தல – தளபதி சினிமா

தல – தளபதி சினிமா
“அஜித்துக்கு நான்தான் வில்லன்!’ – விஜய்; ‘விஜய்க்கு நான்தான் வில்லன்!’ – அஜித்
ம.கா.செந்தில்குமார்

 ”நான், சூர்யா சார், கார்த்தி, பிரேம்ஜி, யுவன் ஷங்கர்… எல்லாருமே ஒரே ஸ்கூல், செயின்ட் பீட்ஸ். சூர்யா, எனக்கு ஒரு வருஷம் சீனியர். கார்த்தி, ஒரு வருஷம் ஜூனியர். பிரேம்ஜி, யுவன் ரெண்டு பேரும் கார்த்திக்கு ஒரு வருஷம் ஜூனியர். இதுல சூர்யா தவிர்த்து இப்ப நாங்க எல்லாருமே ‘ஸ்கூல் ரீ-யூனியன்’ மாதிரி திரும்ப ஒண்ணு சேர்ந்திருக்கோம். ஸ்கூல் நண்பர்கள் திரும்ப லூட்டியடிச்சா, எவ்வளவு ஜாலியா இருக்கும். ‘பிரியாணி’ அப்படி இருக்கும்!”- சூடான சூப் போல, சுவாரஸ்யமாகப் பேசுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

”இந்தப் படம் ஒரு த்ரில்லர். அதற்குள் என் பிராண்ட் காமெடிகளும் இருக்கும். கார்த்திக்கு ஒரு பழக்கம். டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்துகிட்டா, கண்டிப்பா பிரியாணி சாப்பிட்டே ஆகணும். இல்லைன்னா மறுநாள் தலைவலி பின்னி, ஆள் மட்டை ஆகிடுவார். சுருக்கமா, பிரியாணி இல்லைன்னா, பிரச்னை! இந்தப் பழக்கம் அவரை எப்படி ஒரு சிக்கல்ல சிக்கவைக்குது, அதில் அவர் தப்பிக்கிறாரா இல்லையாங்கிறதுதான் படம்!”

Image

”கார்த்திக்கு வரிசையா மூணு படங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் போகலை. ‘பிரியாணி’, அந்த டிராக் ரெக்கார்டைத் திருப்பிப்போடுமா?”

”சார், நல்லா இருக்கணும்னு நினைச்சுதான் எல்லாரும் படங்கள் பண்றோம். வழக்கமான கதையா இருந்தாலும் இந்தப் ‘பிரியாணி’ டிரீட்மென்ட் வித்தியாசமா இருக்கும். அதனால், கார்த்திக்கு இந்த ‘பிரியாணி’ செம கல்லா வசூல் பண்ணும்!”

”சமீபத்தில் அஜித்தைச் சந்திச்சீங்க. அடுத்து அவரை இயக்கப்போறீங்களா?”

”என் பிறந்தநாள் அன்னைக்கு அஜித் சாரைப் பார்த்தேன். கூட கார்த்தியும் இருந்தார். படம், இயக்கம்னு எதுவும் பேசிக்கலை. ஆனா, நிச்சயமா அவரை இன்னொரு படத்தில் இயக்குவேன். நம்புவீங்களா… அதில் விஜய்யும் நடிப்பார். ஆனா,  ஒரு சின்ன சிக்கல்!”Image”அஜித்-விஜய் சேர்ந்து நடிக்க சம்மதம் வாங்கியிருக்கீங்களா? சொல்லவே இல்லை! அதில் என்ன சிக்கல்?”

”ரெண்டு பேரையும் பர்சனலா பலமுறை சந்திப்பேன். அவங்க ரெண்டு பேரையும் சேர்த்துவெச்சு ஒரு படம் பண்ணணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அதை அவங்ககிட்டயே சொன்னேன். சொல்லிவெச்ச மாதிரி, ‘தாராளமாப் பண்ணலாம் வெங்கட். ஆனா, அந்தப் படத்தில் நான்தான் வில்லன் ரோல் பண்ணுவேன்’னு ரெண்டு பேரும் ஒரே பதில் சொன்னாங்க. சும்மா விளையாட்டுப் பேச்சு இல்லை இது. அவங்க ரெண்டு பேரும் இப்படி ஒரு புராஜெக்ட்ல உண்மையிலேயே விருப்பமா இருக்காங்க. சரிசமமா ஸ்கோர் பண்ணக்கூடிய ஒரு ஸ்க்ரிப்ட் அமைஞ்சுட்டா, தைரியமா ரெண்டு பேரிடமும் கால்ஷீட் வாங்கிடுவேன். p92b

ஏன்னா, அஜித் சும்மா ஒரு வார்த்தையை விட மாட்டார். ‘சென்னை 28’ முடிஞ்சதும், ‘எனக்காகக் கதை சொல்லு’னு சொல்லி ரெண்டு பிரபல தயாரிப்பாளர்கள்கிட்ட என்னை அனுப்பி வெச்சார். ஆனா, ‘இவ்வளவு பெரிய ஹீரோவை இவன் எப்படிச் சமாளிப்பான்?’னு அவங்க என்னை நம்பலை. அதனால ‘சென்னை 28’க்கு அப்புறமே நான் அஜித்

படம் பண்ண முடியாமப் போச்சு. ஆனா, ‘மங்காத்தா’ அவரோட 50-வது படம். அதை என்னை நம்பிக் கொடுத்தார். அப்பவும் நான் வெறும் ஒன்லைன்தான் சொன்னேன். ‘ஓ.கே. போகலாம்’னு சொல்லிட்டார். படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் முழுக் கதையையும் சொன்னேன். அவர் என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை வெச்சிருக்கார். அதனால, ‘அஜித் – விஜய் இணைந்து கலக்கும்’ படத்துக்கான சிந்தனை மனசுல ஓடிட்டே இருக்கு!”

