி ஏற்பட்ட ஆரோக்கியமான கருத்துப் பிணக்குகள் அவை. அதை நான் தவறாகச் சொல்லமாட்டேன். சரண் நிறைய ’மியூசிக்கல் ஹிட் கொடுத்திருக்கிறார். அவரை விட்டு வெளியே வந்தபிறகு எனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. எனக்காக நான் நான் எழுதத் தொடங்கினதும் அதன்பிறகுதான். திருநெல்வேலி படத்துக்கு எழுதத் தொடங்கின பிறகு, எழுத்தாளர் பிரசன்னக் குமார் என்னோடு வந்து இணைந்து கொண்டார். எங்கள் கூட்டணி சுமார் 500 படங்களில் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைவாணர் வழியில் திரை நகைச்சுவையை ஏன் செய்தி சொல்லும் ஊடகம் ஆக்கக் கூடாது என்று என்னை நானே கேட்டுக்கொண்டு இயங்க ஆரம்பித்த பிறகு, சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள். பிறகு தங்கர்பச்சான் ’சனங்களின் கலைஞனாக’ என்னை அங்கீகரித்தார். தமிழக அரசின் விருதுகளில் ஆரம்பித்து ’ மத்திய அரசின் ’பத்மஸ்ரீ’ வரை, எல்லாம், ரசிக எஜமானர்கள் நம்மை ஏற்றுக்கொண்டதால் சாத்தியமானது.

Image

நடிகர் விவேக் புகழ்பெற்று விட்டதால், இயக்குனர் விவேக் இனி வெளிப்பட வாய்ப்புகள் குறைவு இல்லையா?

அலைபாயுதே படத்தின்போது மணிரத்னம் சாரே கேட்டார். ஆனால் கேப்டன் ஆஃ த ஷிப் வேலை அத்தனை எளிதானது அல்ல. எதிர்பாராமல் கப்பல் முழ்கினால் கடைசியாகக் குதித்துக் கூட நீங்கள் தப்ப முடியாது. இயக்கம் என்று வரும்போது முன்தயாரிப்பு வேலைகளுக்கே ஆறுமாதம் போய்விடும். என்றாலும் இயக்கத்தைக் கண்டிப்பாகத் தொடுவேன். அதற்கு இன்னும் காலம் இருப்பதாக நினைக்கிறேன்.

ஆனால் முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், படமாக்க இருக்கும் கதைகளை உங்களிடம் சொல்லி ஆலோசனை கேட்கும்போது மறுப்பதில்லையாமே நீங்கள்?

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாக அதைப் பார்ப்பதால் அந்த இன்ப அவஸ்தையை ஏற்றுக்கொள்கிறேன். பலநேரங்களில் கேட்கப்படும் கதையால் துன்ப அவஸ்தையாகிவிடுகிறது. ஆனால் எனது ’ஸ்கிரிப்ட் சூப்பர்வைசிங்’ மூலமாக யாருடைய வாழ்க்கையும் கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். காரணம் சினிமாவில் அடையாளம் பெற இங்கே முதல்பாதி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்தான் அதிகம்.

அதேநேரம் என் வெளிப்படையான விமர்சனத்தை மீறிப் படமெடுத்தவர்கள் முட்டியை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையில் அவருக்கு மேல் உச்சபச்ச நட்சத்திரம் கிடையாது. அவர் என்னை அழைத்து நடிக்கவிருக்கும் கதையைச் சொல்லி ஆலோசனை கேட்டார். ” உங்களது வெறிபிடித்த ரசிகர்கள் விரும்பும் கதை இதுவல்ல. ஏதோ மந்திரசக்தி, மாயசக்தி வந்து, கதையில் வரும் தீயசக்தியை எதிர்ப்பதுபோல் இருப்பது மிகப்பெரிய ஓட்டை. ரசிகர்கள் உங்கள் சக்தியைத்தான் எதிர்பார்ப்பார்கள்” என்றேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நான் சொன்னது போலவே அந்தப் படத்தின் நிலை ஆனது. கதை கேட்பதோடு மட்டும் நான் நிறுத்தி கொள்வதில்லை. அதன்பிறகு அந்த அதைக்கதையில் இருக்கும் குறைகளைக் களையும் வரை எனக்கு மன அமைதி ஏற்படாது. இதற்காகவும் என் பொழுதுகளை இழந்திருக்கிறேன். அதில் பலரது வாழ்க்கையை மலரும்போது ஏற்படும் மகிழ்வே தனிதான்.