Advertisements

நயன்தாரா காதல் அவ்வளவுதானா? ஆர்யா ஃபீலிங்

உதடு பிரியாத புன்னகை, சிநேகம் ததும்பும் கண்கள்… சீக்கிரமே அணுகலாம் ஆர்யாவை. ‘‘அந்த பி.ஆர்.ஓவைப் பாருங்க… இந்த டைரக்டரைக் கேளுங்க…’’ என ஒரு பஞ்சாயத்தும் இல்லை. அதனாலேயே அவரை இன்னும் பிடிக்கிறது. வீட்டில் காரசாரமான ‘டீ’யை ஆர்யாவின் அப்பாவே வந்து சிநேகபூர்வமாக கொடுக்க, ஆரம்பித்தது உரையாடல்…
‘‘ ‘இரண்டாம் உலகம்’ உங்களுக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கே..?’

Image

‘‘எல்லா நடிகர்களுக்குமே பாலா, செல்வராகவன்னா ஒரு பிடித்தம் இருக்கு. ஏன்னா… நடிப்பில் வேடிக்கையா இல்லாமல் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம். ‘இரண்டாம் உலகம்’ கொஞ்சம் லேட்டானது உண்மைதான். ஆனால், அந்த விஷுவல், கதை, பின்னணி எல்லாத்துக்கும் அந்த டைம் வேணும். அதனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. இப்படியான படத்திற்கு இந்த உழைப்பு அவசியம். இந்தப் படத்தை முடிக்கணும்னு எந்த அவசரமும் படலை. ஐ லவ் சினிமா.

வேடிக்கையா சினிமாவுக்கு வந்தவன், இந்த அளவுக்கு ஆனது செல்வா மாதிரியான டைரக்டர்கள் பார்வை பட்ட பிறகுதான். ‘சட்’னு உடம்பை ஏத்தி ‘இரண்டாம் உலக’த்தில் என்னை வேறு மாதிரி செய்தார் செல்வா. அடுத்து மகிழ் திருமேனி, ஜனநாதன்னு படு ஆக்ஷன் படங்கள் பண்றேன். காதல், ப்ளேபாய் இமேஜ்னு சம்பந்தமில்லாமல் ஒட்டிக்கிட்டதை தள்ளி வைக்கவே இப்படி இறங்குறேன். இப்ப இருக்கிற பொசிஷன்… நிஜமாகவே நான் ஹேப்பி!’’

Image

‘‘ப்ளேபாய் இமேஜில் இஷ்டமில்லையா ஆர்யா..?’’
‘‘அதெல்லாம் சும்மாங்க. பாருங்க… வீட்டில அப்பா, அம்மா, தம்பி, நண்பர்கள்னு இருக்கிற உலகம் என்னோடது. கூட நடிக்கிற நடிகைகள் ஏதாவது பிரச்னைன்னு காதில் போட்டால், கொஞ்சம் கூர்ந்து கேட்பேன். நல்லதா ஆலோசனைகள் சொல்வேன். ஃப்ளைட் பிடிக்க போகணும்னு அவசரப்பட்டால்… சீக்கிரம் ஏர்போர்ட் போக ஏற்பாடு பண்ணுவேன். ஏதாவது பார்ட்டிக்கு போகணும்னு துணைக்குக் கூப்பிட்டால் போவேன். ‘ஒரு ஆளா சாப்பிடணுமா… நீங்களும் வாங்களேன்’னு சொன்னா, ‘சரி’ன்னு போய் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு வருவேன். அவ்வளவுதான். இதுக்குத்தான் ‘ப்ளேபாய்… அது… இது…’ன்னு ஏகப்பட்ட ‘பட்டம்’ சுமக்குறேன். 

யாரும் கஷ்டப்படுறது எனக்குப் பிடிக்காது. நடிகைகளுக்கு மட்டுமில்லை, நடிகர்களும் எனக்கு நண்பர்கள்தான். என்கிட்டே நெருங்கி இருக்கிற நடிக நண்பர்கள் பட்டியல் ரொம்ப பெரிசு. நண்பர்களோடு வெளியே போவேன், சுத்துவேன். அது எதுவும் செய்தியா வெளியே வர்றதில்லை. பெண்களோட வெளியே போனால் அவ்வளவுதான்… இப்படி நீங்க கேள்வி கேட்கிற அளவுக்கு வந்துடுது!’’ ‘‘நானே உங்களை நிறைய இடங்களில் பார்த்திருக்கேன்…’’

Image

 

‘‘நீங்க ஏன் அங்கே வர்றீங்க? ஏதோ நண்பர்களோடு ஜாலியா இருக்கத்தானே! நாள் முழுக்க ஷூட்டிங், வெளிச்சம், இறுக்கம், இன்னொரு கேரக்டரா வாழ்ந் திட்டு இருக்கிறது… இதுக்கெல்லாம் கொஞ்சம் விடுதலை, இப்படி வெளியே வர்றதுதான். அடுத்த நாளைக்கு என்னை ரெடி பண்ற விஷயம்தான். எங்க அப்பா, அம்மாவுக்கு என்னைத் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வீட்டிற்கு வந்து பிரியாணி சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. விஷால் ‘முணுக்’ன்னா இங்கே வந்திடுவான். அங்கே சாப்பாடு ரெடி ஆகலன்னா இங்கேதான் என்னோடு சாப்பிடுவான். இதையெல்லாம் எழுத மாட்டீங்க. ‘அனுஷ்காவோடு ஓட்டலுக்கு வந்தார்’னு மட்டும் பளிச் பளிச்னு எழுதுவீங்க…’’

‘‘அதெல்லாம் சரி… நீங்க கல்யாணம் செய்த பிறகுதான் தனக்குக் கல்யாணம்னு விஷால் சொல்றாரே?’’
‘‘அதெல்லாம் சும்மாங்க. அவன் ஒண்ணும் தெரியாத மாதிரி நடிப்பான். ஏகப்பட்ட ரகசியம் அவன்கிட்ட இருக்கு. நீங்க அடுத்த வாரமே கூட அங்க போகலாம். கொஞ்சம் ஆரம்பிச்சா, அவனே கொட்டிடுவான். ஆனால் ரொம்ப நல்லவன் தெரியுமா..? இப்ப பாருங்க, ‘பாண்டிய நாடு’ன்னு செம ஹிட் கொடுத்திட்டு ‘ஜம்’னு நிக்கிறான். அவன் இன்னும் சாதிப்பான்…’’
‘‘நீங்க பாலா படத்தில் நடிக்கப் போறீங்கன்னு பேச்சு இருந்தது..?’’

‘‘பாலா எப்பக் கூப்பிட்டாலும் உடனே ஒரு மேஜிக்குக்கு ரெடியா இருப்பேன். ‘சார்… ஏதாவது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க சார்…’னு மத்தவங்ககிட்ட கேட்கிற மாதிரி அவர்கிட்ட கேட்க முடியாது. அவரே நாம் தேவைன்னா கூப்பிடுவார். பாலா சார் வாத்தியார் மாதிரி. அவர் சொன்னதை நான் கேட்பேன். நாங்க இரண்டு பேரும் சேர்ந்தால், அதற்கான விஷயமும் பெரிசா இருக்கணும்னு இரண்டு பேருமே நினைப்போம். நான் எப்பவும் ரெடி. பாலா சார்தான் சசிகுமாரை வச்சு அடுத்த அதிரடிக்கு இறங்கிட்டாரே… இப்ப அவருக்கு கவனம் பூரா அதில்தானே இருக்கும்!’’
‘‘அனுஷ்கா கூட ‘இரண்டாம் உலகம்’ சமயம் அன்பு அதிகமாச்சுல்ல..?’’

‘‘வரும்ல. இருந்த இடம் அப்படி. கிட்டத்தட்ட 100 நாட்கள் ‘ஜார்ஜியா’ன்னு ஊர், பெயர் தெரியாத நாடு. சிட்டிக்கு ரொம்பத் தொலைவு, அடிக்கடி வெளியே வர முடியாது. கிட்டத்தட்ட அறுபது பேர்… 10 டென்ட் அவ்வளவுதான். எல்லோரும் ஒண்ணுமண்ணா சேர்ந்து இருப்போம். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டேதான் இருக்கணும். அசிஸ்டென்ட் டைரக்டரும், டைரக்டரும் ஒரே இடம்தான். நடிகைகள் எல்லோரும் ஒரே இடம்தான். நாமதான் ஒரு இடத்துல இருக்க மாட்டோமே… நல்லா பழகினோம். அது படத்திற்கு மட்டும் பயன்பட்டது. நீங்க ஆழமா கேள்வி கேட்குற அளவுக்கு அதில் ஒண்ணும் இல்லை பிரதர்!’’

‘‘அப்ப நயன்தாரா எபிஸோட் ஓவரா?’’
‘‘கல்யாணம் இல்லை சார்… மத்தபடி நட்பு எப்பவும் நிலைச்சு நிற்கும். இப்பதான் நயன்தாரா-ஆர்யா அலை அடிச்சு ஓய்ஞ்சு இருக்கு. நட்பில் இருக்கிற ஆனந்தம் காதலில் இருக்காது போல. எனக்கு அது நல்லாவே தெரியுது. பழகுவதற்கு நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணைப் பார்க்க முடியாது…’’
‘‘ஹன்சிகா-சிம்பு கல்யாணம் நடக்குமா ஆர்யா?’’