திக்குமுக்காடித் திசை தெரியாம திணறி, முட்டு சந்துல மாட்டிக்கிட்ட மூஞ்சுறு மாதிரி, நல்ல கதைகள் கிடைக்காம சிரமப்படுது சார் தமிழ் சினிமா’ என்று 2006 ல் ஒரு காட்டமான கட்டுரை எழுதியிருந்தீர்கள் இப்போ தமிழ்சினிமா எப்படியிருக்கிறது?

புதிய இளைஞர்கள் நிறைய வந்துவிட்டார்கள். இவர்களுக்கு என் வாழ்த்துகள். பிளாக் காமெடி என்ற சொற்பதங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் காலையில் எழுந்து பல் கூட விளக்காமல் இளைஞர்கள் மது அருந்துவதாகக் காட்டும் பாடாவதி தமிழ்சினிமாகள் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. கதாநாயகிகள் மது அருந்துவதாக, ஒரு த்ரிலுக்காகச் சித்தரிக்கும் அவலமும் அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறது. இளைஞர்கள் என்றாலே மது அருந்துவது மட்டும்தான் அவர்களது ஒரே பொழுதுபோக்கு என்று சித்தரிப்பதை மட்டும் மாற்றிக்கொண்டால், வரலாறு வாழ்த்தும்.

இன்று சினிமா நகைச்சுவை என்பதை ஆபாசம் என்பதாகப் பல நடிகர்கள் புரிந்து கொண்டுவிட்டதுபோலத் தெரிகிறதே?

மலிவான சரக்கு உடனடியாக விற்பனையாகலாம். ஆனால் எப்போதுமே அதுவிலைபோகாது. கலப்படப்பொருள் என்று தெரியும்போது கைவிட்டுவிடுவார்கள். ஆபாசமும் அப்படித்தான். ரசிகர்கள் தெளிவான தீர்ப்பைத் தரக்கூடியவர்கள். சென்னை என்றாலும் கன்னியாகுமரி என்றாலும் ஒரே தீர்ப்புதான். திருந்தாதவர்கள் தப்பிக்கவே முடியாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களை எந்தத் திரைவிழாக்களிலும் காணமுடியவில்லையே?

விழாக்களில் மட்டுமல்ல, திரையிலும் என்னைப் பார்த்திருக்க முடியாது. அதற்குக் காரணம் ஐயா அப்துல் கலாம் அவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் என்னை அழைத்த அவர் ” பல நடிகர்கள் இதை, கையிலெடுத்துப் பாதியில் போட்டுவிட்டார்கள். இதை உங்களால் செய்யமுடியும் என்று ’க்ரீம் கலாம்’ திட்டதை என் கையில் கொடுத்தார். நானும் ஏன் முடியாது என்று இறங்கிவிட்டேன். 25 ஆண்டுகளாக நம்மைப் புகழோடும், பொருளோடும் வைத்திருக்கிறது இந்தச் சினிமா. சினிமா என்றால் அதை வாழவைக்கும் மக்கள். அவர்களுக்கு நன்றிக்கடனாக இதைச் செய்ய வேண்டும் என்று களத்தில் இறங்கினேன். என்னை விரும்பும் கோடிக்கணக்கான ரசிகர்களையும், நலம் விரும்பிகளையும் இதில் ஈடுபடுத்த நினைத்தேன் பாதுகாப்பு மிக்க பள்ளி, கல்லூரி வளாகங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில், 20.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். மரங்களை நடும்முன்பு புவி வெப்பமடைதல் பற்றி பேசுகிறேன். அது மாணவர்களைச் செயல் வீரர்களாக்குகிறது. தற்போது விவசாயிகளும் எங்களோடு கூட்டம் கூட்டமாகக் கைகோர்க்கத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய திருப்பம். திருநெல்வேலி பக்கத்தில் கோபாலசமுத்திரத்தில் 5 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக இருக்கும் ’கிராமோதயம்’ என்ற உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களும், விவசாயிகளும், முன்வந்து என்னை அழைத்தார்கள். 1 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தோம். இனி நாங்கள் இந்தவேலையைக் கையில் எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். விவசாயிகள் இதில் இறங்கினால் முடிவெடுக்காமலேயே கலைந்துபோகும் சர்வதேசச் சூழலியல் மாநாடுகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஒரு கோடி மரங்களை நட்டு, அவை வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்வரை நான் ஓயமாட்டேன். ஆனால் உங்கள் தொழிலையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கலாம் அவர்கள் சொன்னதால் தற்போது மீண்டும் திரைக்குத் திரும்பியிருக்கிறேன்.

நீங்கள் வழிகாட்டியாக, ரோல் மாடலாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் அப்துல் கலாம் அவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன?