‘‘நான் ஹன்சிகாவோடு இப்ப நடிக்கலை. பேசவும் இல்லை. ஏதாவது சொல்லப் போய் சிம்பு கோபிச்சா என்ன ஆகறது? என்னைப் பத்திக் கேளுங்க, சொல்றேன்… அவங்க ஸ்பேஸ் அது… அதுல நாம் போய் தலையிடக் கூடாது. அவங்களே விரும்பி ஏத்துக்கிட்ட வாழ்க்கையைப் பத்தி நாம் கேள்வி கேட்கக் கூடாது… ஓகே!’’

– நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்

நீங்க லேப்டாப் வாங்க போறீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்…

Image

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப்டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும். 

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்…..

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்…

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM SPEED போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

யார் அறிவுஜீவி?

ஓர் இளம்நண்பர் என்னிடம் ஒரு வினாவைக் கடிதத்தில் எழுப்பியிருந்தார். ‘அறிவுஜீவி என்ற சொல்லை அடிக்கடி விவாதங்களில் பார்க்கிறேன். சென்ற பலவருடங்களாக நானும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமகாலச் செய்திகளை வாசிக்கிறேன். அரசியலைக் கவனிக்கிறேன். இலக்கியநூல்களை வாசிக்கிறேன்.. நான் என்னை ஓர் அறிவுஜீவியாகக் கொள்ளமுடியுமா?’

நான் அதற்குப்பதில் சொன்னேன். ‘’ஒருவர் தன்னை அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்வது அவரது விருப்பம். அந்த விருப்பம்தான் மெல்லமெல்ல அவரை அறிவுஜீவி ஆக்குகிறது’

’சரி, கேள்வியை மாற்றிக்கொள்கிறேன்.தமிழ்ச்சூழலில் ஒருவர் அறிவுஜீவி என்று கருதப்படவேண்டுமென்றால் அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்?’

எனக்கு அது சற்று இக்கட்டான வினாவாகப்பட்டது. ஏனென்றால் நான் இன்று நம் பொதுஅரங்கில் வந்து நின்றுபேசும் பலரை வெறும் அரசியல்வாதிகளாகவோ வெற்றுப்பேச்சாளர்களாகவோ மட்டும்தான் நினைக்கிறேன்..
‘என் நோக்கில் ஒரு குறைந்தபட்ச அளவுகோலைக்கொண்டிருக்கிறேன்; என்று அந்த நண்பருக்கு எழுதினேன். ‘அந்த அளவுகோல் உலகமெங்கும் வெவ்வேறு முறையில் செல்லுபடியாகக்கூடியதுதான்’

ஓர் அறிவுஜீவி வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போது அறிந்திருக்கவேண்டிய சில உண்டு. உலகவரலாற்றின் ஒரு சுருக்கமான வரைபடம் அவன் மனதில் இருக்கவேண்டும். ஐரோப்பாவின் வரலாற்றுக்காலகட்டங்களைப்பற்றியோ சீனாவின் மீதான மங்கோலியர்களின் ஆதிக்கக் காலகட்டம் பற்றியோ அவன் ஒன்றுமறியாதவன் என்றால் அவன் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை

அந்த வரைபடத்தில் பொருத்திப்பார்க்குமளவுக்கு அவனுக்கு இந்தியவரலாறு தெரிந்திருக்கவேண்டும். ராஜராஜசோழன் பதினெட்டாம்நூற்றாண்டில் முற்றிலும் மறக்கப்பட்ட மன்னராக இருந்தார் என்பதையோ, தக்காண சுல்தான்கள் ஷியாக்கள் என்பது அவர்களுக்கும் முகலாயர்களுக்குமான பூசலுக்கான முதற்காரணம் என்பதையோ ஆச்சரியத்துடன் கேட்குமிடத்தில் ஒருவன் இருப்பானென்றல் அவன் அறிவுஜீவியாகவில்லை.

அந்த வரைபடத்தின் ஒரு பகுதியாக தமிழகவரலாற்றைத் துல்லியமாகவே அவனறிந்திருக்கவேண்டும். தமிழகவரலற்றின் பாதிப்பங்கு இன்னமும் எழுதப்படாமலேயே உள்ளது என்றும், சேரர்களைப்பற்றிச் சில பெயர்களுக்கு அப்பால் ஏதும் தெரியாது என்றும், களப்பிரர்களைப்பற்றிய சைவர்களின் ஊகங்களே இன்னும் வரலாறாக எழுதப்பட்டுள்ளன என்றும் அவனறிந்திராவிட்டால் அவனால் தமிழகம்பற்றி எதையும் சொல்லமுடியாது.

ஆனால் வரலாற்றை அவன் வெறும் தகவல்களின் வரிசையாக அறிந்திருப்பானென்றால் அதனால் எந்தப்பயனும் இல்லை. வரலாற்றில் இருந்து பண்பாடு கிளைத்து வளரும் விதத்தைப்புரிந்துகொள்வதற்கான தத்துவமுறைகளில் அவனுக்குப் பரிச்சயமிருக்கவேண்டும். இன்றையசூழலில் வரலாற்றை மதிப்பிடுவதற்கான மிகச்சிறந்த ஆய்வுமுறை என்பது மார்க்ஸியநோக்குதான். அதாவது முரணியக்க பொருள்முதல்வாத அணுகுமுறை,

நர்மதையும் கோதாவரியும் உருவாக்கிய வண்டல் படுகைகளின் விளைச்சலின் உபரி காரணமாகத்தான் அப்பகுதியில் மக்கள்தொகை செழித்தது என்றும், அந்த மக்கள்தொகையே சாதவாகனரில் தொடங்கும் மாபெரும் தென்னகப்பேரரசுகளாகியது என்றும், அவர்களே தென்னிந்தியா முழுக்க பரவி அரசுகளையும் பெரும் குடியேற்றங்களையும் உருவாக்கினர் என்றும் விளங்கிக்கொள்ள முடியாதென்றால் ஒருவனால் வரலாறின் எப்பகுதியையும் விளக்கமுடியாது.

அப்படி பண்பாட்டையும் வரலாற்றையும் ஒன்றாகச்சேர்த்துப் புரிந்துகொள்ளும் ஒருவனால்தான் சமகால சமூகச்சூழலை விளங்கிக்கொள்ளமுடியும். ராயலசீமாவிலிருந்து குடியேறிய தெலுங்கு மக்கள் தமிழகத்தின் வரண்டநிலங்களை நிரப்பியதனால் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழக மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்ததை, அதன் விளைவாக இங்குள்ள ஒட்டுமொத்த சாதிச்சமூக அமைப்பே மாறியதை அவனால் புரிந்துகொள்ளமுடிந்தால் தமிழகத்தின் சமூகச்சூழலை எல்லா தளங்களிலும் விளக்க முடியும்.

அந்தச் சமூகச்சூழலின் ஒரு பகுதியாக இங்கே உருவான பண்பாட்டு மாற்றங்களை அவன் புரிந்துகொண்டால் மட்டுமே அவன் அறிவுஜீவி. முப்பதுகளில் பெருந்திரளான மக்கள் மூடுண்ட சாதியமைப்பில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு வந்து சிறுகுடும்பங்களாக ஆனதற்கும் சமைத்துப்பார் என்ற நூல்வரிசையை எழுதிய எஸ்.மீனாட்சி அம்மாள் லட்சாதிபதியானதற்குமான தொடர்பை அதைக்கொண்டுதான் அவன் புரிந்துகொள்ளமுடியும்

அவ்வாறு சமூகப்பரிணாமத்தின் ஒரு பகுதியாக அரசியலைப்புரிந்துகொண்டால் 1920 வெள்ளையர்காலத்தில் மாகாணசபைகளுக்கான முதல்பொதுத்தேர்தல் இங்கே நடத்தப்பட்ட காலம் முதல் ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான ரூபாய்களை ஏன் வேட்பாளர்கள் செலவிட்டுவந்தார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.அதன்வழியாக அந்த அரசியல் இன்று பூதாகரமாக மாறியிருப்பதை அவன் விளங்கிக்கொள்வான்

இவ்வாறு வரலாற்றிலிருந்து அரசியல் வரை அனைத்தையும் இணைக்கும் ஒரு காரணகாரியத் தர்க்கம் ஒருவனிடம் இருக்குமென்றால் அவன் இலக்கியத்தில் அதன் மிகநுட்பமான வடிவத்தைக் கண்டுகொள்ளமுடியும். க.நா.சு, தி,ஜானகிராமன் நாவல்களில் மளிகைவியாபாரிகள் சட்டென்று கோடீஸ்வரர்களாக ஆகும் சித்திரம் ஏன் வருகிறது என்று அவன் கவனிப்பான்..

சிலந்தி தன் உடலில் இருந்து நூலை எடுத்து வெவ்வேறு முனைகளை இணைத்து இணைத்து வலைபின்னுவதுபோல வரலாறு ,பண்பாடு, அரசியல் ,சமூகவியல், இலக்கியம் என அனைத்துத் தளங்களில் இருந்தும் தன் அடிப்படைச்சிந்தனைகளை தொட்டெடுத்து இணைத்துப் பின்னிக்கொண்டே செல்லும் ஒரு செயல்பாடு ஒருவனுக்குள் இருக்குமென்றால் மட்டுமே அவனை அறிவுஜீவி என்று சொல்லமுடியும்

அதற்குமேல் அரசியலிலோ இலக்கியத்திலோ அறிவியலிலோ அவனுக்கென தனிப்பட்ட மேலதிகத் திறமைகள் இருக்கலாம். அத்துறைகளில் அவன் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஒன்றுண்டு, ஒருவனின் தேர்ச்சி தன் துறைக்குள் மட்டுமே என்றால் அவன் ஒருபோதும் அறிவுஜீவி அல்ல.

அந்த சிந்தனை வலையை தன்னுள் கொண்ட ஒருவனின் எல்லா பேச்சுகளிலும் அதுவெளிப்படும். எந்தக்கருத்தையும் முன்வைக்கும்போதும் சரி எதிர்கொள்ளும்போதும் சரி ஒரு வரலாற்றுத்தர்க்கத்தை . பண்பாட்டு விளக்கத்தை அவன் முன்வைப்பான். எந்த ஒரு வினாவும் அவனுடைய சிந்தனைகளை விரித்துக்கொள்ளவே அவனுக்கு உதவும்.