அவரது அதீதமான எளிமை. அவருக்கென்று வழங்கப்பட்ட சலுகைகளைக் கூட அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலாம் அவர்களிடம் இருப்பது இரண்டே இரண்டு கோட், இரண்டு பேண்ட் ஆடைகள்தான். இந்த ’க்ரீன் கலாம்’ திட்டத்தில் தனது பெயர் இருப்பது எங்கே சுயவிளம்பரமாகப் பார்க்கப்படுமோ என்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனது பெயரை அதிலிருந்து எடுத்துவிடுங்கள் என்றார். அதனால் தற்போது க்ரீன் கலாம் ’க்ரீன் குளோப்’ ஆகியிருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக ரஜினியும், ஆந்திராவின் சூப்பர் ஸ்டாராகச் சிரஞ்சீவியும் இருக்கலாம். ஆனால் அகில இந்தியாவுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அவர், அப்துல்கலாம் மட்டும்தான்.

இவன்தான் பாலா தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறதே?

இந்தக்கதையை கண்ணன் என்னிடம் சொன்னபோது “ இந்தக்கதையில் நான் எங்கே காமெடி பண்ணவேண்டும் என்று கேட்டேன் “ இல்லை நீங்கள் காமெடியைத்தவிரப் பாக்கியிருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் பண்ணவேண்டும் என்றார். இந்த 25 ஆண்டுகளில் என்னைத்தேடி இப்படியொரு கதையோடு எந்த உதவி இயக்குனரும் வந்ததில்லை. எனக்கு ஆச்சரியம். ” நான் இந்தக் கதையை எனது குருநாதர் பாலாவிடம் சொன்னேன். விவேக்கை ஹீரோவாகப் போடு என்று சொன்னதாக என்னிடம் சொன்னார். 15 ஆண்டுகளுக்கு முன்னர், திருமதி ஜானகி விஸ்வநாதன் ‘குட்டி’ என்ற படத்தை இயக்கினார். அதில் மளிகைக்கடை அண்ணாச்சியா நடித்திருந்தேன். அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, அப்போது எனக்குத் தொலைபேசிய பாலா “ உங்களுக்கு இந்தமாதிரி இன்னொரு பக்கம் இருக்கிறது. அதிலும் நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்றார். இப்போது மீண்டும் பாலாவே என்னை வழிமொழிந்திருப்பதைக் கண்ணன் கூறினார். பாலா சொல்லிவிடுவார் ஆனால் இத்தனை ஆண்டுகளாகக் காமெடியில் பயணம் செய்து விட்டு எப்படி என்று மறுத்துவிட்டேன்.

பிறகு கமல் சாரை ஒரு நேர்காணல்  நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது என்னைத் தனியே அழைத்துச்சென்று மனவிட்டுப்பேசிய கமல், இது நீங்கள் அடுத்தக்கட்டத்துக்கு இடம்பெயர வேண்டிய தருணம். உங்களால் கணமாகக் கதாபாத்திரங்களைக் கண்டிப்பாகப் பண்ணமுடியும். உங்களைச் சீரியஸ் ரோல்களில் ரசிகர்கள் பார்ப்பாங்க..” என்று கமல் சொன்னார். கலைஞானியே சொன்னபிறகு வேறு தடையென்ன? அதன்பிறகுதான் இந்தப் படத்துக்கு ஒகே சொன்னேன். மொத்தபடமும் முடிந்துவிட்டது. படத்தை மொத்தமாக ஒருமுறை பார்த்தபோது ரசிகர்கள் என்னை எங்கே கொண்டுபோய் வைக்கப் போகிறார்கள் என்ற த்ரில் இப்போதே வந்துவிட்டது. ஒன்று சொல்லமுடியும். என் திரைவாழ்க்கையில் இந்தப் படம் மகுடமாக இருக்கும்.

இத்தனை ஆண்டுகாலச் சினிமாவில் நீங்கள் கமலோடு மட்டும் நடிக்கவில்லையே?

பாரதிராஜா – சிவக்குமார் இருவரும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ஆனால் பாரதிராஜா படத்தில் அவர் நடிக்கவே இல்லை.கே.பாலச்சந்தர் அவர்களின் பல நாடகங்களுக்குச் சென்று அவரைப் பாராட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அவரும் கே.பி இயக்கத்தில் நடிக்கவில்லை. கமலுடன் நான் இணைந்து நடிக்காதற்கும் காரணங்கள் இல்லை. அவரும் அழைத்ததில்லை. நானும் கேட்டதில்லை. எதிர்காலத்தில் வாய்ப்பு அமைந்தால் அது சீரியஸான வாய்ப்பாகக் கூட இருக்கலாம்!

நன்றி  – ஆர்.சி.ஜெயந்தன் (தி ஹிந்து)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s