ஆகவே ஓர் அறிவுஜீவி எந்நிலையிலும் புதியசிந்தனைகளை வரவேற்பவனாகவே இருப்பான். எந்தப்புதிய கருத்தும் ஏதோ ஒரு வாசலைத் திறக்கக்கூடியது என அவன் அறிந்திருப்பான். நேற்று அபத்தமாக, ஆபத்தானவையாக கருதப்பட்ட எத்தனையோ கருத்துக்கள் காலப்போக்கில் சிந்தனையின் பகுதியாக ஆகிவிட்டிருப்பதை அவன் அறிந்திருப்பான். புதியகருத்துக்களால் சீண்டப்படாதவனாகவும் அவற்றால் மிகையாக உற்சாகம் கொள்ளாதவனாகவும் இருப்பதே ஓர் அறிவுஜீவிக்கான முதல்தகுதி என்று சொல்லமுடியும்.

உணர்ச்சிவசப்படுவதும் சரி, உணர்ச்சிகளுடன் உரையாடுவதும் சரி, உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதும் சரி ஒருபோதும் அறிவுஜீவிகளின் வேலையாக இருக்கமுடியாது. அது வரலாறெங்கும் அரசியல்வாதிகளின் வேலையாகவே இருக்கிறது. அறிவுஜீவி சிந்தனையின் தொடக்கத்தை நிகழ்த்தக்கூடியவன் மட்டுமே. ஆகவே திட்டவட்டமாக தர்க்கத்தின் வழியையே அவன் தேர்ந்தெடுப்பான். தர்க்கம் ஒருபோதும் உணர்ச்சியின் மொழியில் அமைந்திருக்காது.

அனைத்துக்கும் மேலாக அறிவுஜீவியை பன்மையாக்கக்கூடியவன், கலைத்துக்கொண்டே இருக்கக்கூடியவன் என்று சொல்லலாம்.எந்த கேள்விக்கும் ஒற்றைப்படையான எளிய பதிலைச் சொல்ல அவனால் முடியாது.வரலாற்றையும் பண்பாட்டின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு அவன் பதில்சொல்வான் என்றால் அந்தப்பதில் ஒன்றிலிருந்து ஒன்றாக முளைத்து பலவற்றைத் தொட்டு விரிவதாகவே இருக்கும். ஆகவே குவிப்பதல்ல விரிப்பதே அறிவுஜீவியின் வேலை. கோஷங்களை உருவாக்குவதல்ல கோட்பாடுகளை நோக்கிக் கொண்டுசெல்வதே அவனுடைய சவால்.

அந்தப் பணியை ஏற்றுக்கொண்ட அறிவுஜீவி ஒருபோதும் மக்களுக்குப் பிரியமானவற்றைச் சொல்லக்கூடியவனாக இருக்கமாட்டான். ஏனென்றால் மக்கள் ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்தவற்றையும் அவர்கள் நம்புபவற்றையும் கேட்கவே பிரியப்படுகிறார்கள். புதியவற்றைச் சொல்வதனாலேயே அறிவுஜீவிகள் என்றும் மக்களின் நிம்மதியைக் குலைப்பவர்களாக, அவர்களைக் கொந்தளிப்படையச்செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்தியாவின் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அறிவுஜீவிகள் பத்துபேரை எடுத்துக்கொண்டால் நான் இப்படிப்பட்டியலிடுவேன். விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், அவனீந்திரநாத் தாகூர், காந்தி, அம்பேத்கர், எம்.என்.ராய், டி.டி.கோசாம்பி, ஜே.சி.குமரப்பா, தாராசங்கர் பானர்ஜி, சிவராம காரந்த். அவர்களைக் கற்றிராத ஒருவர் அறிவுஜீவி என்று இன்று சொல்லிக்கொள்ளமுடியாது.

[தி இந்துவில் வெளியான கட்டுரை ]

சமூகத்துக் பயன்படும் வகையில் இருப்பவனே புறம்போக்கு! : ஜனநாதன் புது வாய்ஸ்

சமூகத்துக் பயன்படும் வகையில் இருப்பவனே புறம்போக்கு! : ஜனநாதன் புது வாய்ஸ்Image

தமிழ் சினிமாவில் தரமான படைப்பாளி எஸ்.பி.ஜனநாதன். வெறும் பொழுதுபோக்கு பூச்சாக இல்லாமல் சமூக அக்கறையுடன் கதை சொல்பவர். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனிக்கும் படிப்பாளி. ஆனால், எதுவும் தெரியாதவர் போன்ற எளிமை, அவரின் ப்ளஸ். அடுத்த படைப்பான ‘புறம்போக்கு’ பட வேலையில் இருந்தவரை சந்தித்தோம்… 
‘‘எல்லாருமே எங்கிட்ட கேட்கணும்னு நினைக்கிற முதல் கேள்வி, ‘ஏன் இந்த இடைவெளி’ என்பதுதான். நல்ல கதைக்காக காத்திருந்தேன் என்று பொய் சொல்ல மாட்டேன். ‘இயற்கை’ படம் முடிச்சிட்டு கடைசியா 500 ரூபாய் மிச்சமிருந்தப்பதான் ஜீவாவுக்கு கதை சொல்லி, ‘ஈ’ படம் பண்ணினேன். அந்தப் படம் ரிலீசாகி நல்லா ஓடியும் என் கையில பத்து பைசாகூட இல்லாத நிலையில்தான் ‘பேராண்மை’ பண்ணினேன். படம் பெரிய வெற்றி அடைந்ததும் நிறைய பேர் படம் பண்ணச் சொல்லி கேட்டாங்க. நான்தான் பொறுப்பே இல்லாம இருந்துட்டேன். 

 

இடையில் இயக்குனர் சங்கப் பொறுப்பை ஒழுங்கா செய்யணுமேன்னு அதிலேயே கவனமா இருந்துட்டேன். படங்களில் இடைவெளி எடுத்துக்கிட்டாலும் எல்லா படத்தையும் குறிப்பிட்ட நாட்களில் எடுத்திருக்கேன். சினிமாதான் என் தொழில் என்பதை தாமதமாகத்தான் உணர்ந்திருக்கேன். இனி இடைவெளி இருக்காது…’’

‘‘அதென்ன ‘புறம்போக்கு’?’’
‘‘சென்னை வாசிகள் திட்டுவதற்கு பயன்படுத்தும் ‘புறம்போக்கு’ வார்த்தை இல்லை இது. புறம்போக்கு என்பது நல்ல சொல். தமிழ் நாகரிகத்தில் 15க்கும் மேற்பட்ட புறம்போக்குகள் இருக்கிறது. ஏரி புறம்போக்கு, வெட்டியான் புறம்போக்கு, ஆற்று புறம்போக்கு, சுடுகாட்டு புறம்போக்கு என்று மக்களுக்கு அத்தியாவசியமான இடம்தான் புறம்போக்கு. அந்த வகையில் இந்த சமூகத்துக்குப் பயன்படும் வகையில் இருப்பவனை நான் புறம்போக்கு என்றே கருதுகிறேன். படத்தில் இரண்டு நாயகர்கள். ஆர்யா சமூகப் போராளியாகவும் விஜய்சேதுபதி ரயில்வே கலாசியாகவும் வருகிறார்கள். இந்த இருவரையும் இணைக்கும் ஒரு சூழ்நிலையும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களுமே கதை. சென்னைதான் கதைக்களம் என்றாலும் வெளியிலும் டிராவல் ஆகும். இதற்காக குளு மணாலி, ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், பொக்ரான் என்று நிறைய லொகேஷன் பார்த்து வந்திருக்கிறேன்.’’Image

‘‘அப்படியானால் நில அபகரிப்புதான் படத்தின் பிரதானமாக இருக்குமா?’’
‘‘நில அபகரிப்பு என்பது ஒரு குறுஞ்செய்திதான். உலகம் முழுவதும் மக்களை புழு, பூச்சிகளைப் போல எள்ளல் செய்யும் அரசியல், கண்ணுக்குத் தெரியாமலே நடக்கிறது. நான் எடுக்கும் படங்களில் இருப்பது கதை என்பதை விட நான் எழுதும் கட்டுரை என்றே சொல்வேன். அதில் நிறைய செய்திகள் இருக்கும். அதை எல்லோரும் ரசிக்கும்படியான கலை வடிவத்தில் தர முயற்சிக்கிறேன். ‘ஈ’யில் மக்களை பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்துவதையும் ‘பேராண்மை’யில் வேறொரு அரசியலையும் சொல்லியிருந்தேன். அதுபோல, ‘புறம்போக்கு’ படத்தில் நில அபகரிப்பு ஒரு பகுதியாகத்தான் இருக்கும். நம் வீட்டில் சின்னதாக நடக்கும் ஒரு பிரச்னைக்கும் சர்வதேச அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதனை என் பார்வையில் மக்களுக்கு சொல்வதைத்தான் என் ஃபார்முலாவாக நினைக்கிறேன்…’’

‘‘முதலில் ஜீவா, ஜெயம் ரவி நடிப்பதாகத்தானே இருந்தது..?’’
‘‘ ‘இயற்கை’ படம் பண்ணும்போது எனக்கும் ஷாமுக்கும் ஒத்துப்போகவில்லை. நான் எடுப்பது படமா என்கிற சந்தேகம் கூட அவருக்கு இருந்திருக்கலாம். படம் முடியும் சமயத்தில்தான் புரிதல் வந்தது. புரிதல் இருந்திருந்தால் அந்தப் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். ‘ஈ’யில் ஜீவாவுடன் ஒத்து வரலை. பாதி படத்துக்கு மேல்தான் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். ‘பேராண் மை’யிலும் கடைசி நேரத்தில்தான் ரவிக்கும் எனக்கும் ஒத்துப்போனது. ஒரு படத்துக்கு ஹீரோ – ஹீரோயின் கெமிஸ்ட்ரி மட்டுமில்லை… இயக்குனர் – ஹீரோ கெமிஸ்ட்ரியும் முக்கியம். 

ஏற்கனவே ஜெயம் ரவி, ஜீவாவை வைத்து படம் பண்ணியதால் அவர்கள் என்னைப் புரிந்துகொள்வார்கள் என்பதால் அவர்களை வைத்து இயக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், ரெண்டு பேருக்குமே அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. நண்பர்களும், ‘வேற ஹீரோக்கள் பண்ணினால் புது சாயல் கிடக்கும்’ என்றார்கள். அதன் பிறகுதான் முடிவை மாற்றினேன். ஆர்யா, ‘பேராண்மை’யிலேயே நடிக்க வேண்டியது. ‘நான் கடவுள்’ தேதிகளால் அது முடியாமல் போனது. இருவரும் நடிக்கும் படங்களும் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்திருக்கிறது. இந்த இருவரும் சேர்ந்து நடிப்பது படத்துக்குப் பெரிய பலமாக இருக்கும்.’’

Image

‘‘ஆர்யா என்றாலே கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு இருக்குமே?’’
‘‘ஏன், அவருக்கேகூட இருக்கு. ‘சீக்கிரமா ஹீரோயினை கண்ணுல காட்டுங்க சார்’ என்கிறார். விஜய்சேதுபதியும் கேட்டுட்டு இருக்கார். படத்தில் ஒரு ஹீரோயின்தான். அது யார் என்று இன்னும் முடிவு பண்ணல. நடிக்கத் தெரிந்த… அதே சமயம், கிளாமரான கதாநாயகியாகத்தான் இருப்பார். தொடாமலே காதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. காதல் என்பது உடல் சார்ந்ததும்தான். பெண் உடலை ஆண் ரசிப்பதும், ஆண் உடலை பெண் ரசிப்பதும் யதார்த்தமே. இதைப் புரிந்த நிலையில், நான் விரசம் இல்லாத காட்சிகளையே எடுக்கிறேன். மீண்டும் என்னுடன் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் இணைகிறார். ‘இயற்கை’ படத்துக்காக ஒரே ஒரு ஓட்டில் அவருக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது. அவரது பங்கும் படத்துக்கு பலமாக இருக்கும். ‘புறம்போக்கு’ மக்கள் ரசனைக்கும் அறிவுக்கும் தீனியாக இருக்கும்!’’

– அமலன்
படங்கள்: புதூர் சரவணன்

அடுத்தடுத்து 2 படங்களில் ஜோடி நடிகை லட்சுமி மேனனுடன் திருமணமா

Image

சென்னை,

தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த பாண்டிய நாடுபடத்தில், விஷால்-லட்சுமி மேனன் இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து விஷால் அடுத்து நடிக்கப்போகும் நான் சிகப்பு மனிதன்படத்திலும் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

பேட்டி

பாண்டிய நாடுபடம் வெற்றிகரமாக ஓடுவது பற்றி விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் லட்சுமிமேனனும் கலந்து கொண்டார். இருவரும் திருமண கோலத்தில் ஜோடியாக நிற்பது போன்ற கட் அவுட்,அவர்களுக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்தது.

அதைப்பார்த்ததும் நிருபர்கள் விஷாலிடம்,லட்சுமி மேனனை திருமணம் செய்து கொள்ளப் போவதற்கு அடையாளமாக இந்த கட் அவுட் வைக்கப்பட்டிருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து விஷால் கூறியதாவது:

திருமணம் இல்லை

எனக்கும், லட்சுமி மேனனுக்கும் அப்படி எந்த திட்டமும் இல்லை. போட்டோ லட்சுமிகரமாக இருந்ததால், இந்த கட் அவுட் வைக்கப்பட்டது. நான் இன்னும் திருமணத்துக்கு தயாராகவில்லை. திருமணத்துக்கான முதிர்ச்சி இன்னும் எனக்கு வரவில்லை.

சினிமாவுக்கு வரும்போது, டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன்தான் வந்தேன். எதிர்பாராமல், செல்லமேபடத்தில் நடிகர் ஆகிவிட்டேன். அதுவே நிரந்தரமாகி விட்டது. பாண்டிய நாடு,நான் தயாரித்த முதல் படம். அது வெற்றிகரமாக ஓடுவது சந்தோஷமாக இருக்கிறது. மேலும் 72 தியேட்டர்களில் படத்தை திரையிட்டு இருக்கிறார்கள். என் சினிமா வாழ்க்கையில், பாண்டிய நாடுமுக்கியமான படமாகி விட்டது.

மீண்டும்…

மீண்டும் சுசீந்திரன் டைரக்ஷனில் ஒரு படம் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். விக்ராந்தை வைத்து ஒரு படம் தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.

பாரதிராஜா கூறும்போது,1964-ல் நடிகனாக வேண்டும் என்றுதான் சென்னை வந்தேன். ஆனால் டைரக்டராகி விட்டேன். கல்லுக்குள் ஈரம், ரெட்டை சுழி ஆகிய படங்களில் நடித்த பின், இனிமேல் நடிக்கவே கூடாது என்று ஒதுங்கி இருந்தேன். சுசீந்திரன் ஒரு யதார்த்தமான டைரக்டர். அவர் வற்புறுத்தி பாண்டிய நாடுபடத்தில் நடிக்க வைத்தார். என் நடிப்பை நிறைய பேர் பாராட்டுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்றார்.

நன்றி – தினத்தந்தி